தொகுப்புகள் - தற்போதைய இடுகைகள்

திருக்குறள் ஒலி(ஆடியோ) வடிவில்...

Showing posts with label பழமொழிகள். Show all posts
Showing posts with label பழமொழிகள். Show all posts

Wednesday, 23 November 2011

பழமொழிகளும் அதன் உண்மை விளக்கங்களும்...

1. எறும்பு தின்றால் கண்கள் நன்றாக தெரியும்.
விளக்கம்: இது உண்மை அல்ல... எறும்பு தின்னி என்னும் உயிரினத்திற்கு கண்கள் நன்றாக தெரியும் என்பதுதான் உண்மை.

2. ஆயிரம் முறை பொய் சொல்லி கூட ஒரு கல்யாணம் பண்ணலாம்.
விளக்கம்: ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் பண்ணலாம் என்பதல்ல. ஆயிரம் முறை போய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணலாம்என்பதாகும். அதாவது, நம் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருடன் நாம் பகைமை கொண்டு நம் வீட்டில் நடக்கும் கல்யாணம் போன்ற சுபதினங்களில் நாம் அழைக்காமல் இருப்போம். ஆனால், அவர்களை விட்டுவிடாமல் ஆயிரம் முறை போய் சொல்லியாவது அவர்களை அழைத்து நம் வீட்டில் திருமணம் நடத்தவேண்டும் என்பதாகும். அப்படி நல்ல நோக்கத்திற்காக சொல்லப்பட்ட பழமொழிதான் பின்னாளில் மருவி அல்லது மாறி இப்போது உள்ளதுபோல ஆகிவிட்டது.

3. அடியாத மாடு படியாது.
விளக்கம்: உண்மை பொருள் என்னவென்றால் மாட்டின் கால்களுக்கு லாடம் அடித்தால் தான் அதனால் கடுமையான வேலைகளை (உழுதல் போன்ற ) செய்ய முடியும் என்பது தான்.

4. கல் தோன்றா மன் தோன்றாக் காலத்தே
வாளோடு முன் தோன்றிய மூத்த குடி

விளக்கம்: (கல்) கல்வி அறிவு தோன்றாத (மன்) மன்னராட்சி ஏற்படுவதற்கு முன்பாகவே, (வாளோடு) வீரத்தோடு தோன்றிய முதல் இனம் தமிழினம் என்பது இன்று கல் தோன்றா மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்தகுடி என்று, கல்லும் மண்ணும் தோன்றாத காலத்திலேயே (பூமி உருவாவதற்கு முன்பே) தமிழினம் உருவாகி விட்டதாக அர்த்தப் படுத்தப் படுகின்றது.
 
5. ஆறிலும் சாவு நூறிலும் சாவு
விளக்கம்: மகாபாரதத்தில் கர்ணனின் தாய் குந்திதேவி பாண்டவர்களுடன் கர்ணனை சேர்ந்து கொள்ளுமாறு கேட்கின்றாள். அப்போது தான் பாண்டவர்களுடன் சேர்ந்து ஆறாவதாக வந்தாலும் தனக்கு சாவு நிச்சயம். கொளரவர்கள் நூறு பேருடன் சேர்ந்திருந்தாலும் சாவு நிச்சயம். எனவே செய்நன்றிக் கடனுக்காக தான் கௌரவர்களுடனேயே இருந்து விடப் போவதாக கர்ணன் கூறுகின்றான். அதாவது ஐந்து பேருடன் ஆறாவதாகச் சேர்ந்தாலும் சாவுதான். நூறு பேர் கௌரவர்களுடன் இருந்தாலும் சாவுதான் என்பதுதான் அது. ஆனால் ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்பது இன்று வயதைக் குறிப்பதாக அர்த்தப்பட்டு விட்டது.

6. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.
விளக்கம்: உண்டி என்பது சாப்பாடு. சாப்பாடு செய்வதற்கான நேரம் அதிகமாகும் பட்சத்தில, பெண்கள் சமையலறையிலேயே முடங்கி விடுகிறார்கள். இதனால் இவர்கள் மற்றைய விடயங்களிலிருந்து பின்னுக்குப் போய் விடுகிறார்கள். இந்த நிலை மாறுவதற்கு அவர்கள் சுவையான சமையலை குறுகிய நேரத்துக்குள் செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும். இதுவே பெண்களுக்கு அழகு.

7. நாயைக் கண்டால் கல்லைக் காணோம்; கல்லைக் கண்டால் நாயைக் காணோம்.
விளக்கம்: பண்டைக்காலத்தில் அற்புத சிற்பங்கள் வடிக்கப் பட்டன. மாமல்லபுரம், தஞ்சை, காஞ்சி சிற்பங்கள் இதற்கு எடுத்துக் காட்டாக விளங்கின. இங்கே ஒரு சிற்பி நாயின் உருவத்தை கல்லில் சிற்பமாக வடித்திருந்தான். அந்த சிற்பத்தை ஒருவன் மிகவும் ரசித்தான். அந்த சுவைஞனைச் சிற்பி கேட்டான் "என் சிற்பம் எப்படி? என்று. அதற்குச் சுவைஞன் சொன்ன பதில் 'நாயைக் கண்டால் கல்லைக் காணோம்; கல்லைக் கண்டால் நாயைக் காணோம்' என்பதாக இருந்தது. அதாவது அதில் நாயைப் பார்த்தால் கல் தெரியவில்லை. கல்லைப் பார்த்தால் நாய் தெரியவில்லை.
 
8. பசி வந்திட பத்தும் பறந்து போகும்
விளக்கம்: அறிவுடைமை, இன்சொல், ஈகை, தவம், காதல், தானம், தொழில், கல்வி, குலப்பெருமை, மானம் ஆகிய பத்து குணங்களும் பசி என்று வந்து விட்டால் பறந்து போகும் என்பது உண்மை.

9. போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை, வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை
விளக்கம்: இந்த பழமொழியின் அர்த்தம், போக்கு கற்றவனுக்கு அல்லது கற்று கொடுப்பவனுக்கு போலீஸ் வேலை. வாக்கு கற்றவனுக்கு அல்லது கற்று கொடுப்பவனுக்கு வாத்தியார் வேலை என்பதாகும்.

10. ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.
விளக்கம்: இதன் அர்த்தம், ஒருவனின் மனைவி கர்ப்பமாக இருக்கும் போது (என்னதான் அவன் மனைவியாக இருந்தாலும் அவள் இன்னொருவன் அதாவது ஊரான் பிள்ளைதானே) அவளை நன்றாக கவனித்து கொண்டால் , அவளின் வயிற்றில் வளரும் தன்பிள்ளை தானாக வளரும் என்பதாகும்.

11. சேலை கட்டிய மாதரை நம்பாதே
விளக்கம்: சேல் அகட்டிய மாதரை நம்பாதே என்பது தான் அதன் உண்மை பொருள். சேல் என்றால் கண். தன் கணவனுடன் இருக்கும்போது  கண்களை அகட்டி வேறு ஒரு ஆடவனை பார்க்கும் பெண்களை நம்பாதே என்பது தான் உண்மை பொருள்.

12. மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே.
விளக்கம்: மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே என்பது தான் உண்மை. அதாவது ஆற்றுப்படுகைகளில் மண் குதிர்கள் இருக்கும். அவற்றில் கால் வைத்தால் கால்கள் உள்ளே பதியும். அந்த மண் குதிரை (குதிர் ஐ) நம்பி ஆற்றில் இறங்காதே என்பது தான் உண்மை.

Sunday, 11 September 2011

பழமொழிகளின் பழம்பொருண்மைகள்

 முன்னுரை
நாட்டுப்புறவியலின் சிறப்புக் கூறுகளுள் பழமொழிகளும் அடங்கும். நாட்டுப்புற மக்களின் வாழ்வியல் உணர்வின் வெளிப்பாடுகளாக விளங்கும். பழமொழிகள் சிலவற்றின் பொருண்மைகள் இன்று மாற்றமடைந்துள்ளன. பழமொழிகளுக்கு வழங்கும் தற்காலப் பொருண்மைகளின் தகுதிப்பாட்டையும், முற்காலப் பொருண்மைகளின் உறுதிப்பாட்டையும் விளக்கும் வகையில் இக்கட்டுரை அமைகிறது.

பழமொழிகளின் தற்கால, முற்காலப் பொருண்மைகள்


1.அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமட்டான்
இப்பழமொழியைச் சொல்லிக்கொண்டே தவறு செய்யும் தம் குழந்தைகளை அடித்து நொறுக்கும் அம்மாக்களைப் பல இடங்களிலும் காணலாம். இப்பழமொழியைத் தவறாக உணர்ந்து கொண்டதன் விளைவு. உண்மையில் இங்கு "அடி" என்பது இறைவனுடைய திருவடியைக் குறிக்கிறது. இறையடி, திருவடி அருள் உதவுவது போல அண்ணன் தம்பி உதவமாட்டார் எனும் பொருண்மை இதன் முற்கால பொருண்மை எனலாம். அல்லது பெரியவர்களின் வாழ்த்தை வேண்டி அவர்களுடைய திருவடிகளில் விழுந்து வணங்குவதை இது குறிக்கிறது எனலாம்.

2. மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா?
ஆற்றைக் கடக்க வேண்டியவன் மண் குதிரையிலா கடப்பான்? மனிதனுக்கு அறிவில்லையா? அதுவும் பண்டைத் தமிழருக்கு அறிவில்லை எனல் பொருந்துமா? அறிவில்லாமலா சொல்லி வைத்திருப்பார்கள் என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.
இதில் வரும் குதிர் - மண்மேட்டைக் குறிக்கிறது ஆற்றில் மண்/மணல் மேடுகள் இருக்கும். ஆற்றைக் கடப்பவன் அதில் நின்று தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைத்தால் ஆற்று வெள்ளம் அவனை அடித்துக் கொண்டு போய்விடும். குதிரில் கால் வைத்தால் திடீரென்று கால் உள்ளே போய்விடும். எனவே ஆற்றைக் கடக்க நினைப்பவன் மண் குதிர் - ஐ நம்பக்கூடாது. எனவே இப்பழமொழியின் மூலவடிவம் மண்குதிரை நம்பி ஆற்றில் இறங்கலாமா என்று இருந்திருக்க வேண்டும்.

3. வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை, போக்கத்தவனுக்குப் போலீஸ் வேலை.
நல்ல மனிதர்களை உருவாக்குவது ஆசிரியர் பணி. நல்ல மனிதர்களைக் காக்கத் தீயவர்களைச் சிறைபடுத்துதல் "போலீஸ்" என்கிற காவலர்களின் கடமை. நிலைமை இவ்வாறிருக்க, அவர்களை வக்கற்றவர் போக்கற்றவர் என எவ்வாறு கூறல் இயலும்?
"வாக்குக் கற்றவனுக்கு வாத்தியார் வேலை:
போக்குக் கற்றவனுக்கு போலீஸ் வேலை"
வாக்குக் கற்றல் - அறிந்து கொண்ட செய்திகளை மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லும் திறம் போக்குக் கற்றல் - திருடன் தன்னைத் தேடி வந்த காவலர் போய் விட்டார் என நினைத்து வெளியில் வரும்போது, அவனைப் பிடிப்பதற்கு ஏதுவாக போய் விட்டது போல் போக்கு காட்டி, சிறிது தூரம் சென்று மீண்டும் வந்து திருடனைப் பிடிப்பார் என்று சொல்லிப் பார்த்தாலே பழமொழியின் பழம்பொருள் விளங்குகிறது. நம் முன்னோர்களின் முதிர்ந்த அறிவு புலனாகிறது.

4. கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்
கேட்பதற்கே வேடிக்கையாய் இருக்கிறது. கல்லையும் புல்லையும் மணம் செய்து கொண்டு பெண்கள் என்ன செய்யமுடியும்?
"கல்லான் ஆனாலும் கணவன்
புல்லான் ஆனாலும் புருஷன்"
கல்வி அறிவு அற்ற படிக்காதவராக இருந்தாலும் புல்லாதவராக அன்பற்றவராக இருந்தாலும் கணவன் என்று ஏற்றுக் கொண்டு வாழ வேண்டும் எனும் வாழ்க்கையறிவை விளக்குகிறது இப்பழமொழி.

5. களவும் கற்று மற.
திருடக் கற்றுக்கொள்; பிறகு மறந்து விடு என்ற பொருளில் இன்று இப்பழமொழி வழங்கப்படுகிறது.
"களவும் அகற்று; மற"
சொல்லிப் பார்த்தால் பண்டை மக்களின் பழம்பெருமை விளங்கும்; தமிழர்கள் திருடச் சொல்லிப் பழமொழி கூறியிருக்க வாய்ப்பில்லை.

6. "சேலை கட்டிய மாதரை நம்பாதே"
இப்பழமொழி மேலெழுந்த வாரியாகப் பார்த்தால் சேலை கட்டிய மாதரை நம்பக்கூடாது. சுடிதார், ஜீன்ஸ், பாவாடை, தாவணி போட்டிருக்கும் பெண்களை நம்பலாம் என்பது போல் தோன்றும்; உண்மை அதுவன்று.
சேல் அகட்டிய மாதரை நம்பாதே சேல் போன்ற கண்களை அகட்டி, அகட்டி ஆடவரைத் தேடும் இழிகுணம் உடைய பெண்களை நம்பாதே என்பதுதான் இதன் உண்மைப்பொருள்.

7. "சிவபூசையில் கரடி நுழைந்தாற் போல்"
சிவபூசை வீட்டிலோ, கோயிலிலோ நடைபெறும். அப்பொழுது எப்படி கரடி நுழைய வாய்ப்பிருக்கும்? சிவபூசை பொருத்தமான இன்னிசை அருள் பாடல்களோடு இன்னியம் முழங்க நடைபெறுவது; அப்போது ஒலிச்சீர்மை அற்ற ஓசை சத்தம் கேட்டால் பூசையில் ஈடுபாடு வருமா? கரடியை எனும் ஒலிக்கும் கருவி அதைத்தான் செய்யும்.
சிவபூசையில் கரடிகை ஒலித்தாற் போல என்ற பழமொழியே சிவபூசையில் கரடி  நுழைந்தாற்போல என மாறி வழங்குகிறது.

8. "ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்."
இதன் பொருள் முரண்பாடாகத் தோன்றுகிறது. பண்டைத் தமிழர் ஆயிரமாயிரம் மூலிகை, அதன் வேர்கள் பற்றி அறிந்தவர்கள். மூலிகை மருந்துகள் தயாரித்தளித்து நோய்களை நீக்கினர் மருத்துவர்கள் அதற்கு அதிக எண்ணிக்கையில் வேர்களைப் பயன்படுத்தினார்கள்.
"ஆயிரம் வேரைக் கொன்றவன்
அரை வைத்தியவன்"
என்று பழமொழியின் பொருளைப் புதுமைப்படுத்தினால் பழம்பொருள் விளங்கும்.

9. ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது
இது கூட தெரியாதவர்களா தமிழர்கள்? இது தெரியாமலா இப்படிச் சொல்லி வைத்திருப்பார்கள்?
ஓட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.
சதைப்பகுதி, ஓடு எனப் பிரித்தறியக்கூடிய முற்றிய சுரைக்காய் ஓட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது அவர்கள் சொல்லி வைத்த உண்மை. ஓட்டுச் சுரைக்காய் குடுவைக்கு ஆகும்; கறிக்கு அகாது.

10. கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே
கன்னத்தில் கை வைக்காமல் வேறு எங்க வைப்பது? பழமொழி எதைக் கூறுகிறது?
கன்னம் - கன்னம் வைத்துத் திருடுதல்; சுவரில் ஓட்டையிட்டு உள்ளே புகுந்து திருடுதல் கப்பம் கவிழ்ந்தாலும் திருடக்கூடாது என்பது அதன் பொருள்.

11. ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன்பிள்ளை தானே வளரும்
எப்படி வளரும்? ஊர்ப்பிள்ளைத் தானே வளரும்? இதன் பொருளை இப்படிப் பாருங்கள் ஊரான் பிள்ளை மனைவி; தன் பிள்ளை - மனைவியின் வயிற்றில் வளரும் தன் குழந்தை. தன் பிள்ளை வளர - தானே வளர- ஊரான் பிள்ளையாகிய மனைவியை ஊட்டி வளருங்கள்.

12. கண்டதைக் கற்கப் பண்டிதன் ஆவான்
கண்டதைக் கற்க எப்படி பண்டிதன் ஆக முடியும்? மாணவர்கள் கண்டதைக் கற்கிறார்களே! பண்டிதர் ஆகவில்லையே!
"கண்டு அதைக் கற்கப் பண்டிதன் ஆவான்." இன்ன நூல்களைக் கற்க வேண்டும் என்று தேர்ந்தெடுத்துக் கற்றால் பண்டிதன் ஆக முடியும் என்று கருத்துரைக்கிறது இப்பழமொழி.

13. மார்கழி பீடை மாதம்
இப்படி சொல்லியிருப்பார்களா? இப்படி இருக்க முடியுமா? மாதங்களில் கண்ணன் மார்கழியாக இருப்பதாக பெருமையாக இம்மாதம் பேசப்படுகிறது. இறை அன்பர்களுக்கு இம்மாதம் உயர்ந்த மாதம்! கோயில்கள் எங்கும் இறையின்பத் திருவிளையாடல்கள் பெருமைக்குரிய மாதமாக இம்மாதம் திகழ்வதால், பெருமை எனப்பொருள்தரும் வகையில் மார்கழி பீடுடை மாதம் என்று பழமொழி அமைத்திருப்பர் நம் முன்னோர் என்பது பொருந்தும்.

14. தை பிறந்தால் வழி பிறக்கும்
இறை நிலையில் பீடுடை மாதமாக மார்கழி விளங்கினாலும் வேளாண் அடிப்படையிலான பொருளாதாரம் விளங்கும் நம் நாட்டில் தை மாதம் நெற்பயிர் அறுவடைக்கு வரும். அதன் காரணமாக வறுமை நீங்கி, வளமை உண்டாகும். வாடிய மக்கள், தங்கள் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்ள தை மாதப்பிறப்பு வழி வகுக்கும். இவ்வெண்ணத்தில் தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழி ஏற்பட்டுள்ளது. இதை உறுதி செய்வதாக நம் மக்கள் கூறும் "மார்கழிப் பஞ்சம் மக்களை விற்கும்" என்னும் பழமொழி அமைந்துள்ளது. இவ்விரண்டையும் தொடர்புபடுத்திப் பார்த்தால் பழமொழிகளின் பொருள் நன்கு விளங்கும்.

முடிவுரை
 பழமொழிகள் பாமரர்களின் பல்கலைக்கழகமாக விளங்குபவை. பழமொழிகளை ஆராய்ந்து பொருள் கொள்ளும்போது பொதுவாக அனைவருக்கும் வெளிப்படையாக தெரிந்த ஒன்றை அறிவுத் தெளிவு பெற்ற நம் ஆன்றோர்கள் பழமொழியாகக் கூறி இருக்க மாட்டார்கள். நுட்பமான அறிவுடைய அவர்கள் ஆழமான கருத்துகளைக் கூறவே பழமொழிகளை உருவாக்கிப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என அறியலாம்.

பழமொழிகள் சில...

அகல உழுகிறதை விட ஆழ உழு. 
பள்ளிக் கணக்குப் புள்ளிக்கு உதவாது.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். 
போதுமென்ற மனமே பொன் செய் மருந்து.  
பல்லுப் போனால் சொல்லுப் பேச்சு. 
படிக்கிறது திருவாய் மொழி இடிக்கிறது பெருமாள் கோயில்.  
உற்றது சொன்னால் அற்றது பொருந்தும்.
பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும்.
பழகப் பழகப் பாலும் புளிக்கும்.
பசியுள்ளவன் ருசி அறியான். 
மொழி தப்பினவன் வழி தப்பினவன்.
அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.
பணக்காரன் பின்னும் பத்துப்பேர், பைத்தியக்காரன் பின்னும் பத்துபேர்.
தலைக்கு வந்தது தலைப் பாகையோடு போனது.
பதறாத காரியம் சிதறாது. 
எரிகிற வீட்டில் பிடுங்கின மட்டும் லாபம்.
நிழலின் அருமை வெயிலில் தெரியும்.
ஆற்றிலே கரைத்தாலும் அளந்து கரை.
பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும். 
வாய் சர்க்கரை கை கருணைக் கிழங்கு.
வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.
இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.
பகலில் பக்கம் பார்த்துப் பேசு இரவில் அதுதானும் பேசாதே.
பகுத்தறியாமல் துணியாதே , படபடப்பாகச் செய்யாதே.  
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.
பலநாளைத் திருடன் ஒரு நாளைக்கு அகப்படுவான்.
பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டமாட்டான்.  
மின்னுவதெல்லாம் பொன்னல்ல.

பழமொழி இன்று

Related Posts Plugin for WordPress, Blogger...