தொகுப்புகள் - தற்போதைய இடுகைகள்

திருக்குறள் ஒலி(ஆடியோ) வடிவில்...

Saturday 26 April, 2014

ATM உருவான கதை:

இயந்திரம் ஒவ்வொன்றுக்கும் வரலாறு உண்டு. ஏ.டி.எம். (Automatic Teller Machine) உருவான கதை கூட சுவாரஷ்யமானது. ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த ஜோன் ஷெப்பர்ட் பேரோன் தன் மனைவிக்குப் பரிசளிக்க விரும்பி பணத்தை எடுக்க வங்கியில் வரிசையில் நின்றார். தனது முறை வந்த போது பணத்தைக் கொடுக்க வேண்டிய காசாளர், நேரம் முடிந்து விட்டது என்று கவுன்டரை பூட்டி விட்டுச் சென்றுவிட்டார். ஜோன் வெறுங்கையோடு மனைவியைப் பார்க்க விரும்பவில்லை. 


கையில் இருந்த சொற்ப சில்லறையை வைத்து, கொஞ்சம் சாக்லெட்டுகளை வாங்கிக் கொடுத்து மனைவியை சமாதானப்படுத்தலாம் என்று நினைத்து சாக்லேட் வெண்டிங் இயந்திரத்தைத் தேடிச் சென்றார். அப்போதைக்கு அவர் மனைவியை சமாதானப்படுத்தினாலும், பூட்டிய வங்கிக் கவுண்டரும், காசு போட்டால் உதிர்ந்த சாக்லேட்களும் அவர் மனதில் மீண்டும் மீண்டும் வந்து போயின. அதன் விளைவுதான் முதல் ஏ.டி.எம். உருவாக வித்திட்டது.

1969இல் இவர் உருவாக்கிய முதல் ஏ.டி.எம். வடக்கு லண்டனின் பார்க்லேஸ் வங்கியில் வைக்கப்பட்டது. அதிலும் ஒரு சிக்கல். ஜோனின் மனைவியால் அப்போதைய ஏ.டி.எம். அட்டைக்கான ஆறு இலக்க குறியீட்டை(Pin Number) ஞாபகம் வைத்துக் கொள்ள முடியவில்லை. உடனே செயலில் இறங்கிய ஜோன், அதை நான்கு இலக்கங்களாகக் குறைத்தார். ஏ.டி.எம். தற்போது ஏராளமான மாற்றங்களைக் கண்டு விட்டாலும், அதற்கெல்லாம் அடிப்படையாக இருந்தது ஜோனின் காதல்தான்!

Wednesday 23 April, 2014

பாரத ரத்னா சச்சின் டெண்டுல்கர்:





1.சச்சின் ஆசைப்பட்டது டென்னிஸ் ஆட. மரத்தில் இருந்து வால்த்தனம் செய்ததற்கு தண்டனையாகத்தான் கிரிக்கெட் பக்கம் அனுப்பப்பட்டார்.


2.சச்சினுக்கு மிகவும் பிடித்த உணவு வடாபாவ். சின்ன வயதில் யார் அதிகம் வடா சாப்பிடுவது என்கிற போட்டியில் சச்சினே ஜெயிப்பார். அடிக்கடி பிள்ளைகளை சண்டைக்கு இழுப்பதும் உண்டு.

3.தவளை பஜ்ஜி செய்து தரச்சொல்லி குறும்புகள் செய்த நாயகன்.

4. சச்சினின் டென்னிஸ் ஆதர்சம் மெக்கன்ரோ, கிரிக்கெட்டில் சுனில் கவாஸ்கர்.

5.ரஞ்சி, துலிப், இரானி போட்டிகளில் அடித்த சதங்கள் இந்தியா அணிக்குள் இடம் பெற்றுத்தந்தது.

