தொகுப்புகள் - தற்போதைய இடுகைகள்

திருக்குறள் ஒலி(ஆடியோ) வடிவில்...

Sunday, 25 May, 2014

செல்போனில் மின் கட்டணம்:

செல்போனில் எஸ்.எம்.எஸ். மூலம் மின் கட்டணம் எவ்வளவு என அறிவிக்கும் திட்டத்தில் செல்போன் எண்களை பதிவு செய்யவும், மாற்றம் செய்யவும் இணைய தளத்தில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, அனைத்து நுகர்வோ ரும் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் மொபைல் எண்ணை, இணையதளத்தில் பதிவு செய்யலாம். தமிழகத்தில் மின் துறையின் வருவாயைப் பெருக்கவும், மின்சாரத் துறையை நவீனப்படுத் தவும், தமிழக அரசு பல முயற்சிகளை மேற்கொண்டுள் ளது. இந்த திட்டத் துக்கு மத்திய அரசிலிருந்து ஆர்-ஏ.பி.டி.ஆர்.பி. திட்டத்தின் மூலம் நிதி உதவி வழங்கப்படுகிறது.இந்நிலையில், சுமார் ரூ.70 ஆயிரம் கோடி நஷ்டத்தில் தவிக்கும் மின் வாரியத்தின் வருவாயை உயர்த்த எடுக்கப்படும் பல நடவடிக்கைகளில் ஒன்றாக, மொபைல் போன் மூலம் மின் கட்டண விவரங்களை அனுப்பும் திட்டத்தை மின் வாரியம் அறிமுகப்படுத்த உள்ளது. தமிழகத்தில் உள்ள 2.3 கோடி மின் நுகர்வோரில், விவசாயம் மற்றும் குடிசைகளுக்கான இலவச மின்சார இணைப்புகள் பெற்றுள்ளோரைத் தவிர, மற்ற அனைவருக்கும், மின் கட்டணம் குறித்த விவரங்களை எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்ப முடிவு செய்யப்பட்டது. முதலில் அனைத்து பிரிவு அலுவலகங்களிலும் உள்ள மின் கட்டண வசூல் மையங்களில், பணம் கட்டும்போதே, செல்போன் எண்ணைப் பதிவு செய்ய வசதி செய்யப்பட்டது. இதில் மின் ஊழியர்களுக்கு அதிக பிரச்சினைகள் ஏற்பட்டதால், வெளியே தனியாக பதிவேடு வைக்கப்பட்டு, நுகர்வோர் தாங்களாகவே மொபைல் போன் எண்ணை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டனர்.

இதிலும் ஏராளமானோர் மொபைல் போன் எண்ணைப் பதிவு செய்யவில்லை. பெரும்பாலானோர் தங்கள் மின் கட்டணத்தை இணையதளம், தபால் அலுவலகம், வங்கி ஏ.டி.எம். மையங்கள் மற்றும் தனியார் ஏஜெண்டுகள் மூலம் கட்டி விடுவதால், அவர்கள் செல்போன் எண்ணை பதிவு செய்வதில் கால தாமதம் ஏற்பட்டது. இணையதளத்தில் புதிய வசதியை, தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது. மின் நுகர்வோர் http://www.tangedco.gov.in என்ற இணையதள முகவரியில் மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக இணையதளத்தில், பில்லிங் சர்வீசஸ் (Billing Services) என்ற ஆப்ஷனில் சென்றால், இறுதி ஆப்ஷனாக மொபைல் நம்பர் ரெஜிஸ்ட்ரேஷன் (Mobile Number Registration) சேர்க்கப்பட்டுள்ளது. அதில் க்ளிக் செய்தால், தங்களது மின் மண்டல எண்ணை தனியாகவும், மற்ற எண்களை தனியாகவும் குறிப்பிட வழி செய்யப்பட்டுள்ளது. இணைப்பு எண்ணைப் பதிவு செய்ததும், மொபைல் போன் எண்ணை பதிவு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.


மின் துறை கணக்கீட்டாளர்கள், தங்களது கையடக்க கருவி மூலம் மின் கட்டண பட்டியல் எடுத்ததும், அவை மின் வாரிய இணையதள சர்வரில் ஏற்றப்படும். பின்னர் முதலில் பதிவு செய்யப்படும் ஒரு லட்சம் எண்களுக்கு, தினமும் சர்வரிலிருந்து மொபைல் போன் குறுஞ்செய்தி மூலம் தகவல்கள் அனுப்ப தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் தொடங்கப்பட்டு செயல்பாட்டுக்கு வர உள்ளது.

Wednesday, 21 May, 2014

வருமான வரியை சேமிக்கும் வழிமுறைகள்:

வருமான வரிப்பிரிவில் 80C பிரிவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. இந்த பிரிவில், நாம் ஒரு லட்சம் ரூபாய்வரை சேமிக்க முடியும். நாம் சேமிக்க எடுத்துக்கொள்ளும் கால அவகாசம் ஒரு நிதியாண்டில் ஏப்ரல் 1 முதல் அடுத்த வருடம் 31 மார்ச் வரை. ஆனால் நம்மில் பலர் 10 அல்லது 11 மாதம் எந்தவித முயற்சியும் எடுக்காமல், கடைசி இரண்டு மாதங்களில் அந்த சமயம் கண்ணில் யார் படுகிறாரோ அவரிடம் எதையாவது வாங்கி அலுவலகத்தில் ரசீது கொடுப்பதையே பெரிய விஷயமாக நினைக்கிறார்கள். பின்பு அதைச் சொன்னார், இதைச் சொன்னார் என்று முகவரைக் குறை கூறுவதுண்டு. 80 சி பிரிவில் எந்தெந்த முதலீடுகள் உள்ளன, அவற்றின் பயன் என்னவென்று தெரிந்தால் நாம் அதை சரியாக பயன்படுத்திக்கொள்ளமுடியும்.


1. வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்):
இது நம்முடைய வருமானத்தில் நாம் வேலை செய்யும் நிறுவனத்தால் பிடிக்கப்படுவது. நம்முடைய அடிப்படை சம்பளத்தில் 12% பிடிக்கப்பட்டு, அதற்கு 8.75% வட்டி வழங்குகிறார்கள். இது ஒரு நீண்ட கால சேமிப்பு, நாம் அறியாமலேயே சேமிப்பது. இதில் நாம் விரும்பினால் 12% க்கும் மேலே சேர்க்கலாம். ஒரு லட்சம்வரை இதில் சேமிக்க முடியும்.

2. ஆயுள் காப்பீடு:
இதிலேயும் ஒரு லட்சம் வரை சேமிக்க முடியும். இதில் எண்டோவ்மென்ட் பாலிசி மற்றும் யூலிப் திட்டங்கள் பிரசித்தி பெற்றவை. முறையே 6% முதல் 10% வரை வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. நடுவில் பாலிசியை சரண்டர் செய்யும்போது பெரிய அளவு இழப்பு நேரிடும். நாம் கட்டிய தொகையைவிட குறைவாக கிடைக்க நிறைய வாய்ப்புள்ளது.


3. வீட்டுக்கடன் அசல்:
நாம் வீட்டுக்கடன் வாங்குபோது மாதா மாதம் EMI கட்டவேண்டும். இதை இரண்டாக பிரிப்பார்கள் 1. அசல் 2. வட்டி. ஆரம்பத்தில் அசலை குறைவாக எடுப்பார்கள், வட்டி அதிகம் எடுக்கப்படும். ஒருவர் கட்டக்கூடிய அசலை இந்த வருமான வரி விலக்கில் காண்பிக்க முடியும்.


4. தேசிய சேமிப்புத் திட்டம் (NSC):
இதில் முதலீடு செய்தால் ஐந்து வருடம் கழித்து பணத்தை எடுத்துக்கொள்ள முடியும். இதில் கிடைக்கும் வட்டி 8.5%. குறைந்தது 100 ரூபாய் முதல், ஒரு லட்சம் வரை சேமிக்க முடியும். இதை தபால் நிலையத்தில் வாங்கலாம்.


5. பொது வருங்கால வைப்பு நிதி (PPF):
இதில் யார் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். பாதுகாப்பு அதிகம் விரும்புவர்கள் இதில் முதலீடு செய்வார்கள். இதில் குறைந்தது 500 ரூபாய் முதல் அதிகபட்சமாக 1 லட்ச ரூபாய் வரை சேமிக்கமுடியும். 8.7% தற்போதைய வட்டி. ஒவ்வொரு வருடமும் வட்டியை புதிதாக நிர்ணயம் செய்வார்கள். இதில் 3 வருடத்துக்கு பிறகு, 5 வருடத்திற்குள் கடன் வாங்க முடியும். அதே மாதிரி 6 வருடத்திற்கு பிறகு சிறிது பணம் எடுத்துக்கொள்ளலாம், நிபந்தனைக்குட்பட்டது. இந்த கணக்கை தபால் நிலையம் மற்றும் வங்கியில் தொடரலாம்.


6. தபால் நிலைய வைப்பு நிதி:
இதற்கு ஒருவர் ஐந்து வருடம் காத்திருக்கவேண்டும், அத்துடன் 8.5% வட்டி கிடைக்கும், இதிலும் ஒருவர் ஒரு லட்சம் ரூபாய்வரை சேமிக்க முடியும். இது ஒரே ஒரு தடவை செய்யக்கூடிய முதலீடு.


7. முதியோர் சேமிப்பு திட்டம் (SENIOR CITIZEN SAVINGS SCHEME):
இதில் முதலீடு செய்பவர்களுக்கு வயது குறைந்தது 60 வருடம். விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கு 55 வருடம். ஒவ்வொரு காலாண்டும் வட்டி கிடைக்கும், வருடத்திற்கு 9.2% இதில் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை ஒருவர் முதலீடு செய்யலாம். வருமான வரி விலக்கு ஒரு லட்சம் ரூபாய்க்குதான். இதில் செய்யப்படும் முதலீட்டை ஐந்து ஆண்டு வரை எடுக்க முடியாது.


8. 5 வருட வங்கி டிபாசிட்:
பாதுகாப்பு கருதுபவர்கள் ஐந்து வருடம் இதில் முதலீடு செய்யலாம், இதற்கு வருமான வரி விலக்கு ஒரு லட்சம் வரை உண்டு. இதில் குறைந்தது ஐந்து வருடம் இணைந்திருக்க வேண்டும். இதுவும் அஞ்சலக டெர்ம் டிபாசிட்டும் ஒரே மாதிரியானவை.


9. கல்விக் கட்டணம் (TUITION FEES):
ஒருவர் தன் குழந்தைக்கு செலவிடும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஆகும் கல்வி பயிற்றுக் கட்டணத்தை (டியூஷன் பீஸ்) இந்த பிரிவில் எடுத்துகொள்ளலாம். இது வருடா வருடம் வேறுபட வாய்ப்புள்ளது. நாம் செலவிடும் கல்விக் கட்டணம் எல்லாவற்றையும் இதில் காண்பிக்கமுடியும்.


10. முத்திரைத் தாள் பதிவு கட்டணம்:
ஒருவர் நிலம்,வீடு வாங்கும்போது, இந்த செலவுகள் இன்றியமையாதவை. அதற்கு ஆகக்கூடிய செலவுகளான ஸ்டாம்ப் டூட்டி, பதிவு கட்டணம் ஆகியவற்றை இந்த 80c பிரிவின் கீழ் வருமான வரி விலக்கில் (1 லட்சம் வரை) காண்பிக்கமுடியும்.


11. மியூச்சுவல் ஃபண்ட் (ELSS):
இதில் ஒரு லட்சம் வரை சேமிக்க முடியும். 3 வருட காலம் முதலீட்டை திரும்ப எடுக்க முடியாது. இது பங்கு சந்தையின் ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டது. குறைந்தது 500 ரூபாய் முதலீடு செய்யலாம். ஒரு வேளை 3 வருடத்திற்கு பிறகு, நாம் எதிர்பார்த்த வருமானம் கிடைக்காமல் போக கூட வாய்ப்பு இருக்கிறது. மற்ற திட்டங்களுடன் ஒப்பிடும்போது மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் கட்டாயம் தொடர வேண்டிய முதலீட்டு காலம்(லாக் இன் காலம்) குறைவு.


மேலே சொன்ன 11 வகையான திட்டத்தில் அந்த ஒரு லட்ச ரூபாயை ஒரே திட்டத்திலோ, பல திட்டத்திலோ சேர்ந்து சேமிக்கலாம். வேலைக்கு சேர்ந்தவுடன் ஒருவர் இதை திட்டமிட்டு சேமித்தால், நம்முடைய வருமான வரியை ஓரளவிற்கு குறைக்க முடியும். இதில் சில நாம் செய்யக்கூடிய செலவுகளை காண்பிக்கவும், சில பிரிவுகள் மேலும் நாம் சேமிக்கவும் உதவுகிறது. அவ்வாறு சேமிக்கக்கூடிய திட்டங்களில் அதனுடைய கால அவகாசம், அதற்கு கிடைக்கும் வருமானம் பார்த்து நாம் வருட ஆரம்பத்திலேயே திட்டமிட்டால், வருமான வரி கட்டுவதை ஓரளவுக்கு குறைக்க முடியும். சிறிது சிறிதாக சேமிக்கக்கூடிய தொகை நாளடைவில் நல்ல பலன் தரும். இதை ஒரு தொல்லையாக கருதாமல் நமக்கு சேமிக்க கிடைத்த வாய்ப்பாக நினைத்து செயல்படுவது நல்லது.

