இந்தியா கிராமங்களுக்கு இலவசமாக இணையதள சேவை வழங்க, பேஸ்புக் சமூக தொடர்பு இணையதளத்தின் நிறுவனர்களில் முக்கியமானவரான மார்க் சுக்கர்பெர்க் முடிவு செய்துள்ளார். இந்தியா வந்துள்ள அவர், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய அதிகாரிகளுடன் நடத்தியுள்ள பேச்சில், இதற்கான ஆலோசனை நடைபெற்றதாகவும், விரைவில் இதற்கான முறையான அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
பேஸ்புக் என்ற பெயரில், இலவச, சமூக தொடர்பு இணையதளத்தை துவக்கி நடத்தி வருகிறார், 30 வயதே ஆன அமெரிக்கர் மார்க் சுக்கர்பெர்க். அந்நாட்டின் இரண்டாவது பெரிய கோடீஸ்வரர் இவர். முதலிடத்தில் உள்ளவர், மைக்ரோசாப்ட் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் தலைவர், பில் கேட்ஸ்.தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் இந்தியாவில், அதற்கான வாய்ப்புகளும், வசதி களும், கிராமங்களை சரி வர சென்றடையவில்லை. இணையதள வசதிகள் இன்னமும் கிராமப்புறங்களுக்கு எட்டாக்கனியாகவே உள்ளன.இதற்கான வசதிகள் கிராமங்களில் கொஞ்சம் இருந்த போதிலும், நகர்புறங்களில் இருக்கும் அளவுக்கு கிராமப்புறங்களில், இணையதளங்களின் செயல்வேகம் இல்லை.இந்த குறைபாட்டை போக்கவும், இந்திய கிராமங்களில் அடிப்படை இணையதள சேவையை இலவசமாக வழங்கவும், பேஸ்புக் முன்வந்துள்ளது. இதன் மூலம், உலக அளவில் இரண்டாவது மிகப் பெரிய, பேஸ்புக் இணையதள வாடிக்கையாளர்களை கொண்ட இந்தியாவை, முதலிடத்திற்கு கொண்டு செல்ல மார்க் விரும்பியுள்ளார்.
பேஸ்புக் இணையதள வாடிக்கையாளர்களில் முதலிடத்தில் இருப்பது அமெரிக்கா. இது தொடர்பாக, மார்க் சுக்கர்பெர்க் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்தியா போன்ற வளரும் நாடுகளில், ஆண்களுடன் ஒப்பிடும் போது, இணையதளங்களை, 25 சதவீத பெண்கள் தான் பயன்படுத்துகின்றனர். ஏராளமானோருக்கு அத்தகைய ஒரு வசதி இருப்பதே தெரியவில்லை. தெரிந்த போதிலும், அதை ஏன் நாங்கள் பயன்படுத்த வேண்டும் என்ற கேள்வி அவர்களிடம் உள்ளது.இதை நானாக சொல்லவில்லை. இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், அந்த ஆய்வில் பங்கேற்ற, 69 சதவீதத்தினர், இணையதளம் தங்களுக்கு எந்த அளவுக்கு உதவிகரமாக இருக்கும் என்பதை நாங்கள் அறியவில்லை என, தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில், 911 என்ற, அவசர கால அழைப்பு எண்ணை, போன் இணைப்பு இல்லாதவர்களும் மேற்கொள்ள முடியும். இந்தியாவிலும் இது போன்ற நிலை ஏற்பட வேண்டும். இணையதளங்களிலும், அவசர கால, 100 என்ற எண்ணிற்கான அழைப்புகளை மேற்கொள்ள ஏதுவாக, கிராமப்புறங்களிலும் அடிப்படை இணையதள வசதியை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளோம்.இதற்காக, டெலிபோன் சேவை வழங்கி வரும் நிறுவனங்களுடன் நாங்கள் பேச்சு நடத்தி வருகிறோம். இந்த வகையில், உலகம் முழுவதும், 30 லட்சம் பேருக்கு ஏற்கனவே இணையதள வசதியை ஏற்படுத்தியுள்ளோம்.இணையதளங்களை, அந்தந்த வட்டார மொழிகளில் மேம்படுத்த வேண்டும்; மொபைல் ஆப் எனப்படும் அப்ளிகேஷன்களை, வட்டார மொழிகளில் தயாரிப்பதற்கு, பேஸ்புக் அதிக ஊக்கம் அளித்து வருகிறது; இதற்காக, 600 கோடி ரூபாய் ஒதுக்க முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு, மார்க் சுக்கர்பெர்க் கூறினார்.
தண்ணீர் இல்லாத கழிப்பறை:
சாப்பிடவே வழியில்லாத ஏழை நாடுகளில் இணையதளம் தேவையா என்ற கேள்விக்கு, மார்க் அளித்த பதில்:
தண்ணீர் இல்லாமல் டாய்லெட் கட்டி எந்த பயனும் இல்லை என்பது போன்ற நிலை இப்போது உலகில், இணையதளத்திற்கு உள்ளது. இணையதளம் இல்லாமல் உலகம் இயங்க முடியாது என்ற அளவிற்கு நிலைமை மாறிவிட்டது.ஜாம்பியா போன்ற ஆப்ரிக்காவின் மிகவும் ஏழ்மையான நாட்டில், கருவுற்ற பெண், தன்னையும், தன் குழந்தையையும் எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து நாங்கள் இணையதளம் மூலம் இலவசமாக யோசனை அளிக்கிறோம்.எச்.ஐ.வி.,க்கு எதிராக, அந்நாட்டில் மிகப்பெரிய அளவில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
பிரமாண்ட நிறுவனங்களின் தலைவர்கள் வருகை:
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான வாய்ப்புகள் இந்தியாவில் ஏராளமாக இருப்பதால் தான், உலகின் பிரமாண்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பு நிறுவனங்களின் தலைவர்கள் இந்தியா வந்த வண்ணமாக உள்ளனர்.மைக்ரோசாப்ட் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி, பில் கேட்ஸ், அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, சத்யா நாதெள்ளா, அமேசான் இணையதள நிறுவனத்தின் தலைவர், ஜெப் பெஸோஸ் போன்றோர், இந்தியா வந்து, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த நிலையில், பேஸ்புக் இணையதளத்தின் நிர்வாகிகளில் ஒருவரான மார்க் சுக்கர்பெர்க்கும், பிரதமர் மோடியை நேற்று சந்தித்தார்.பிரதமர் மோடியும், இணையதளம், சமூக தொடர்பு இணையதளம், மொபைல் போன் போன்ற சாதனங்களையும், தொழில்நுட்ப வசதிகளையும் பயன்படுத்துவதில் வல்லவர். லோக்சபா தேர்தல் பிரசாரத்தில், ட்விட்டர், பேஸ்புக் போன்ற இணையதளங்களை அவர் அதிகமாக பயன்படுத்தினார்.
மார்க்கின் மகத்தான திட்டம்:
டில்லிக்கு நேற்று முன்தினம் வந்த பேஸ்புக் நிர்வாகி மார்க் சுக்கர்பெர்க், தன் செயல்திட்டம் குறித்து விரிவாக பேட்டியளித்தார்.
அதில், முக்கியமான அம்சங்களாவன:
*உலகம் முழுவதும், 270 கோடி பேருக்கு இணையதள வசதி உள்ளது. இன்னமும், 450 கோடி பேருக்கு இணையதள சேவை வழங்கப்பட வேண்டும். இதற்கு தடையாக இருப்பது, போதிய கட்டமைப்பு வசதி இல்லாமை மற்றும் இதற்கான செலவு அதிகரிப்பு தான்.
*உலகம் முழுவதும், 250 கோடி பேர், நாள் ஒன்றுக்கு, 120 ரூபாய் சம்பளம் பெறுபவர்களாகத் தான் உள்ளனர்; அவர்களுக்கு இணையதளம் எட்டாக்கனியாக உள்ளது. அதற்கான கட்டமைப்பை மேம்படுத்த சூரிய ஒளி சக்தி மூலம் செயல்படும் விமானங்களை இயக்கி, இணையதள சேவையை மேம்படுத்த உள்ளோம்.
*இந்தியாவில் மிகச் சிறந்த திறன் வாய்ந்த பொறியாளர்களும், வல்லுனர்களும் உள்ளனர்; அவர்களின் திறமையை பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்.
*இந்தியா நிறைய தொழில்நுட்ப புரட்சிகளை உருவாக்கிய நாடு. உதாரணமாக, பசுமை புரட்சி, தகவல் தொடர்பு புரட்சி, செவ்வாய் கிரக ஆராய்ச்சி போன்றவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது.
*நாள் ஒன்றுக்கு, 2,000 கோடி எஸ்.எம்.எஸ்., தகவல்கள் அனுப்பப்படுகின்றன. இதற்கான செலவை குறைக்க, நாங்கள் தொலைத் தொடர்பு வழங்கும் நிறுவனங்களுடன் பேசி வருகிறோம். அதில் வெற்றி பெற்றால், 10 ஆயிரம் கோடி எஸ்.எம்.எஸ்., தினமும் அனுப்பப்படும்.
10.89 கோடி பேரிடம் இணையதள வசதி:
இந்தியாவில் இணையதள வசதி, அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது. 2013ல், 7.78 கோடி பேரிடம் தான் இணையதள வசதிகள் இருந்த நிலையில், அந்த எண்ணிக்கை அசுரத்தனமாக அதிகரித்து வருகிறது; இந்த ஆண்டின் இறுதியில், இணையதள வசதி கொண்டவர்களின் எண்ணிக்கை, 10.89 கோடியாக அதிகரிக்கும் என, நம்பப்படுகிறது.
No comments:
Post a Comment
இந்த "தொகுப்புகள்" வலைப்பூவின் பதிவு குறித்து உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் . மேலும் பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி!