தொகுப்புகள் - தற்போதைய இடுகைகள்

திருக்குறள் ஒலி(ஆடியோ) வடிவில்...

Wednesday, 5 March 2014

உழைப்பே உயர்வு:

     ஆனந்தபுரம் என்ற ஊரில் கந்தன், குகன் என்ற இரு நண்பர்கள் வசித்து வந்தனர். கந்தன் சிறு விவசாயி; பெற்றோர்களை இழந்தவன். தன் உழைப்பின் மூலம் முன்னேற வேண்டும் என்று நினைப்பவன். குகனோ தனது பரம்பரை சொத்துக்கொண்டு வாழ்ந்தால் போதும் என்று கருதுபவன். எனவே எந்த வேலையும் செய்யாமல் சுற்றிவந்தான். கந்தன் தன் தோட்டத்தில் விளைந்த பொருட்களைகொண்டு போய் சந்தையில் விற்று அதில் கிடைத்த வருவாயினைக் கொண்டு குடும்பத்தினை நடத்தி வந்தான். இருவரும் தங்கள் வாழ்க்கையை தத்தம் பாணியில் வாழ்ந்து வந்தனர்.


இருவரும் நண்பர்களாக இருந்தாலும் குகன் வசதி வாய்ந்தவன் என்றபோதிலும், கந்தன் மீது சிறுவெறுப்பு கொண்டிருந்தான். காலம் நகர்ந்து கொண்டே சென்றது. ஒரு கட்டத்தில் குகனின் தந்தை கடன் சுமையால் இறக்க நேரிட்ட போதும் அவன் நடவடிக்கையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஏதுமின்றி தனியொரு மனிதனாக குகன் நின்றதால் கந்தன் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று தங்க இடம் கொடுத்தான். விவசாயத்தில் அதிகம் கிடைக்காது நாம் வியாபாரம் செய்யலாம் என்று குகன் கந்தனுக்கு அறிவுரைக் கூறி, சிறு வணிக வியாபாரியிடம் கூட்டிச் சென்றான். தந்திரமாக கந்தனின் வீடு உள்ளிட்ட நிலத்தினை வியாபாரத்தில் நஷ்ட கணக்கு காட்டி பறித்து கந்தனை ஊரைவிட்டே போகச் செய்தான்.

     நண்பன் குகன் செய்த துரோகத்தினை எண்ணி நொந்தவாறே, கந்தன் பக்கத்து ஊருக்கு சென்று எதாவது தொழில் செய்து பிழைத்துக்கொள்ளலாம் என்று எண்ணினான்.  தன் வீட்டிலிருந்து அரிவாள், ஏர்கலப்பை மட்டும் எடுத்துக்கொண்டான். இடைப்பட்ட காட்டினைக் கடந்து கொண்டிருந்த போது யாரோ ஒருவர் அலறும் சத்தம் கேட்டு அந்த இடம் நோக்கி விரைந்து வந்தான். அப்போது அங்கே ஒரு சிங்கத்தின் பிடியில் ஒருவர் போராடிக்கொண்டிருந்தார். கந்தன் உடனே பாய்ந்து சிங்கத்தினை ஏர்கலப்பையால்  அடித்து விரட்டினான். உடனே காலங்கள் உருண்டோடின. இருவரும் தங்களுக்குள் அறிமுகம் ஆகினர். சிங்கத்தின் பிடியில் மாடியிருந்தவன் தன் பெயர் கண்ணன் என்று அறிமுகம் செய்து கொண்டான். நான்கு ஊர் தள்ளி தன் ஊர் உள்ளதாகவும், இறக்கும் தருவாயில் காட்டிற்கு அருகில் தன் நிலம் உள்ளதைப்பற்றி சொன்னதால் பார்க்க அங்கே வந்ததாகவும் கூறினான். கந்தன், கண்ணன் அந்த குறிப்பிட்ட இடத்தினை நோக்கி நடந்தனர். அந்த இடம் இயற்கை நீரூற்றுடன் பசுமையாக காட்சியளித்தது. கண்ணன் தன் வீட்டிலிருந்து இந்த இடம் தூரமாக இருப்பதால் எப்படி இரண்டையும்  சமாளிக்கப் போகிறேன் என்றவாறே, கந்தனைப்பற்றி கேட்டான். கந்தன் தன் ஊரிலிருது வந்ததையும், குகன் ஏமாற்றியதையும் விளக்கமாக கூறினான். அப்போது கண்ணனுக்கு ஒரு யோசனை தோன்றியது. 