வேலைக்கு சேர்ந்தவுடன் பெரும்பாலோர் சொல்லும் சொல், எனக்கு வருமானம் போதவில்லை, அதுவே சில வருடங்களுக்கு பிறகு, என்னுடைய வருமானத்தில் பெரும் பங்கு வருமான வரியிலேயே போய் விடுகிறது என்கிறார்கள். இதைப்பற்றி நான் படித்த ஒரு வரி எனக்கு நினைவுக்கு வருகிறது, அது ஆங்கிலத்தில் சொல்வது எளிது“A fine is a tax for doing wrong. A tax is a fine for doing well.” நகைச்சுவையாக சொன்னால் "அபராதம் என்பது ஒருவர் செய்யும் தவறுக்கான வரி, அதே சமயம் வரி என்பது ஒருவர் நன்றாக செயல்பட்டால் அரசாங்கம் நமக்கு விதிக்கும் அபராதம்” எப்படி பணம் சம்பாதிப்பது நம்முடைய கடமை என்று நினைக்கிறோமோ அதே மாதிரி சம்பாதித்த பணத்தை சரியாக சேமிப்பதும் நம் கையில் தான் உள்ளது. இதற்கு சோம்பல்பட்டு தேவையற்றவைகளை முதலீடு செய்து அடுத்தவர்களைக் குறை கூறுவதில் எந்தவித பிரோயோஜனமும் இல்லை. சேமிப்போம், நன்கு பயன் பெறுவோம்.

Saturday, 3 May, 2014

கணவனுக்காக மனைவிகட்டிய தாஜ்மஹால்(கிணறு):

குஜராத்தில், கணவனின் நினைவுக்காக, மனைவி கட்டிய, 'ராணி கி வாவ்' படிக்கிணறு, யுனஸ்கோவின் பாரம்பரிய பட்டியலில் இடம் பெறுவதற்கு, பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், வட இந்தியாவில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடியது. எனவே தண்ணீர் பஞ்சத்தை போக்குவதற்காக, ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களில் ஆயிரக்கணக்கில் படிக்கிணறுகளை கட்டினர். குறிப்பாக குஜராத் மாநிலத்தில் அதிகளவிலான படிக்கிணறுகளை கட்டினர்.பருவமழைக் காலங்களில் பெறப்படும் மழைநீரை சேகரிக்கவும், வாணிபத்துக்காக பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் தங்குவதற்கும் இக்கிணறுகள் கட்டப்பட்டன.

இதில் குறிப்பிடத்தக்க 'ராணி கி வாவ்' படிக்கிணறு, குஜராத் மாநிலம் படான் மாவட்டத்தில் உள்ளது.சோலங்கி வம்சத்து அரசனான பீமதேவருக்கு 1050ல் அவருடைய மனைவி உதயமதி இப் படிக்கிணறை கட்டினார். காதலியின் நினைவுக்காக ஷாஜகான் கட்டிய தாஜ்மஹாலை போல, கணவனின்நினைவுக்காக மனைவி உதயமதி கட்டிய 'ராணி கி வாவ்' படிக்கிணறும்,  நம் நாட்டு கலாசாரத்துக்கு எடுத்துக்காட்டு.64 மீ. நீளமும், 20 மீ. அகலமும், 27 மீ. ஆழமும் கொண்ட இப்படிக்கிணறு, 1958 வரை மண் மூடிக்கிடந்தது. அதன் பின் அரசின் கவனத்துக்கு வந்தது. 1972ல், அகழ்வாராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 1984ல், பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது.குஜராத்துக்கு சுற்றுலா செல்லும் பெரும்பாலான பயணிகள் ராணி கி வாவ்வுக்கு கட்டாயம் செல்வர். குஜராத்தில் உள்ள படிக்கிணறுகளின் ராணி என போற்றப்படுவது குறிப்பிடத்தக்கது. ஐ.நா., சபையின் கலாசாரா அமைப்பான யுனஸ்கோ ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாட்டிலும் பாரம்பரியமிக்க இடங்களை பட்டியலிட்டு அந்த இடத்துக்கு புகழ் சேர்க்கும். ஒவ்வொரு நாட்டிலும் இதற்கென பிரத்யேக வல்லுனர் குழு அமைக்கப்படும். 

இந்த ஆண்டு வல்லுனர் குழு ராணி கி வாவ்வையும், இமாச்சல் பிரதேசத்தில்உள்ள நேஷனல் பார்க்கையும் பாரம்பரிய பட்டியலுக்கு பரிந்துரைத்துள்ளது. 1998லும் ராணி கி வாவ் பரிந்துரைக்கப்பட்டாலும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இம்முறை தேர்ந்தெடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பழமொழி இன்று

Related Posts Plugin for WordPress, Blogger...