6 .சச்சின் தேவ் பரமன் எனும் இசைகலைஞரின் நினைவாக தந்தையால் அந்த பெயர் சூட்டப்பட்டது

7.சச்சின் இளம் வயதில் உள்ளூர் போட்டிகளில் கலக்கிக்கொண்டு இருக்கும்போது சுனில் கவாஸ்கர் தன்னை பாராட்டி எழுதிய கடிதத்தை இன்னமும் பாதுகாக்கிறார்.

8. பாகிஸ்தான் தொடரில் வாக்கரின் பந்தில் மூக்கில் ரத்தம் கொட்ட வெளியேறி, பின் திரும்பி வந்து பவுண்டரிகளை விளாசியபோது, உலக கிரிக்கெட் சச்சினை உற்றுநோக்க ஆரம்பித்தது

9.முதல் சதம் அடிக்கும் வாய்ப்பை சச்சினிடம் இருந்து நியூசிலாந்து அணியின் நபர் ஒருவர் காட்ச் பிடித்து தட்டிப் பறித்தார். அவர்தான் பின்னாளைய கோச் ஜான் ரைட்.

10.ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக உலக அளவில் அதிகபட்ச தாண்டவம் சச்சினுடையது. அதிலும் ஷேன் வார்னே இவர் கையில் சிக்கிக்கொண்டு பட்ட பாடு உலக பிரசித்தி.

11.குரு ராம்காந்த் அச்ரேகரின் மீது சச்சினுக்கு பிரியம் அதிகம். அவர் கொடுத்த ஒற்றை ரூபாய் நாணயங்களை தொலைத்ததற்காக ஏகத்துக்கும் வருந்தி இருக்கிறார்.

12. சச்சினுக்கு மனக்கட்டுப்பாடு அதிகம். கவர் டிரைவ் ஷாட்டில் தொடர்ந்து அவுட் ஆக, 241 ரன்கள் அடித்தபோது ஒரு கவர் டிரைவ் ஷாட் கூட அடிக்கவில்லை

13.மூப்பத்து மூன்று வயதில் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்தார். மன மற்றும் உடல் ஒருங்கிணைவை வீழச்செய்யும் சாம்பர்க் விளைவு காரணம். அதை விட்டு வெற்றிகரமாக மீண்டார்.

14. கிரிக்கெட்டில் கண்கலங்கிய தருணங்கள் முக்கியமாக மூன்று. அப்பாவின் மரணத்திற்கு பின் சதம் அடித்தபோது; எண்டுல்கர் என டைம்ஸ் ஆப் இந்தியா குறித்தபோது; உலகக்கோப்பை வெற்றியின்போது! ஒவ்வொரு சதத்தின்போதும் வானை நோக்கி வணக்கம் சொல்வது தந்தைக்கு.

15.சச்சின் ஆட ஆரம்பித்து கோடிகளில் புரள ஆரம்பித்த பிறகும் தன் எளிய வேலையை விட்டுவிடாத தன் அம்மா, தன் எளிமைக்கான ஆதர்சம் என்பார்.

16.பெடரர், ஷுமாக்கர், ஹாரி பாட்டர் புகழ் ரட்க்ளிப்ப் சச்சினின் ரசிகர்களில் சிலர்.

17. "சச்சினுக்கு பந்து போட நான் ஹெல்மெட் அணிந்து கொள்ள வேண்டும்; மட்டையில் இவ்வளவு ஆற்றல் இவரிடம் உள்ளது" - அவரின் பதினாறு வயதில் அவருக்கு பந்து போட்ட பின் டென்னிஸ் லில்லி சொன்னது.

18. பட்டோடிக்கு அடுத்தபடியாக மிக இளம் வயதில் (23) இந்திய கிரிக்கெட் கேப்டன் ஆனார். சொந்த மண்ணில் வெற்றிகளைப் பெற்றாலும், வெளிநாடுகளில் இவர் தலைமையிலான அணி பல தோல்விகளைக் கண்டதால், தானாகவே கேப்டன்பொறுப்பில் இருந்து விலகினார்.

19. உலக அளவில் மட்டுமல்ல; ஐ.பி.எல்.லிலும் அதிகபட்ச பவுண்டரிகள் இவர் வசம்தான்.

20. விமர்சனங்களுக்கு பதில் சொல்வதை பெரும்பாலும் தவிர்ப்பார். எனினும் சச்சினின் கிரிக்கெட்டின் மீதான காதலை குறைத்து கிரேக் சாப்பல் பேசியபோது மட்டும் நெடிய பதில் சொன்னார். அப்பொழுதும் அவர் அப்படி சொல்லி இருந்தால் மட்டுமே இந்த பதிலை கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள் என்றார்.

21. இந்திப் பின்னணிப் பாடகர் கிஷோர் குமாரும் இங்கிலாந்து ராக் இசைக்குழு ‘டைர் ஸ்ட்ரெயிட்ஸ்’ம் சச்சினுக்கு பிடித்தவர்கள். பிடித்த நூல் காரி சோபர்ஸ் அவர்களின் 'TWENTY YEARS AT THE TOP!'

22.கவுண்டி போட்டிகளில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்ட முதல் வெளிநாட்டு வீரர் இவர்தான்.

23. சென்டிமென்ட்டுகளை அதிகம் நம்புபவர். கிரிக்கெட் என்றால் 10-ஆம் நம்பர் ஜெர்சி இல்லாமல் விளையாடமாட்டார். அவரது அனைத்துக் கார்களின்
நம்பரும் 9999-தான்.

24. இரட்டை சதம் அடித்தபோது யார் பாதிக்கப்படர்களோ இல்லையோ, கிரிக்இன்போ கிராஷ் ஆனது.

25. எந்தப் போட்டியும் தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே, பெவிலியனில் இருந்து பிட்ச் வரை நடந்து திரும்புவார் சச்சின்.

26. சச்சினின் மொபைலில் இருந்து யாருக்கு எஸ்.எம்.எஸ். வந்தாலும், 'தேங்க்ஸ் அண்ட் லவ் சச்சின்’ என்பதே இறுதி வரியாக இருக்கும்.

27.மதுபான விளம்பரங்களில் நடிக்க மறுத்து, நாட்டின் இளைஞர்கள் மீதான அக்கறையை அழுத்தமாக சொன்னவர். தன்னை சட்டை இல்லாமல் படம் எடுப்பதை கூட அனுமதிக்காதவர். தன்னை ஒழுக்க சீலராக பார்க்கும் இளைஞர்கள் தவறாக எடுத்துக்கொள்வார்கள் என்றார்.

28. விளையாடப் போவதற்கு முன்னால் தன்னுடைய இடது பக்க பேடைத்தான் முதலில் அணிவார். ஆடப்போகும் பிட்ச்சில் முன்னரே ஒரு நடை நடந்துவிட்டு வருவார் போட்டிக்கு முன்னர் இசைக்கேட்பது எப்பொழுதும் பழக்கம்

29. தன் ஹெல்மெட்டில் தேசிய கொடியை முதலில் அணிந்த வீரர்; வெளியே மாறுவேடத்தில் போகிற பழக்கம் உண்டு. ரோஜா படத்துக்கு போய், விக் கழன்று விழுந்து பெரிய ரணகளம் ஆனது. மும்பை தாக்குதலுக்கு பிறகு மாறுவேடம் நின்று போனது.

30. நூறாவது சதம் அடித்ததும் "நான் கடவுள் இல்லை; நான் சச்சின் !"என்றார்

31. 1988ல் பிராபோர்னேவில் நடந்த போட்டியில், பாகிஸ்தானுக்காக, இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் பயிற்சிப் போட்டியில் ஃபீல்டிங் செய்திருக்கிறார். அடுத்த வருடம் வான்கடேவில் இந்தியாவுக்கும் ஜிம்பாப்வேக்கும் நடந்த உலகக்கோப்பைப் போட்டியில் ‘பால் பாய்’ஆக பணியாற்றியிருக்கிறார்.

31. அப்னாலயா என்கிற அமைப்பில் உள்ள எல்லா ஆதரவற்ற குழந்தைகளின் வளர்ப்புத்தந்தை சச்சின்தான்.

32.பிராட்மன் “தன்னைப்போலவே ஆடுகிறார். சச்சின் என் மகன் போன்றவர்” என சிலாகித்து சொன்னார்.

33. பிராட் ஹாக் தன் விக்கெட்டை எடுத்த பின், அந்த பந்தில் கையெழுத்து வாங்கியபோது ‘இது மீண்டும் நடக்காது’ என எழுதி தந்தார். அது அப்படியே நடக்கவும் வைத்தார் (பத்து போட்டிகளுக்கு பிறகும்).

34. ஆஸ்திரேலியாவில் சச்சினுக்கு ரசிகர்கள் அதிகம்! சச்சினின் பெயரில் ஒரு தெரு உள்ளது. சச்சின் ஆட வரும்போது அனைவரும் எழுந்து நின்று கைதட்டுவார்கள். அங்கே பல

குழந்தைகளுக்கு சச்சின் என்கிற பெயர் உண்டு.

36. சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பதினெட்டு வயதில் 148 அடித்து கலக்கி எடுத்தார் சச்சின். ''சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் சதம் அடிப்பதே சாதனை. அதை 18 வயதுச் சிறுவன் செய்வதைப் பார்த்தபோது ஏதோ அதிசயம் நடப்பதைப் போல உணர்ந்தேன்!'' என்று சொன்னார் ஆலன் பார்டர்.

37. ஓயாத வெற்றிக்கான காரணம் என்ன என கேட்டபோது, "பேயை போல பயிற்சி செய்யுங்கள், தேவதையை போல ஆடுங்கள்!" என்றார்

38. பல முதன்முதல்களை வைத்து இருக்கும் சச்சின்தான், முதன்முதலாக தேர்ட் அம்பையர் கையால் அவுட் ஆனார்.

37. சவுரவ் கங்குலியின் அறை தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது; சச்சின்தான் ஹோஸ் பைப்பை குழாயோடு இணைத்து இதைச்செய்தார். அதிலிருந்து, சச்சின், கங்குலியை ‘பாபு மோஷல்’ என்று அழைப்பார். கங்குலி, சச்சினை ‘சோட்டா பாபு’ என்று அழைப்பார்.

39. மும்பை தாக்குதலுக்கு பின், சென்னையில் அடித்த சதம் அதிக பட்ச வலிக்கு நடுவே அடித்த மறக்க முடியாத சதம் என்றார்.

40. நீங்கள் உங்கள் தவறுகளை சச்சின் ஆடும்போது செய்யவும். கடவுளும் கவனிக்கமாட்டார். ஏனெனில் சச்சின் ஆடுவதை அவர் பார்த்துக்கொண்டு இருக்கிறார் அல்லவா?’ - மெல்பர்ன் நகரில் உள்ள வாசகம்.

41.சச்சினுக்கு ஒரு போட்டியில் பதினெட்டு வயதுக்குள் சதமடித்ததுக்கு ஆட்ட நாயகன் விருதோடு ஷாம்பெயின் பாட்டில் பரிசாக தரப்பட்டது. இந்திய விதிகளின்படி பதினெட்டு வயதுக்கு கீழே இருக்கும் பிள்ளைகளை அதை பயன்படுத்தக்கூடாது. சச்சின் அதை திறக்காமல் வைத்திருந்து தன் மகளின் முதல் பிறந்தநாளின் பொழுது அன்போடு திறந்தார். தன்னுடைய பெராரி காரின் மீது தீராக்காதல். அதை அஞ்சலியை கூட ஓட்ட விடமாட்டார் சச்சின்

42. "நீ நன்றாக ஆடினாய் சச்சின் !” என்று தட்டிக்கொடுக்காமல் என்றைக்கும் தன்னுடைய மாணவனுக்கு தலைக்கனம் ஏற்படக்கூடாது என்று மவுனம் காத்த இன்றைக்கு மட்டும் ஆட்டத்தை ஆடுகளத்தில் காண வந்த அச்ரேக்கர் அமைதியாகநிற்கிறார். “என் ஆசானே ! இப்பொழுது நான் நன்றாக ஆடினேன் என்று சொல்லுங்கள். இனிமேல் நான் ஆட ஆட்டங்கள் இல்லையே !” என்று அந்த குரலில் தான் எத்தனை வலி ?. பாரத ரத்னா விருதைப்பெற்றதும்...