     அதன்படி, கந்தன் தன் நிலத்தில் விவசாயம் பார்த்துகொண்டு இங்கேயே தங்கலாம் என்று கூறினான். மேலும் தேவையான விதை பொருட்களை தானே தருவதாகவும் சொன்னான். விளையும் பொருட்களை விற்று வரும் பணத்தினை இருவரும் பங்கிட்டு கொள்ளலாம் என்று ஒப்பந்தம் செய்தான். அதை ஒத்துக்கொண்ட கந்தனும் நெல், கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட தானியங்களுடன், காய்கறிகளையும் பயிர் செய்தான். வருடத்திற்கு இரு முறைமட்டும் விதை கொடுப்பதும், அதன் மூலம் பயிராகி, கிடைத்தவற்றை தன் ஊர் சந்தையில் விற்று லாபம் பிரிப்பதற்கும் கண்ணன், கந்தனிடம் வந்தான். இப்படியே இருவரின் நட்பு  வளர்ந்தது. நாட்களும் உருண்டோடின.


     கந்தன் தனி மனிதன் என்பதால் அவனுக்கு விரைவில் மணம்முடிக்க எண்ணி தன் ஊரில் உள்ள லக்ஷ்மியை பற்றி சொன்னான். கந்தன், லக்ஷ்மி திருமணம் கண்ணனின் முன்னிலையில் நடந்தேறியது. சில வருடம் கழித்து கந்தனுக்கு ஆண்குழந்தை ஒன்று பிறந்தது. முருகன் என்று பெயர் சூடி வளர்த்தனர். இதற்கிடையே, கண்ணன் தன் பிள்ளைகளின் மேற்படிப்பிற்காக வேறு ஊர் செல்ல தீர்மானித்தான். தன் நிலைப்பாட்டினை கந்தனிடம் சொல்லி அவன் கருத்தினைக் கேட்டான். மேலும் வெளியூர் செல்ல பணம் தேவைப்படுவதால் காட்டின் அருகே கந்தன் பயிரிட்ட நிலத்தினை அவனே ஒரு தொகைக்கு வாங்கிக்கொள்ள விருப்பமா என்றும் கேட்டான். கந்தனும் தான் சேமித்து வைத்திருந்த பணத்தினைக் கொண்டு கண்ணனின் நிலத்தினை வாங்கி தன் சொந்த நிலமாக்கினான். மேலும் கந்தன் தனக்கு இவ்வளவு நாட்களாக பயிர் செய்ய அனுமதித்த நண்பன் கண்ணனுக்கு நன்றி சொல்லி பிரியாவிடை கொடுத்து அனுப்பிவைத்தான். அந்த இயற்கை எழிலுடன் கந்தனின் விவசாயத்தினால் செழிப்பும் பெற்ற இடம் காட்டின் அருகே சிறப்பாக வளர்ந்து வந்தது. விவசாயத்தில் பல புதுமையான வழிமுறைகளை புகுத்தி இயற்கை விவசாயத்தின் பெருமையை உலகிற்கே பறைசாற்றினான் கந்தன். இடையில் குகன் அனந்தபுர மக்களை ஏமாற்றியதால், அவர்களால் கொல்லப்பட்டு இறந்ததை அந்த ஊரிலிருந்து புலம்பெயர்ந்தவர்களின் மூலம் கேள்விப்பட்டு வருந்தினான்.  


     மேலும் அருகில் உள்ள கிராம மக்களும் கந்தன் வசித்த பகுதிக்கு நாடோடிகளாக வந்து விவசாயப் பணியில் ஈடுபட்டதால் அந்த பகுதி மேலும் செழிப்படைந்தது. கந்தன் தன் மனைவி மக்களுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தான். மேலும் ஊர் மக்களும் மிகுந்த மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர். அந்த பகுதி கந்தனின் உழைப்பினால் உருவானதால் பின்னாளில் கந்தன்புரம் என்று அழைக்கப்பெற்றது. ஒரு ஊரிலிருந்து தனி மனிதனாக வந்து, மற்றொரு ஊரையே உருவாக்கிய பெருமையை தந்தது கந்தனின் உழைப்பு.



உழைப்போம்! உயர்வோம்!!


இந்த கதையானது வெட்டிப்ளாக்கர்ஸ் வலைத்தளத்தின் சிறுகதைப்

போட்டிக்காக என்னால் எழுதி பகிரப்பட்டது...

நன்றி!

என்றும் அன்புடன்,

வி.நடராஜன்
http://vienarcud.blogspot.com/

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

கந்தன்புரம் பெயரிடும் அளவிற்கு - இதை விட என்ன சாதிக்கப் போகிறோம்...? சிறப்பான கதை... பாராட்டுக்கள்...

V.Nadarajan said...

தங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி ஐயா @ திண்டுக்கல் தனபாலன்

Post a Comment

இந்த "தொகுப்புகள்" வலைப்பூவின் பதிவு குறித்து உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் . மேலும் பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி!

பழமொழி இன்று

Related Posts Plugin for WordPress, Blogger...