இந்தியாவில் 460 பல்கலைக்கழகங்கள், 24,064 கல்லூரிகள், 5.5 லட்சம் ஆசிரியர்கள், 1.55 கோடி மாணவர்கள் உள்ளனர். அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையில் உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் இந்தியாவில்தான் உள்ளனர்.

ஆனால், முன்னேறிய நாடுகளுக்கு இணையாக கல்வி நடைமுறையில் சீர்திருத்தம் செய்யாமல் பின்தங்கியிருக்கிறோம். கல்வி முறையில் பிற நாடுகள் கொண்டுள்ள சிறந்த நடைமுறைகளை நாம் இன்னும் பின்பற்றவில்லை. காலம் கடந்த முறைகளை தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டு இருக்கிறோம்.
உலகெங்கும் உயர்கல்வியின் உறுப்புகளாக உள்ள பருவமுறை, விழைவுசார் புள்ளி முறை, தொடர் அகமதிப்பீடு முறை ஆகிய மூன்றும் நமது கல்வி முறையில் இல்லை. இந்திய உயர்கல்விக்கு ஒரு சாபக்கேடாக சில நடைமுறைகளை நாம் பழக்கத்தில் கொண்டிருக்கிறோம். அவற்றுள் கல்லூரி இணைப்பு முறை குறிப்பிடத்தக்கது.
1986ம் ஆண்டு 7வது ஐந்தாண்டு திட்டத்தில் 500 கல்லூரிகளுக்கும், 10வது திட்டத்தில் 10 சதவீத கல்லூரிகளுக்கும் தன்னாட்சி வழங்க வேண்டுமென தேசிய கல்விக் கொள்கை முன்மொழிந்தது. 10வது திட்ட காலத்தில் இருந்த கல்லூரிகளின் எண்ணிக்கை 20,760. இத்திட்டத்தின் இலக்குப்படி 2 ஆயிரத்துக்கும் அதிகமான கல்லூரிகள் தன்னாட்சி பெற்றிருக்க வேண்டும்.
ஆனால் இதுவரை 310 கல்லூரிகளே தன்னாட்சி பெற்றுள்ளன. கல்வி சீர்திருத்தத்தில் இலக்குகள் முடிவு செய்யப்படுகின்றன. ஆனால் இலக்கை அடைவதற்கான வழிமுறைகளை செய்வதில்லை. அறிவிப்புகளோடு அனைத்தும் நின்று விடுகின்றன.
இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் பல இணைப்புக் கல்லூரிகளை கொண்டுள்ளது. இதனால் இணைப்புக் கல்லூரிகளின் கல்விச் சுமையையும் சேர்த்து பல்கலைக்கழகங்கள் சுமக்க வேண்டியுள்ளது. இது கல்வியின் தரத்தை பாதிக்கும்.

உதாரணமாக, சென்னைப் பல்கலைக்கழகம் 105 இணைப்புக் கல்லூரிகளை கொண்டுள்ளது. ஒரு கல்வியாண்டில் சென்னை பல்கலைக்கழகம் 9 ஆயிரம் வினாத்தாள்களை தயாரிக்கிறது. 6 ஆயிரம் தேர்வாளர்களை நியமிக்கிறது. சுமார் 16.3 லட்சம் விடைத்தாள்களை திருத்துகிறது. இதில் பெரும்பாலான பணிகள் மனித பங்களிப்பை சார்ந்தது. இதனால் தவறுகள் நடக்கும் வாய்ப்புகள் அதிகம். 105 இணைப்புக் கல்லூரிகளுக்கே இந்த நிலை என்றால் 652 இணைப்புக் கல்லூரிகளை கொண்ட ஆந்திரப் பல்கலைக்கழகம், 805 இணைப்புக் கல்லூரிகளை கொண்ட உஸ்மானியப் பல்கலைக்கழகத்தின் நிலையை கற்பனை செய்து கொள்ளலாம். எனவே இணைப்புக் கல்லூரிகள் முறையை முதலில் கைவிட வேண்டும்.
உயர்கல்வியும் ஆராய்ச்சியும் பிரிக்க முடியாதவை. இந்தியாவில் ஆராய்ச்சி படிப்பில் (பிஎச்.டி.) ஈடுபடும் மாணவர்கள் மிக மிகக் குறைவு. பிஎச்.டி. செய்பவர்களில் 67 சதவீதம் பேர் முறையான வசதிகள் இல்லாத இணைப்புக் கல்லூரிகளில்தான் படிக்கின்றனர்.
இதனால் தரமான ஆய்வுகளை மாணவர்களால் உருவாக்க முடியவில்லை. தேசிய அறிவியல் கழகம் எடுத்த கணக்கெடுப்பில் அமெரிக்காவில் 4 சதவீதம் பேரும், ஐரோப்பாவில் 7 சதவீதம் பேரும் பி.எச்.டி. பட்டம் பெறுகின்றனர். இந்தியாவில் 0.4 சதவீதத்துக்கும் குறைவானவர்களே பிஎச்.டி. பட்டம் பெறுகின்றனர்.
உயர்கல்விக்கு செலவிடப்படும் தொகையில் ஆய்வுப் படிப்பிற்கு மட்டும் அமெரிக்கா, ஜெர்மனியில் தலா 17 சதவீதமும், பிரிட்டனில் 22.6 சதவீதமும், சீனாவில் 10 சதவீதமும் செலவிடப்படுகிறது. ஆனால் இந்தியாவில் 4.1 சதவீதம் மட்டுமே செலவிடப்படுகிறது.
உயர் கல்விக்கும், ஆராய்ச்சிக்கும் போக விரும்பாத காரணம், கைநிறைய சம்பாதிக்கும் எண்ணம் தான்; இன்னொன்று, நம் நாட்டில் நிதியின்மையால் குறைவான தொகை ஒதுக்கவில்லை. நிதியை பெறுவதற்கு உயர்கல்வியில் போதுமான மற்றும் தரமான ஆய்வுத் திட்டங்கள் இல்லை என்பதே உண்மையான காரணம்.
மாற்றம் என்பது சிறிய பக்க விளைவுகளுடன் கூடிய சிறந்த மருந்தை போன்றது. சிறிய பக்கவிளைவுகளை காரணம் காட்டி, மிகப் பெரிய பயன்களை இழந்துவிடக் கூடாது. இந்தியா வல்லரசாக உயர்கல்வியில் புரட்சிகரமான மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.
உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை குறைவு
இந்தியாவில் 12 சதவீதம் பேர் மட்டுமே உயர்கல்விக்கு வருகின்றனர். ஆனால் உலக சராசரி 23.2 சதவீதம். வளரும் நாடுகளில் 36.5 சதவீதம். வளர்ந்த நாடுகளில் 54.6 சதவீதம். ஆசியாவில் சில நாடுகளில் 22 சதவீதம். இவற்றை ஒப்பிடும் போது நம் நிலை மிகவும் குறைவு. 11வது ஐந்தாண்டு திட்டத்தில் (2007 & 2012) உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கையை 15 சதவீதத்துக்கு உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசு திட்டம் தீட்டியுள்ளது.

அதாவது 1.4 கோடியாக இருக்கும் மாணவர் சேர்க்கையை 2.1 கோடியாக உயர்த்த வேண்டும். கடந்த 150 ஆண்டுகளில் நாம் சாதித்ததை 5 ஆண்டுக்குள் சாதிக்க வேண்டும். 2020ம் ஆண்டில் முன்னேறிய நாடு என்ற பெயரை அடைய இந்த விரிவாக்கம் கட்டாயம் தேவை.
1960ல் இருந்தே...
உலகெங்கும் உயர்கல்வியின் உறுப்புகளாக உள்ள பருவமுறை, விழைவுசார் புள்ளி முறை, தொடர் அகமதிப்பீடு முறை ஆகிய மூன்றும் நமது கல்வி முறையில் இல்லை. பருவமுறையைப் பொதுமையாகப் பயன்படுத்துதல், ஆண்டுத் தேர்வு முறைக்கு பதிலாக தொடர் அக மதிப்பீட்டு முறையை கொண்டு வருதல், காலம் மற்றும் இடம்சார் நெகிழ்ச்சிக்கும் நகர்ச்சிக்கும் மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் புள்ளி முறையை அறிமுகம் செய்தல் ஆகிய மூன்று மாற்றங்களையும் 1960ம் ஆண்டிலேயே கொண்டுவர பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் இன்றுவரை நடைமுறைப்படுத்தவில்லை. இந்த மூன்றும் உயர்கல்வி வளர்ச்சிக்கு தேவையானவை.
உயர்கல்வியை சீர்படுத்தும் வழிகள்
1.உயர்கல்வி என்பது பல்கலைக்கழகங்களுக்கு உரியது. எனவே பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கையை மிகப்பெரிய அளவில் அதிகரிக்க வேண்டும்.
2. 2015ம் ஆண்டுக்குள் 1500 பல்கலைக்கழகங்களை உருவாக்க வேண்டும் என்பது தேசிய கல்வி அறிவுக் குழுமத்தின் திட்டம். இதை நடைமுறைப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் மிக தீவிரமாக மத்திய அரசு எடுக்க வேண்டும்.
3. கல்லூரிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான திட்டங்களை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
4. இணைப்புக் கல்லூரி முறையை மன உறுதியோடு கைவிட வேண்டும்.
5. பல்கலைக்கழக நல்கைக் குழுமமும், மாநில உயர்கல்வி மன்றமும் இணைந்து கல்வி சீர்திருத்த முன்னேற்றம் குறித்து காலமுறை ஆய்வும், மதிப்பீடும் செய்கின்றன. 11வது ஐந்தாண்டு திட்டத்தில் கல்வி சீர்திருத்தம் குறித்த காலமுறை ஆய்வும், மதிப்பீடும் இடம்பெற வேண்டும். இல்லாவிட்டால் கடந்த 40 ஆண்டுகாலமாக இருக்கும் காலமுறைக்கு ஒவ்வாத கல்வி முறையே இந்தியாவில் மீண்டும் நீடிக்கும்.
6. உலகப் பொதுமையாக ஏற்கப்பட்டவையும், நீண்ட காலமாக நடைமுறைக்கு கொண்டு வராமல் இருக்கும் சீர்திருத்தங்களையும் செயல்படுத்தாமல், கூடுதல் நிதியை முதலீடு செய்வது கல்வி தரத்தை எந்தவிதத்திலும் உயர்த்தாது.
நன்றி:- கல்விச்சோலை 6. உலகப் பொதுமையாக ஏற்கப்பட்டவையும், நீண்ட காலமாக நடைமுறைக்கு கொண்டு வராமல் இருக்கும் சீர்திருத்தங்களையும் செயல்படுத்தாமல், கூடுதல் நிதியை முதலீடு செய்வது கல்வி தரத்தை எந்தவிதத்திலும் உயர்த்தாது.
No comments:
Post a Comment
இந்த "தொகுப்புகள்" வலைப்பூவின் பதிவு குறித்து உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் . மேலும் பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி!