தொகுப்புகள் - தற்போதைய இடுகைகள்

திருக்குறள் ஒலி(ஆடியோ) வடிவில்...

Monday, 21 November 2011

பாரதியார் கவிதைகள்: தாயின் மணிக்கொடி

தாயின் மணிக்கொடி பாரீர்!- அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்!

ஓங்கி வளர்ந்ததோர் கம்பம்-அதன்

உச்சியின் மேல்‘வந்தே மாதரம்’என்றே
பாங்கின் எழுதித் திகழும்-செய்ய
பட்டொளி வீசிப் பறந்தது பாரீர்!

பட்டுத் துகிலென லாமோ?-அதில்

பாய்ந்து சுழற்றும் பெரும்புயற் காற்று
மட்டு மிகந்தடித் தாலும்-அதை
மதியாதவ் வுறுதிகொள் மாணிக்கப் படலம்

இந்திரன் வச்சிரம் ஓர்பால்-அதில்
எங்கள் துருக்கர் இளம்பிறை ஓர்பால்,-(தாய்)
மந்திரம் நடுவுறத் தோன்றும்-அதன்
மாண்பை வகுத்திட வல்லவன் யானோ?

கம்பத்தின் கீழ்நிற் றல்காணீர்-எங்கும்

காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம்
நம்பற் குரியர்அவ் வீரர்;-தங்கள்
நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பார்

அணியணி யாயவர் நிற்கும்-இந்த

ஆரியக் காட்சியோர் ஆனந்தம் அன்றோ?
பணிகள் பொருந்திய மார்பும்-விறல்
பைந்திரு வோங்கும் வடிவமும் காணீர்!

செந்தமிழ் நாட்டுப் பொருநர்,-கொடுந்

தீக்கண் மறவர்கள், சேரன்தன் வீரர்,
சிந்தை துணிந்த தெலுங்கர்,-தாயின்
சேவடிக் கேபணி செய்திடு துளுவர்.

கன்னடர் ஒட்டிய ரோடு-போரில்

காலனும் அஞ்சக் கலக்கு மராட்டர்,
பொன்னகர்த் தேவர்க ளொப்ப-நிற்கும்
பொற்புடை யார்இந்துஸ் தானத்து மல்லர். 

பூதலம் முற்றிடும் வரையும்-அறப்
போர்விறல் யாவும் மறப்புறும் வரையும்,
மாதர்கள் கற்புள்ள வரையும்-பாரில்
மறைவரும் கீர்த்திகொள் ரஜபுத்ர வீரர் 

பஞ்ச நதத்துப் பிறந்தோர்-முன்னைப்
பார்த்தன் முதற்பலர் வாழ்ந்தநன் னாட்டார்,
துஞ்சும் பொழுதினும் தாயின்-பதத்
தொண்டு நினைத்திடும் வங்கத்தி னோரும். 

சேர்ந்ததைக் காப்பது காணீர்!-அவர்

சிந்தையின் வீரம் நிரந்தரம் வாழ்க!
தேர்ந்தவர் போற்றும் பரத-நிலத்
தேவி துவஜம் சிறப்புற வாழ்க!

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம் நண்பரே! நல்ல பதிவு. விரும்பிப் படித்தேன். தங்களின் பல சேவைகளுக்கு எனது நல்வாழ்த்துக்கள். நன்றி.

V.Nadarajan said...

வணக்கம். தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

அம்பாளடியாள் said...

வணக்கம் சகோதரரே மனதுக்கு நிறைவாக இங்கு பாரதியை நினைவு கூறும் வகையில் ஆக்கங்களை அள்ளி வழங்கியுள்ளீர்கள் !.........வாழ்த்துக்கள் மென்மேலும் சிறப்பாகத் தொடருங்கள் .மிக்க நன்றி
பகிர்வுக்கு .

V.Nadarajan said...

தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி. வணக்கம்.

Unknown said...

வாழத்துக்கள்

V.Nadarajan said...

மிக்க நன்றி...

Post a Comment

இந்த "தொகுப்புகள்" வலைப்பூவின் பதிவு குறித்து உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் . மேலும் பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி!

பழமொழி இன்று

Related Posts Plugin for WordPress, Blogger...