விமானத்தில் பிறந்த குழந்தைக்கு ஜாக்பாட்!
விமானத்தில் பறப்பது மிகவும் வசதி படைத்தவர்களுக்கு சாதார்ணம். சாதாரணமானவர்களுக்கு மிகப் பெரிய விஷயம். ஆனால் விமானத்தில் பிறந்த ஒரே காரணத்துக்காக வாழ்நாள் முழுவதும் விமானத்தில் இலவசமாக தன் தாயுடன் எங்கு வேண்டுமானாலும் பறக்கும் அதிர்ஷ்டத்தைப் பெற்றிருக்கிறது ஒரு குழந்தை. மலேசியாவின் வடக்கிலுள்ள பினாங் தீவிலிருக்கும் 31 வயதாகும் லியூ சியாவ் ஹிசியா என்ற பெண், பிரசவத்துக்காக அவசரமாக போர்னோ தீவுக்கு செல்ல வேண்டும் என்பதால் விமானத்தில் பயணிக்க முடிவு செய்தார். ஏர் ஏசியா விமானத்தில் ஏறிய சிறிது நேரத்துக்கெல்லாம் ஹிசியாவுக்கு பிரசவ வலி எடுத்துக்கொண்டது. வலி அதிகமானதால் வேறு வழியின்றி விமானத்தை தலைநகர் கோலாலம்பூரில் தரையிறக்க முடிவு செய்தனர். ஆனால், தரையிறங்கும் முன்பே விமானத்திலிருந்த ஒரு டாக்டர் உதவியுடன் ஹிசியாவுக்கு அழகான ஆண்குழந்தை பிறந்தது.தாயும் சேயும் நலமாக இருப்பதால் நிம்மதியடைந்த ஏர் ஏசியா விமான சேவை, தங்கள் விமானத்தில் பிறந்த குழந்தைக்கு பரிசாக, வாழ்நாள் முழுவதும் தங்களது விமான சேவையின் மூலம் இலவசமாக எங்கு வேண்டுமானாலும் சென்று வர ஒப்புதல் அளித்துள்ளனர். குழந்தையுடன் அவனது தாய் ஹிசியாவும் இலவசமாக பயணிக்கலாம் என்றும் ஏர் ஏசியா நிர்வாகம் அறிவித்துள்ளது.
நள்ளிரவு 12 மணிக்கு 12 திராட்சைகள்!
உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் அதீத உற்சாகத்தோடு கொண்டாடப்படுவது, புத்தாண்டு தினம். புத்தாண்டு பிறப்பது பொதுவான விஷயம் என்றாலும், ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாக புதிய ஆண்டை வரவேற்று கொண்டாடுகின்றனர். புத்தாண்டை வித்தியாசமாகவும், ஆச்சரியப்படுத்தும் விதமாகவும் கொண்டாடும் சில நாடுகளைப் பற்றிய தகவல் துளிகள். கி.மு. 600ல் பண்டைய எகிப்தில் புத்தாண்டு வரும்போது குழந்தைகளை கூடையில் போட்டு பொது இடத்தில் வைத்து கடவுளை வழிபடுவார்களாம். அந்த வழக்கம் இன்றும் அங்கு ஒருசில இடங்களில் தொடர்கிறது.கொலம்பியாவில் புத்தாண்டு பிறக்கும் நள்ளிரவில் பொது இடங்களில் மக்கள் ஒன்றாக கூடுகிறார்கள். ஒவ்வொரு குடும்பத்தின் சார்பிலும் மனித பொம்மை கொண்டுவரப்படுகிறது. அந்த பொம்மைக்குள் துன்ப நிகழ்வுகளுக்கு காரணமான பொருட்கள் மற்றும் வெறுக்கும் விஷயங்களை அடைத்து, பழைய ஆடைகள் உடுத்தி தயாராக வைக்கின்றனர். 12 மணிக்கு புத்தாண்டு பிறக்கும்போது அந்த பொம்மைகளை எரித்து விடுகின்றனர். பொம்மை எரியும் போது தங்களைச் சுற்றியுள்ள தீய சக்திகள் எரிந்து சாம்பலாவதாக அவர்கள் நம்புகின்றனர்.ஸ்பெயின் நாட்டில், புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் சரியாக 12 திராட்சைகளை உண்கின்றனர். இப்படிச் செய்வதால், புத்தாண்டில் வேளாண்மை செழிப்புறும் என்பது நம்பிக்கை.ஜப்பானில் டிசம்பர் 31ம் தேதி இரவில் மக்கள் தோஷிகோஷிசோபா என்ற நூடுல்ஸ் உணவை உண்ணத் தொடங்குகின்றனர். நள்ளிரவு நெருங்கும்போது புத்த கோயிலில் 108 முறை மணியடிக்கும் ஒலியைக் கேட்டுக்கொண்டே உண்டால், ஆத்மா சுத்தமாகும் என்கின்றனர்.வெனிசுலா, அர்ஜென்டினா, பொலிவியா மற்றும் மெக்ஸிகோ நாடுகளில் புத்தாண்டு பிறக்கும் போது நள்ளிரவில் தங்கள் வீடுகளைச் சுற்றி பெட்டிகளை சுமந்து செல்கின்றனர். இப்படிச் செய்வதால் புத்தாண்டில் செல்வம் பெருகும் என்பது அவர்களது நம்பிக்கை.
107 வயதில் மீண்டும் முளைக்கும் பற்கள்!
'பல்லு போனால் சொல்லு போச்சு' என்பார்கள். குறிப்பிட்ட வயதுக்கு மேல் சொல்லைக் காப்பாற்றினாலும், பல்லைக் காப்பாற்ற முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த இயற்கை விதியை முறியடித்துள்ளார், சீனாவைச் சேர்ந்த 107 வயது பெண்மணி.ஜியாவோ ஜென்வா என்ற அந்த 107 வயது மூதாட்டி, சீனாவின் ஹெனான் மாகாணத்தில் வசிக்கிறார். பல ஆண்டுகளுக்கு முன்பே அவரது வாயிலிருந்த பற்கள் முழுவதும் ஒவ்வொன்றாக கொட்டி விட்டது. சில ஆண்டுகள் பல்செட் வைத்திருந்த ஜென்வா, அதையும் கழற்றி வீசி விட்டார். அதன் பின் பற்களே இல்லாமல் பொக்கை வாயுடன் காட்சியளித்த ஜென்வாவின் வாயில் சில ஆண்டுகளுக்கு முன் தொடர்ந்து வலி ஏற்பட்டது. டாக்டர்களால் கூட அந்த வலியின் காரணத்தைக் கண்டறிய முடியவில்லை.சில நாட்கள் கழித்து ஜென்வாவின் வாயில் ஒவ்வொரு பல்லாக முளைக்கத் தொடங்கியது. குறுகிய இடைவேளையில் பல பற்கள் முளைத்து விட்டன. இப்போது ஜென்வாவின் வாய் நிறைய பற்கள். கடினமான பொருட்களை அனாயாசமாக கடிக்கிறார். எலும்புகளை சுக்குநூறாக்குகிறார். 60 உறுப்பினர்களைக் கொண்ட அவரது குடும்பம் இப்போது உற்சாகத்தில் திளைக்கின்றனர். ஜென்வாவின் புகழ் சீனா முழுவதும் 'பல்'கிப் பெருகி வருகிறது.
தொழிலாளியின் வயிற்றில் 1/2 கிலோ இரும்பு!
தொழிலாளியின் உடம்பு இரும்பு மாதிரி இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். இதை உண்மையாக்குவதாகக் கூறி, 5 அங்குல ஆணிகள் உள்பட அரை கிலோ இரும்பைத் தின்று ஏடாகுடமாக அவஸ்தைப் படுகிறார் ஒரு தொழிலாளி. இங்கல்ல, பெரு நாட்டில்.பெரு நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள காஜாமர்கா நகரத்தைச் சேர்ந்தவர் ரிக்வெல்மி அபான்டோ. கட்டிடத் தொழிலாளியான இவர், தன்னுடைய உடம்பு இரும்பைப் போன்றது என்று நண்பர்களிடம் கூறி வந்திருக்கிறார். இதை யாரும் பொருட்படுத்தாததால் டென்ஷனான அபான்டோ, தான் ஒரு இரும்பு மனிதன் என்பதை நிரூபிக்க, பல பேர் முன்னிலையில் 5 அங்குல ஆணிகள் மூன்றை விழுங்கியிருக்கிறார். அனைவரும் பாராட்டியதால் குஷியான அபான்டோ, தொடர்ந்து அவ்வப்போது துருப்பிடித்த இரும்புத் துண்டுகள், கம்பிகள், நாணயங்கள், பழைய இரும்பு தகடுகள் என சகட்டுமேனிக்கு அள்ளித் தின்றுள்ளார். சில நாட்களாக கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்ட அபான்டோவை சோதித்த மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து, அவரது வயிற்றிலிருந்து அரை கிலோ எடை கொண்ட இரும்பை அகற்றினர். வயிற்றில் ஓட்டை விழுந்திருப்பதால் அபான்டோ தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.இது போன்ற தடைகளால் நான் துவள மாட்டேன். எனது சாதனையைத் தடுக்க முயற்சி நடக்கிறது. அதை முறியடித்து பயணத்தைத் தொடர்வேன்" என்று மருத்துவமனையில் இருந்து கொண்டே அவர் அளித்த பேட்டி, அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடையே சிரிப்பையும் கவலையையும் ஒருசேர ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment
இந்த "தொகுப்புகள்" வலைப்பூவின் பதிவு குறித்து உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் . மேலும் பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி!