செவ்வாய் கிரகத்திற்கு அருகில், விண்வெளி வீரர்களை அனுப்புவதற்காக, சர்வதேச திட்ட வடிவமைப்புப் போட்டியில் பங்கேற்க, தமிழக மாணவர் விஷ்ணு பிரசாத் ராம், ஆக., 9ல் அமெரிக்கா செல்கிறார்.
அமெரிக்காவின் நாசா மற்றும் மார்ஸ் சொசைட்டி இணைந்து, 2018 மே மாதத்தில், செவ்வாய் கிரகத்திற்கு அருகில், இரண்டு விண்வெளி வீரர்கள் செல்லும் வகையில், திட்டம் வடிவமைத்து உள்ளது. இதை மேம்படுத்தும் வகையில், சர்வதேச அளவில் மாணவர்களுக்கான திட்ட வடிவமைப்புப் போட்டியை நடத்தியது.இவற்றில், சிறந்த 10 திட்டங்களில் ஒன்றாக, காஞ்சிபுரம் ஸ்ரீவெங்கடேஸ்வரா பொறியியல் கல்லுாரி மாணவர்களின் திட்டம் தேர்வு செய்யப்பட்டது.
இதுகுறித்து, மதுரையில் திட்ட ஆய்வுக்கு உதவிய, இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி சிவசுப்ரமணியன் கூறியதாவது:ஸ்ரீவெங்கடேஸ்வரா பொறியியல் கல்லுாரியின், வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த, எட்டு மாணவர்கள் குழுவாக விண்ணப்பித்தனர். இவர்களின் தொழில்நுட்ப திட்டத்தை, திருவனந்தபுரம் விண்வெளி ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகளிடம் விளக்கினர். வரும், ஆக., 9ம் தேதி, அமெரிக்காவின் ஹூஸ்டன் சென்று, அங்குள்ள விஞ்ஞானிகள் முன், மாணவர் விஷ்ணுபிரசாத் ராம், ஆய்வுத்திட்டத்தை விவரிக்கிறார். இம்மாணவர், விருதுநகரைச் சேர்ந்தவர்.இவ்வாறு, அவர் கூறினார்.
ஆய்வு குறித்து, மாணவர் விஷ்ணுபிரசாத் ராம் கூறியதாவது:வரும், 2018 மே மாதத்தில், பூமியில் இருந்து, இரண்டு விண்வெளி வீரர்கள், செவ்வாய்க்கு அருகில் சென்று, 501 நாட்களுக்குப் பின், 2019 ஜூலையில் பூமிக்கு திரும்பும் வகையில், திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.வீரர்கள் மற்றும் அவரது உணவு அடங்கிய, இரண்டு ராக்கெட் தனித்தனியாக செல்லும் வகையில், நாசா திட்டம் தயாரித்து உள்ளது. எங்களது திட்டத்தில், ஒற்றை ராக்கெட் மூலம், வீரர்களையும், உணவை எடுத்துச் செல்லும் திட்டம் தயாரித்துள்ளோம். 501 நாட்களுக்கு, 3,000 கி.கி., தண்ணீர் தேவைப்படும். ஆனால் நீரில் இருந்து ஆக்சிஜனைப் பிரித்து, அதையே சுவாசிக்கவும், சிறுநீரைப் பிரித்து சுழற்சி முறையில் பயன்படுத்தவும் செய்தால், 275 கி.கி., தண்ணீர் போதும்.
எதிர்காலத்தில், செவ்வாயில் இறங்கி ஆராய்ச்சி செய்து, மீண்டும் பூமிக்கு வீரர்கள் திரும்பி வர, மற்றொரு உந்துவிசை தேவை. எனவே, கிரையோஜெனிக் இயந்திரத்தை, கூடுதலாக அனுப்புவதற்கு, திட்டம் தயாரித்து உள்ளோம். செவ்வாயில் இருந்து திரும்பும் போது, வினாடிக்கு, 15.66 கி.மீ., ஆக வேகத்தை அதிகப்படுத்தி உள்ளோம். அவற்றின் பாதையில், 6.25 டிகிரி கோணத்தில் பாதையை, சற்று மாற்றம் செய்யும் போது, வீரர்களின் மீது, வெப்பத்தின் தாக்கம் குறையுமாறு வடிவமைத்து உள்ளோம். இதை, நேரடியாக விளக்குவதற்காக அமெரிக்கா செல்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
இந்த "தொகுப்புகள்" வலைப்பூவின் பதிவு குறித்து உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் . மேலும் பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி!