தொகுப்புகள் - தற்போதைய இடுகைகள்

திருக்குறள் ஒலி(ஆடியோ) வடிவில்...

Showing posts with label வாழ்க்கைக்கு உகந்தது கூட்டுக்குடும்பமா? தனிக்குடும்பமா?. Show all posts
Showing posts with label வாழ்க்கைக்கு உகந்தது கூட்டுக்குடும்பமா? தனிக்குடும்பமா?. Show all posts

Monday, 25 February 2013

வாழ்க்கைக்கு உகந்தது கூட்டுக்குடும்பமா? தனிக்குடும்பமா?

சந்தேகம் ஏதுமின்றி சிதைந்து வரும் உறவுமுறைகளில் ஊட்டம் அளித்து உயிர் செய்பவையாக அமைவது கூட்டுக்குடும்பமே. இந்த கருத்துக்கு வலுசேர்க்கும் விதத்தில் சமீபத்தில் ஒரு நாளேட்டில் வந்த கருத்துரையை எடுத்துரைக்க விழைகிறேன்.கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் கிராமத்திலும், நகரத்திலும்கூட கட்டுப்பாடான வாழ்க்கை முறை, பெற்றோருக்கு அடங்கிய பிள்ளைகள், கூட்டுக் குடும்ப வாழ்க்கை என நன்றாகவே இருந்தது. ஆனால், அண்மைக்காலமாக இவை அனைத்துமே புறந்தள்ளப்பட்டு நேர்மாறாகி விட்டன. மாறிவரும் நகர வாழ்க்கை, மேற்கத்திய நாகரிகம், அறிவியல் வளர்ச்சி இவற்றின் தாக்கம் மெல்ல மெல்ல நம்மையும் மாற்றிவிட்டது. இதனால்தான் கொலை, கொள்ளை, தீவிரவாதம் போன்ற கொடும் செயல்கள் நடந்துவருகின்றன. இதை உடனே தடுப்பதுடன், மனநல ஆலோசனை அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 

கூட்டுக்குடும்ப வாழ்க்கையைப் பொருத்தவரை வீட்டில் மூத்தவர்கள் இருப்பதால் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதுடன், கட்டுப்பாடும் நிறைந்திருக்கும். இதனால் உள்ளூர பயம் மேலோங்கும். ஆனால், இன்றோ பலரும் தன்னிச்சையாக வாழவும், முடிவுகளை மேற்கொள்ளவும் கற்றுக்கொண்டுவிட்டனர்.தாய், தந்தை கண்டிப்புடன் இருப்பதால் குழந்தைகளைச் சிறப்பாக வளர்க்க முடிகிறது. ஒரு குடும்பத்தில் பெற்றோர் வேலைக்குச் செல்ல நேரிடும்போது குழந்தைகளைப் பொறுப்பாக யாரும் கவனிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. அத்துடன் அவர்கள் என்ன படிக்கிறார்கள், எங்கு செல்கிறார்கள் போன்றவற்றைக் கவனிக்கக்கூட நேரமிருப்பதில்லை. எனவே பலர் கணினி, அலைபேசி, இணையதளம், திரைப்படம், நண்பர்களுடன் கேளிக்கை, விருந்து என்று திரியநேரிடுகிறது. இதே கூட்டுக் குடும்ப வாழ்க்கையாக இருந்தால் அரவணைப்பும், கண்டிப்பும் கிட்டும். 

இன்றுள்ள இளம் தலைமுறையினரில் 90 சதவிகிதம் பேருக்கு தங்களது பெற்றோரைத் தவிர, வேறு உறவு முறைகளைத் தெரியவாய்ப்பே இல்லை. உறவினர்கள் வீட்டு விசேஷங்களிலும், நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதற்கு இவர்களுக்கு நேரமோ, வாய்ப்போ கிடைப்பதில்லை. பெரும்பாலான நேரங்களை தனிமையிலும், பொழுதுபோக்கு அம்சங்களிலுமே கழிக்க நேரிடுகிறது. இதனால் மன அழுத்தம், வெறுப்பு, நிம்மதியின்மை போன்ற பாதிப்புகள் உண்டாகின்றன. தங்களுடைய குறைகளையோ, நிறைகளையோ மனம் விட்டு யாரிடமும் பேச முடிவதில்லை. குறைந்தபட்சம் தான் செய்வது சரியா, தவறா என்று முடிவெடுக்கக்கூடத் தெரிவதில்லை.இதனால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. தவறான வழிகளை நாட நேரிடுகிறது. தனிக்குடித்தனம் என்றால் யாரும் நம்மைத் தட்டிக் கேட்க மாட்டார்கள், சுதந்திரமாக இருக்கலாம் என்ற பரவலான கருத்து நிலவுகிறது. இது முழுக்க முழுக்க தவறு. எல்லாமே நமது செயல்களில்தான் உள்ளது. 

இன்றைய சூழ்நிலையில் கூட்டு வாழ்க்கை ஏன் தேவை என சற்று நிதானமாகச் சிந்தித்துப் பார்த்தால் அதில் உள்ள நிறைகளை உணர முடியும். இதைவிட மற்றொரு அழுத்தமான காரணத்தை மனதில் கொண்டால் கூட்டுக் குடும்பவாழ்க்கை முறை அவசியம் என்ற எண்ணம் ஏற்படும். நாளுக்குநாள் அதிகரித்துவரும் விலைவாசியைக் கணக்கில்கொண்டு பார்க்கும்போது, தனிக்குடித்தனம் இருப்பவர்கள் கூட்டுக் குடும்பத்தில் சேரும்போது அவர்களுக்கு பலவகைகளிலும் சிக்கனம் உண்டாகும். தனித்தனி வாடகை, மின்கட்டணம், இதரச் செலவுகள் குறையும் வாய்ப்புகள் ஏராளம், குழந்தைகளுக்குப் பாதுகாப்பு, உறவுமுறைகளுக்குப் புத்துயிர் அளித்தல் போன்ற நன்மைகள் நடைபெறும். இதைக் கருத்தில்கொண்டால் வாழ்வில் இனிமை ஏற்படும்.

பழமொழி இன்று

Related Posts Plugin for WordPress, Blogger...