நீரில், 12 நாட்கள் வரை மூழ்கினாலும், அழுகாத புதிய நெல் ரகத்தை கண்டுபிடித்த, பேராசிரியர் கதிரேசன்: நான், அண்ணாமலை பல்கலை கழகத்தில், பேராசிரியராகவும், உழவியல் துறை தலைவராகவும் பணியாற்றுகிறேன். நம் முன்னோர், பல ஆண்டுகளாக மூன்று போகம் பயிரிட்டு, லாபத்தில் விவசாயம் செய்தனர். ஆனால், தற்போது வறட்சி காரணமாக, வடகிழக்கு பருவ மழையை மட்டுமே நம்பி, விவசாயம் செய்கின்றனர். வறட்சி இருந்தாலும், சில சமயங்களில் அதிக மழை பொழிந்து, பயிர் முற்றிலும் நீரில் மூழ்கி, பலத்த நஷ்டமடைகின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண, அண்ணாமலை பல்கலை கழக உழவியல் துறையும், பிலிப்பைன்சில் உள்ள நெல் ஆராய்ச்சி மையமும் இணைந்து, நீரினுள் நெற் பயிர் மூழ்கியிருந்தாலும், பல நாட்களுக்கு அழுகாமல் வளரக்கூடிய, புது ரக நெல்லை உருவாக்க முயற்சித்தோம். 'பொன்மணி' எனும், சி.ஆர்.1009 மற்றும் ஐ.ஆர்.40931 ஆகிய நெல் வகைகளை, மரபணு மாற்றம் செய்து, அதிலிருந்து புது ரக நெல்லை உருவாக்கி, 'சிகப்பி நெல்' என, பெயரிட்டோம்.
மரபணு மாற்றத்தால், சில சமயங்களில் தீங்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, மனிதர்களுக்கு தீங்கு ஏற்படுத்தாத, 'மார்க்கர் அசிஸ்டட் செலக் ஷன் டெக்னிக்' தொழில்நுட்பத்தில், சிகப்பி நெல்லை உருவாக்கினோம். சாதாரணமாக, 1 ஹெக்டேரில், 5.2 டன் வரை நெல் அறுவடை செய்யலாம். நெற்பயிர், 10 முதல், 12 நாட்கள் வரை நீரில் மூழ்கி இருந்தாலும், பயிர் அழுகாமல், ஹெக்டேருக்கு குறைந்தது, 3.4 டன் அறுவடை செய்யலாம். சிகப்பி நெல்லை பயிரிடுவதன் மூலம், பலத்த மழையில் நெற்பயிர் மூழ்கினாலும், பெருத்த நஷ்டத்தை தவிர்ப்பதுடன், குறைந்தபட்ச லாபத்தை பெற முடியும். மேலும், 154 நாட்களுக்குள் அறுவடைக்கு தயாராகும் சிகப்பி நெல், சம்பா பருவத்திற்கு உகந்தது. நடுத்தர குட்டை உயரம், காற்றடித்தாலும் சாயாத தன்மை உடைய சிகப்பி நெல்லை, இட்லி, தோசை தயாரிப்பதற்கு பயன்படுத்தலாம். தற்போது, அண்ணாமலை பல்கலை சார்பில், சிகப்பி ரக நெல் விதை, இலவசமாக வழங்கப்படுகிறது. தொடர்புக்கு: 04144- 239816
No comments:
Post a Comment
இந்த "தொகுப்புகள்" வலைப்பூவின் பதிவு குறித்து உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் . மேலும் பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி!