தொகுப்புகள் - தற்போதைய இடுகைகள்

திருக்குறள் ஒலி(ஆடியோ) வடிவில்...

Thursday, 25 December, 2014

சமூக வலைதளங்கள் – நன்மையும், தீமையும்:


வளர்ந்துவரும் அறிவியல் முன்னேற்றத்தில் கணினிப் பயன்பாடுகள் மிக இன்றியமையாத பங்கு வகிக்கின்றது. கணினிப் பயன்பாடுகள் இல்லாத துறைகளே இல்லை எனலாம். இன்று கிராமங்களில் கூட இணையப்பயன்பாடு என்பது மிக சாதாரணமாக உள்ளது. எனவே இணையக் கலாச்சாரம் அதீத வளர்ச்சியடைந்து வருகிறது. இன்று இணையம் ஒரு ரூபாய் நாணயத்தைப்போல நன்மை, தீமைகள் என இரண்டு பக்கங்களைக் கொண்டுள்ளது.

வலைதளங்கள்:
உலகளாவிய அளவில் பல்வேறு வலைதளங்கள்  உலகத்தகவல் அனைத்தையும் நம் கண்முன்னே நம் இல்லத்திலேயே அள்ளித்தருகிறது. இதில் பொழுதுபோக்கிற்காக அமைக்கப்பட்ட பல சமூக வலைதளங்களும் அடங்கும்.

சமூக வலைதளங்கள்:
இணையம் வழியாக சமூக வலைதளங்கள் அனைத்து வகை மக்களின் வாழ்வில் ஒரு அங்கமாக மாறிவிட்டன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்க்கும் வகையில் சமூக வலைதளங்களின் பங்கு அமைகிறது. இத்தகைய சமூக வலைதளங்களினால் பல நன்மைகள் இருந்தாலும் தற்சமயம் பல குற்றங்களும் பெருகி வருகின்றன என்பதை மறுக்க இயலாது. பல்வேறு இணையங்களும், சமூக வலைதளங்களும் மக்களின் முன்னேற்றத்திற்காக வடிவமைப்பட்டவையாக அமைந்துள்ளன.

சில சமூக வலைதளங்கள்:
பல்வேறு சமூக வலைதளங்கள் இருப்பினும் சில குறிப்பிட்ட வலைதளங்களில் மட்டுமே பயனாளிகளின் எண்ணிக்கையும், ஆர்வமும்  அதிகமாக உள்ளன. Facebook, Twitter, Linked in, My space, Ning, Google+, Tagged, Orkut, Hi5, My year book, Youtube, Flicker, Digg போன்ற சமூக வலைதளங்கள் இன்று பெருமளவில் அனைவராலும் அறியப்படுகின்றனவையாக உள்ளன. இவற்றில் முகநூல் எனப்படுகின்ற Facebook மற்றும் Twitter ஆகியவை மிகவும் பிரபலமான வலைதளங்களாகும்.

கணினிகளில் மட்டுமன்றி இப்போது ‘ஸ்மாட் போன்’ (Smart Phone) என்ற நவீன வசதிகளுடன் கூடிய அலைபேசிகளிலும் இணையத்தின் பயன்பாடுகள் அதிகரித்துள்ளன. கல்லூரி மாணவர்களிடம் இந்த ஸ்மாட் போன்கள் பெருமளவில் புழக்கத்தில் உள்ளன. இதற்குக் காரணம் அவற்றில் 24 மணி நேரமும் இருந்த இடத்திலிருந்தே சமூக வலைதளங்கலில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்துகொண்டு பார்வையிடலாம் என்பதுதான்.

தற்சமயம் ‘வாட்ஸ் அப்’  (Whats App) என்ற வலைதளm ஸ்மார்ட் போன்களில் பிரபலமடைந்துள்ளது. இதன் வாயிலாக புளுடூத் வசதி இல்லாமலேயே இனையத்தின் வழியாக செய்திகள், புகைப்படங்கள், வீடியோப் பதிவுகள், வாழ்த்துக்கள் என அனைத்தையும் பிறரின் அலைபேசி எண்ணிற்கு அனுப்பி வைக்கலாம். நவீனத் தொழுல்நுட்பங்கள் கையடக்கத்தில் இருப்பதால் அனைவரின் பார்வையும் ஸ்மாட் போன்கள் மேல் திரும்பியுள்ளன.

இந்த வாட்ஸஅப்பை ரூ.ஒரு லட்சம் கோடிக்கு முகநூல் வாங்கியுள்ளது. ஏதேனும் ஒரு வைகயில் மக்களைக் கவர்வதற்காகவே சமூக வலைதளங்கள் முயல்கின்றன. புதிய புதிய சேவைகளை அறிமுகப்படுத்திப் பயனாளர்களின் எண்ணிக்கையைப் பெருக்குவதே சமூக வலைதளங்களின் நோக்கமாகின்றன.

”வலைதளங்களில் உறுப்பினாராக உள்ளவர்களின் எண்ணிக்கை முகநூலில் 80 கோடியும் டிவிட்டரில் 20 கோடி, லிங்க்டு இன் தளத்தில் 13.5 கோடியும், குருப் ஆன் தளத்தில் 11.5 கோடியும், கூகுள் பிளஸில் 9 கோடிபேரும் சீனைவைச் சார்ந்த சமூக வலைதளங்களான ரென்ரென் 17 கோடிபேரும், கியூஜோன் 50 கோடிபேரும், சீனா வைபோ 25 கோடிபேரையும் மற்றுமுள்ள பிற சமூக வலைதளங்களில் சுமார் 50 கோடிகும் அதிமானோரும் உறுப்பினர்களாக உள்ளனர்.” (www.nathikaral.in) என்ற இணையதளம் சமூக வலைதளங்களின் உறுப்பினர் எண்ணிக்கையைக் குறிப்பிட்டுள்ளது.

சமூக மாற்றம்:
மின்னஞ்சல் முகவரி வைத்திருப்பதேயே பெரிதாக கருதும் இன்றையச் சூழலில் தற்போது சமூக வலைதளங்களில் கணக்கு இல்லாதவர்கள் அற்ப்பமாக பார்க்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பேஸ்புக், டிவிட்டர், ஆர்குட், டிவிட்டர், ஆர்குட், யூடியூப் ஆகியவற்றில் கணக்கு இல்லாதவர்களை எள்ளி நகையாடுகின்றனர். இத்தகைய சமூக மாற்றங்கள சமூக வலைதளங்கள் ஏற்படுத்தியுள்ளன. பிரபலமான வலைதளங்களில் பெயர்களே கல்லூரி மாணவர்களின் பேச்சினால் இடம் பெறுவதை காணமுடிகின்றது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் இணையத்தைப் பயன்படுத்தும் நிலைமாறி இணையத்திலேயே நேரத்தைக் கழிக்கின்ற நிலை உருவெடுத்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

நன்மைகள்:
சமூக வலைதளங்கள் பொழுது போக்கிற்காக மட்டுமின்றி பல நன்மைகளையும் நல்கிக் கொண்டிருக்கிறது. கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளவும், பொருளாதார வளர்ச்சிக்கும், மக்களை ஒன்றிணைக்கவும், தகவல் பரிமாற்றத்திற்கும் சமூக வலைதளங்கள் உதவுகின்றன.

1.உறவுகளுக்குப் பாலம்:-
தன் குடும்பத்தைப் பிரிந்து சென்ற அயல்நாடுகளில் வாழும் பலரும் சமூக வலைதளங்களின் உதவியுடன் தங்களது கருத்துக்களையும், புகைப்படங்களையும், வீடியோ பதிவுகளையும் பகிர்ந்துகொள்கின்றனர். அதுமட்டுமின்றி நட்பு வட்டாரத்தையும் பெருக்கிக் கொள்கின்றனர்.

2.வணிக வளர்ச்சி:-
வணிக நிறுவனங்கள், சமூக வலைதளங்கள் மூலம் பொருட்களை விளம்பரம் செய்து வாடிக்கையாளர்களின் கருத்துக்களை நேரடியாக அறிந்து கொள்ள முயல்கிறது. இதனால் வணிக நிறுவனங்களின் வளர்ச்சிக்குச் சமூக வலைதளங்களின் பங்கு இன்றியமையாததாகிறது.

3.கருத்துப் பரிமாற்றம்:-
பலர் வலைதளங்களில் இடும் புதிய பதிவுகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் வலைதளங்கள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிடுவதால் அப்பதிவுகள் பலரால் பார்வையிடப்படும். மேலும் அவர்கள் அப்பதிவுகளை அவர்களின் நண்பர்களிடம் பகிர்வார்கள்.

தீமைகள்:
சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி சில சமூக விரோதிகள் தவறான செயலளிலும் ஈடுபடுகின்றனர். ஆபாசமான புகைப்படங்களையும், வீடியோ பதிவுகளையும் வெளியிடுகின்றனர். இதனால் இளம் வயதினரின் மனதில் சலனம் ஏற்பட  வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

1.ஏமாற்று வேலைகள்:-
அது மட்டுமின்றி இணையத்தொடர்பில் ஈடுபட்டு சிலர் பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்கின்றனர். ஒருவரே பல பெண்களை மணந்து கொள்ளும் ஏமாற்று வேலைகளும் நடக்கின்றன. சில பெண்கள் சமூக வலைதளங்களால் மன உளைச்சலுக்கு  ஆளாகி வெளியில் சொல்ல முடியாமல் தற்கொலையும் செய்து கொள்கின்றனர்.

2.குற்றங்கள்:-
சமூக வலைதளங்களின் உலகலாவிய தொடர்புகளால் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில் சைபர் கிரைம் போலிசாருக்கு இடையூறை ஏற்படுத்துகிறது.

3.அதிகப்பயன்பாட்டின் விளைவு:-
அலைபேசியில் 24 மணி நேரமும் சமுக வலைதளங்களையே  பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு வெளியில் அவர்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது தெரியாமல் போகிறது.

பெருமளவில் மக்கள் சமுக வலைதளங்களைப் பயன்படுத்துகின்றனர். "உலக அளவில் 150 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்துகிறார்கள். முகநூல், டிவிட்டர், மை ஸ்பேஸ் உள்ளிட்ட பத்து சமூக வலைதளங்கள் உலகில் அதிகம் பயன்படுத்தப்படுபவை என்று பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் முகநூல்(Facebook) மட்டும் 50 கோடிக்கும் மேலான பயணர்கள் உறுப்பினர்களாக இருந்து பயன்படுத்துகின்றனர். இவர்களில் பெரும்பாலோனோர்கள் சிறுவர்கள், இளைஞர்களும்தாம். சமுக வலைதளங்களைப் பயன்படுத்துவதில் இந்தியா ஏழாவது இடத்திலிருக்கிறது” என 27-10-2014 அன்று தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கடைமகள் இருப்பினும் அதைப் பொருட்படுத்தாமல் சமுக வலைதளங்களில் மூழ்கி இருப்பது துன்பத்தையே ஏற்படுத்தும்.”பொய்யான முகவரி கொடுத்து நமது சொந்த இரகசியங்களைக் களவாடிக்கொண்டு நமது வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை கொஞ்சம் கொஞ்சமாகத் திருடுவதாக அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளனர் ஆய்வாளர்கள். கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இந்த உண்மை தெரிய வந்துள்ளது” என வலைப்பதிவு செய்தி குறிப்பிடுகின்றது. இதுபோல பலவைகயான குற்றங்கள் சமுக வலைதளங்கள் வாயிலாக நடைபெறுகின்றன.

அண்மையில் சமூக வலைதளஙகள் பற்றிய செய்திகள் நாளிதழ்களில் வெளிவந்த வண்ணம் உள்ளன. தினமலரில் நவம்பர் 21, 2013 அன்று உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே “பல முன்னேற்றங்கள் கண்டுவரும் இந்நாளில் சமூக வலைதளங்கள் மூலமாக தவறான செயல்கள், நாட்டிற்கு எதிரான குற்றங்கள் பரப்பி விடப்படுகிறது. இதற்கான சுதந்திரம் தவறான வழியில் செல்கிறது. இது கவலை தரும் விஷயம் ஆகும். இவைகளைத் தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும்” என்றார்.

சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகள் மற்றும் தவறான தகவல்களைத் தடுக்க “லைடிடெக்டர்” என்னும் தொழில்நுட்பம் கண்டறியப்பட்டுள்ளது. இது தகவல் தொடர்பு அமைப்புகளின் உதவியுடன் ஆராய்ந்து நாம் தேடும் தகவலுக்கு அருகிலேயே அதன் உண்மைத் தன்மைகளை வெளியிடும். சமீபத்தில் இது சமுக வலைதளங்களில் சோதித்துப் பார்க்கப்பட்டது. இது பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும் எனத் தெரிகிறது. சமூக வலைதளங்களைப் பயன்படுத்துபவர்கள் அதில் உள்ள நன்மை தீமைகளை அறிந்து அளவோடும், பாதுகாப்போடும் பயன்படுத்தினால் இதுபோன்ற குற்றங்களைக் குறைக்க இயலும். ஆனாலும் குறிப்பாகப் பெண்கள் புத்திசாலித்தனமாகவும், சற்று விழிப்போடும் பயன்படுத்துவது நன்மை பயக்கும்.

நன்றி: இணையம் 

Friday, 19 December, 2014

மரங்களும் அதன் பயன்களும்...

மரங்கள் பல வகைகள் உள்ளன. ஒவ்வொருவரின் விருப்பத்திற்கேற்ப, பலப்பல சூழ்நிலைகளுக்கேற்ப, அவரவருக்குத் தேவையான மரங்களைத் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். எந்தெந்த மரங்கள் நமது சூழ்நிலைக்கேற்ப மற்றும் நாம் தேவைக்கு ஏற்ப வளர்க்கலாம் என்பதை பார்ப்போம்.