Thursday 17 April, 2014

நவகிரகங்களை ஒரே நாளில் சுற்றிப்பார்ப்பது எப்படி?

தமிழ்நாட்டில் திங்களூர் (சந்திரன்), ஆலங்குடி (குரு), திருநாகேஸ்வரம் (ராகு), சூரியனார் கோவில் (சூரியன்), கஞ்சனூர் (சுக்கிரன்), வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய்), திருவெண்காடு (புதன்), கீழ்பெரும்பள்ளம் (கேது), திருநள்ளாறு (சனி) என்று ஒன்பது கிரகங்களுக்கும் கோயில் உள்ளது. இவை அனைத்தும் கும்பகோணத்துக்கு அருகிலேயே, அந்நகரை சுற்றி அமைந்திருக்கின்றன. எனவே சரியான முறையில் திட்டமிட்டால் எல்லா ஸ்தலங்களையும் ஒரே நாளில் சுற்றிப்பார்த்து விடலாம். 

1. திங்களூர் (சந்திரன்):
நவகிரக ஸ்தலங்களில் நீங்கள் முதலில் பார்க்கவேண்டியது திங்களூர்தான். நீங்கள் பேருந்தில் செல்ல விரும்பினால் கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து திங்களூர் செல்வதற்கு நிறைய பேருந்துகள் உள்ளன. இதன் மூலம் பாபநாசம், ஐயம்பேட்டை வழியாக 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திங்களூரை சுமார் 1 மணி நேர நேரத்தில் அடைந்து விட முடியும். இதற்கு சரியாக காலை 5.30 மணிக்கெல்லாம் கும்பகோணத்திலிருந்து நீங்கள் கிளம்ப வேண்டும். பின்னர் திங்களூர் கைலாசநாதர் கோயிலில் சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு 7 மணிக்கு கும்பகோணம் கிளம்பலாம். 


2. ஆலங்குடி (குரு) : 
கும்பகோணத்தில் காலை உணவை முடித்துக்கொண்டு 8.30 மணிக்கெல்லாம் ஆலங்குடி கிளம்ப வேண்டும். கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து ஆலங்குடி செல்ல எண்ணற்ற பேருந்துகள் கிடைக்கின்றன. அதோடு கும்பகோணத்திலிருந்து 17 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆலங்குடியை 30 நிமிடத்தில் அடைந்து விடலாம். பின்னர் ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் 30 நிமிடங்களுக்குள் சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு 9.30 அல்லது 9.45 மணியளவில் கும்பகோணத்திற்கு திரும்பலாம். 


3. திருநாகேஸ்வரம் (ராகு) : 
கும்பகோணத்திற்கு வெகு அருகிலேயே 6 கிலோமீட்டர் தொலைவில் திருநாகேஸ்வரம் அமைந்திருப்பதால் 10 அல்லது 15 நிமிடங்களில், 10.45 மணியளவில் திருநாகேஸ்வரம் ராகு கோயிலை அடைந்து விட முடியும். நாகநாதசுவாமி ஆலயம் 100 தூண்களை கொண்ட பெரிய கோயில் என்பதால் தரிசனம் செய்து முடிக்க 30 நிமிடங்களுக்கு மேல் ஆகும். பின்னர் 11.15 மணிக்கு கும்பகோணம் திரும்ப வேண்டும். 


4. சூரியனார் கோவில் (சூரியன்) : 
சூரியனார் கோவில் கும்பகோணத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. எனவே நீங்கள் 11.45-க்கு புறப்பட்டால் கூட 12.15 மணிக்கெல்லாம் சூரியனார் கோவிலை அடைந்து விடலாம். சூரியனார் கோவிலில் உள்ள சிவசூரியநாராயண கோவில் மற்ற நவகிரக கோயில்களை போல் அல்லாமல் சூரியனை முதன்மையாக கொண்டு நவக்கிரகங்களுக்கென தனித்து அமைந்த கோயில் எ‌ன்ற சிறப்பை பெற்றுள்ளது. இங்கு சூரிய பகவானை தரிசித்து முடித்தவுடன் 12.45 மணிக்கெல்லாம் கஞ்சனூர் கிளம்ப வேண்டும். 


 5. கஞ்சனூர் (சுக்கிரன்): 
சூரியனார் கோவிலிலிருந்து கஞ்சனூர் 5 கிலோமீட்டர் தொலைவிலேயே அமைந்திருப்பதால் பேருந்து அல்லது கார் மூலமாக 10 நிமிடங்களில் கஞ்சனூரை அடைந்து விடலாம். எனவே 1 மணிக்கு முன்பாகவே உங்களால் அக்னீஸ்வரர் ஸ்வாமி கோவிலுக்கு சென்று விட முடியும். அதோடு 1.15 மணியளவில் கோயில் நடை சாத்தப்பட்டுவிடும் என்பதால் கால் மணி நேரத்திற்குள்ளாக சுவாமி தரிசனத்தை முடித்துக்கொள்ளவேண்டும். 


6. வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய்) : 
நவகிரக கோயில்கள் அனைத்திலுமே 1.15 மணிக்கு நடை சாத்தப்பட்டால் பின்பு 4 மணிக்கே கோயில் கதவுகள் திறக்கப்படும். எனவே 1.30 மணிக்கு கஞ்சனூரிலிருந்து மயிலாடுதுறை செல்லும் பேருந்தில் ஏறினால் 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மயிலாடுதுறையை 2 அல்லது 2.15 மணிக்கெல்லாம் அடைந்து விடலாம். அதன் பின்பு மயிலாடுதுறையிலேயே மதிய உணவை முடித்துக்கொண்டு ஆற அமர 3.15 மணியளவில் கிளம்பினால் கூட 15 கிலோமீட்டர் தூரமுள்ள வைத்தீஸ்வரன் கோயிலை 3.45 மணிக்கெல்லாம் அடைந்து விட முடியும். பின்னர் கோயில் நடை திறந்து பின்பு சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு 4.30 மணிக்கு வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து கிளம்பினால் சரியாக இருக்கும். 


7. திருவெண்காடு (புதன்) : 
வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து 4.30 மணிக்கு கிளம்பினால் 16 கிலோமீட்டரில் அமைந்துள்ள திருவெண்காடு ஸ்தலத்தை 5 மணிக்கு அடைந்துவிட முடியும். பின்னர் ஸ்வேதாரண்யேஸ்வரர் கோயிலில் வீற்றிருக்கும் புதன் பகவானையும், சிவபெருமானையும் தரிசித்துவிட்டு 5.30 மணிக்கு கிளம்ப வேண்டும். 


8. கீழ்பெரும்பள்ளம் (கேது) : 
திருவெண்காட்டிலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் அமையப்பெற்றுள்ள கேது பகவானின் கீழ்பெரும்பள்ளம் ஸ்தலத்தை 15 நிமிடங்களில் அடைந்து விடலாம். இந்த கீழ்பெரும்பள்ளம் கோயிலையும் தஞ்சாவூரில் இருக்கும் பிரகதீஸ்வரர் கோயிலையும் இணைக்கும் சுரங்கப்பாதை ஒன்று இங்கு அமைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஜாதகத்தில் தவறான இடத்தில் கேது இருப்பதால் தோஷம் அடைந்த மக்கள், அதற்கு பரிகாரம் செய்ய இந்த கோயிலுக்கு வருகிறார்கள். 


 9. திருநள்ளாறு (சனி) : 
நவகிரக ஸ்தலங்களின் சுற்றுலாவில் நீங்கள் இறுதியாக செல்லவிருக்கும் இடம் சனி பகவான் வீற்றிருக்கும் திருநள்ளாறு ஸ்தலம். கீழ்பெரும்பள்ளத்திலிருந்து 6.15 அல்லது 6.30 மணிக்கு புறப்பட்டால் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருநள்ளாறு ஸ்தலத்தை திருக்கடையூர், காரைக்கால் வழியாக 8 மணிக்கெல்லாம் அடைந்து விட முடியும். அதன் பின்னர் ஸ்ரீ தர்பாரன்யேசுவரர் திருக்கோவிலில் சனி பகவானையும், சிவபெருமானையும் தரிசிக்கலாம்.


Wednesday 9 April, 2014

பிளாஸ்டிக்கேன் குடிநீரில் புற்றுநோய் அபாயம்:

வெயில் படும் போது, பிளாஸ்டிக்கில் இருந்து தண்ணீருக்குள் செல்லும் "டயாக்ஸின்” நச்சுப்பொருளால், புற்றுநோய் உட்பட பல்வேறு நோய் அபாயம் ஏற்படுகிறது. எனவே வெயிலில் வைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் கேன்களை வாங்கி குடிக்காதீர்கள், என்று டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

தற்போதைய சூழ்நிலையில், குடிநீர் முழுக்க பிளாஸ்டிக் கேன்களிலேயே விநியோகம் செய்யப்படுகிறது. கடைகளில் ஒரு லிட்டர், இரண்டு லிட்டர் பாட்டில்களிலும், வீடுகளுக்கு 20 லிட்டர் கேன்களிலும், சப்ளை செய்யப்படுகிறது. பிளாஸ்டிக் அபாயம் உணர்ந்த பெரிய கம்பெனிகள் தங்களது தயாரிப்புகளை அட்டைப்பெட்டிக்குள் அடைத்து பக்குவமான முறையில் சப்ளை செய்கின்றனர். கடைக்காரர்களுக்கு, அதன் அபாயம் புரியவில்லை. எனவே கேன்களை கடை முன் வெயிலில் அடுக்கி வைக்கின்றனர். அதேபோல் வீடுகளுக்கு சப்ளை செய்யப்படும், பிளாஸ்டிக் கேன்களையும் வேன்களில் ஏற்றி பல மணி நேரம் அந்த வேன்களை வெயிலில் நிறுத்தி விடுகின்றனர். பிரச்னை இங்கு தான் தொடங்குகிறது. வெயிலில், சில மணி நேரம் பிளாஸ்டிக் கேன்களை வைத்திருக்கும் போது, பிளாஸ்டிக்கில் இருந்து, "டயாக்ஸின்” என்ற நச்சுப்பொருள் வெளியேறி குடிநீரில் கலந்து விடுகிறது. இந்த நீரை குடித்தால், புற்றுநோய் உட்பட பல்வேறு நோய்கள் உடல் உபாதைகள் ஏற்படும், அபாயங்கள் உள்ளன.


இது குறித்து, டாக்டர் ராஜ்குமார் கூறியதாவது: "டயாக்ஸின்” நச்சுப்பொருள் பிளாஸ்டிக் கேன்களின் வெயில் படும் போதெல்லாம் உருவாகும். இந்த நச்சுப்பொருள் கேனின் தன்மைக்கும் தரத்திற்கும், ஏற்ப அதிகமாகவோ, குறைவாகவோ உருவாகும். எவ்வளவு நச்சு உருவானாலும், இதனை குடிப்பதால் ஆபத்து தான்.இதனால் பிளாஸ்டிக் கேன்களை வெயில் படாத இடங்களில் வைத்து பயன்படுத்த வேண்டும். நம்மிடம் அந்த கேன் வந்து சேரும் முன் பல மணி நேரம் வெயிலில் இருந்திருந்தால், அதற்கு யார் பொறுப்பு. அது நமக்கு தெரியாமல் போகும். எனவே முடிந்த அளவு பிளாஸ்டிக் கேன்களை தவிர்த்து விட்டு, கண்ணாடி அல்லது சில்வர் பாட்டில்களை பயன்படுத்துவது சிறந்தது.

அதேபோல், கார்களை வெயிலில் நிறுத்தியிருக்கும் போது, காருக்குள் இருக்கும் பிளாஸ்டிக்கில் இருந்து "பென்சீன்” என்ற வேதிப்பொருள் உருவாகி காருக்குள் உள்ள காற்றில் கலந்திருக்கும். நாம் காருக்குள் அமர்ந்து உடனே "ஏசி”யை ஆன் செய்து, கார் கதவுகளை மூடி விட்டால், அந்த நச்சு கலந்த காற்று வெளியேற வழியின்றி, நம் உடலுக்குள் சென்று பல்வேறு உபாதைகளை ஏற்படுத்தும். எனவே காரை வெயிலில் நிறுத்தினால், சிறிது நேரம் "ஏசி”யை ஆன் செய்து, காருக்குள் உள்ள நச்சு காற்று முழுவதும் வெளியேறும் வரை கதவுகளை திறந்து வைத்திருக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

Monday 7 April, 2014

9 வயது சிறுமிக்கு கௌரவ டாக்டர் பட்டம்:

பத்தே நிமிடங்களில் லேப்டாப் கம்ப்யூட்டர்களை பிரித்து, பின்னர் மீண்டும் பொருத்தி சாதனை படைத்த கோவையை சேர்ந்த 9 வயது சிறுமிக்கு பிரிட்டைன் நாட்டிலுள்ள உலக சாதனைகளை அங்கீகரிக்கும் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கி கவுரவித்துள்ளது.


கோவை மாவட்டத்தின் கோயில்பாளையம் பகுதியில் கம்ப்யூட்டர்களை பழுது நீக்கும் தொழில் செய்து வருபவர், பிரபு மகாலிங்கம். இவரது மகள் ஆதர்ஷினி(9) அதே பகுதியில் உள்ள பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறாள். துறுதுறுப்பு மிகுந்த சிறுமியான ஆதர்ஷினி, தந்தையின் கடைக்கு வரும் போதெல்லாம் அவர் வேலை செய்வதை உன்னிப்பாக கவனித்து வந்தாள். பின்னர், மெதுவாக லேப்டாப்களை பிரிப்பதும், பின்னர் ஒன்று சேர்த்து பொருத்துவதுமாக முயற்சி செய்து வந்த அவள், காலப்போக்கில் பதினைந்தே நிமிடங்களுக்குள் ஒரு லேப்டாப்பை முழுமையாக பிரிப்பதும், பின்னர் அதனை இயங்கும் நிலைக்கு பொருத்துவதுமாக பழகி வந்தாள்.

இன்னும் விரைவாக இந்த பணியை செய்ய முணைந்த ஆதர்ஷினி, அதனை பத்தே நிமிடங்களுக்குள் செய்து முடிக்கும் அளவுக்கு முன்னேறினாள். இதற்காக தமிழ்நாடு சாதனைப் பட்டியலிலும், பின்னர், தேசிய சாதனைப் பட்டியலிலும், அதனைத் தொடர்ந்து, ஆசிய சாதனைப் பட்டியலிலும் இடம் பிடித்த அவள், தற்போது உலக சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளாள்.

அவளது இந்த சாதனையை கவுரவிக்கும் விதமாக பிரிட்டைன் நாட்டில் உள்ள உலக சாதனை பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பிக்க முடிவு செய்தது. வியட்னாமில் உள்ள ஹோ சி மின் நகரில் சமீபத்திய வாரத்தில் நடைபெற்ற விழாவில் ஆதர்ஷினிக்கு இந்த கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.


பழமொழி இன்று

Related Posts Plugin for WordPress, Blogger...