கோடை நிழலுக்கு:
வேம்பு, தூங்குமூஞ்சி, புங்கன், பூவரசு, மலைப்பூவரசு, காட்டு அத்தி, வாத மரம். 


பசுந்தழை உரத்திற்கு:
புங்கம், வாகை இனங்கள், கிளைரிசிடியா, வாதநாராயணன், ஒதியன், கல்யாண முருங்கை, காயா, சூபாபுல், பூவரசு.

கால்நடைத் தீவனத்திற்கு:
ஆச்சா, சூபாபுல், வாகை, ஒதியன், தூங்குமூஞ்சி, கருவேல், வெள்வேல். 
விறகிற்கு சீமைக்கருவேல், வேலமரம், யூகலிப்டஸ், சவுக்கு, குருத்தி, நங்கு, பூவரசு, சூபாபுல்.

கட்டுமான பொருட்களுக்கு:
கருவேல், பனை, தேக்கு, தோதகத்தி, கருமருது, உசில், மூங்கில், விருட்சம், வேம்பு, சந்தனவேங்கை, கரும்பூவரசு, வாகை, பிள்ளமருது, வேங்கை, விடத்தி. 

மருந்து பொருட்களுக்கு:
கடுக்காய், தானிக்காய், எட்டிக்காய் 

எண்ணெய்க்காக:
வேம்பு, பின்னை, புங்கம், இலுப்பை, இலுவம் 

காகிதம் தயாரிக்க: 
ஆனைப்புளி, மூங்கில், யூகலிப்டஸ், சூபாபுல்

பஞ்சிற்கு:
காட்டிலவு, முள்ளிலவு, சிங்கப்பூர் இலவு

தீப்பெட்டித் தொழிலுக்கு:
பீமரம், பெருமரம், எழிலைப்பாலை, முள்ளிலவு.

தோல்பதனிட, மை தயாரிக்க:
வாட்டில், கடுக்காய், திவி – திவி, தானிக்காய்

நார் எடுக்க:
பனை, ஆனைப்புளி

பூச்சி மருந்துகளாகப் பயன்படுத்த:
வேம்பு, புங்கம், ராம்சீதா, தங்க அரளி

கோயில்களில் நட:
வேம்பு, வில்வம், நாகலிங்கம், தங்க அரளி, மஞ்சளரளி, நொச்சி, அரசு 

குளக்கரையில் நட: 
மருது, புளி, ஆல், அரசு, நாவல், அத்தி, ஆவி, இலுப்பை.

பள்ளிகளில் வளர்க்க:
நெல்லி, அருநெல்லி, களா, விருசம், விளா, வாதம், கொடுக்காப்புளி, நாவல்.

மேய்ச்சல் நிலங்களில் நட:
கருவேல், வெள்வேல், ஓடைவேல், சீமைக்கருவேல், தூங்குமூஞ்சி

சாலை ஓரங்களில் நட:
புளி, வாகை, செம்மரம், ஆல், அத்தி, அரசு, மாவிலங்கு.

அரக்கு தயாரிக்க:
குசும், புரசு மற்றும் ஆல்

நீர்ப்பரப்பில் (கண்மாய்) பயிரிட:
கருவேல், நீர்மருது, நீர்க்கடம்பு, மூங்கில், நாவல், தைல மரம், ராஜஸ்தான் தேக்கு, புங்கன், இலுப்பை மற்றும் இலவமரம். 

Friday, 28 November, 2014

நோயற்ற வாழ்விற்கு சில குறிப்புகள்:


1. தண்ணீர் நிறைய குடியுங்கள்.

2. காலை உணவு ஒர் அரசன் போலவும், மதிய உணவு ஒர் இளவரசன் போலவும்,இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண
வேண்டும்.

3. இயற்கை உணவை, பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு, பதப்படுத்தப்பட்ட உணவை தவிர்த்து விடுங்கள்.

4. உடற்பயிற்சி மற்றும் பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள்.

5. தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள்.

6. கடந்த வருடத்தைவிட இந்த வருடம் நிறைய புத்தகம் படியுங்கள்.

7. ஒரு நாளைக்கு 10 நிமிடம் தனிமையில் அமைதியாக இருங்கள்.

8. குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள்.

9. குறைந்தது 10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.

10. உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள். அவர்கள் பயணிக்கும் / மேற்கொண்டிருக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு.

11. எதிர்மறையான எண்ணங்களை எப்பொழுதும் மனதில் நினைக்காதீர்கள்.

12. உங்களால் முடிந்த அள்வு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.

13. மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள்.

14. நீங்கள் விழித்திருக்கும் பொழுது எதிர்காலத்தைப் பற்றி நிறைய கணவு காணுங்கள்.

15. அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரையம். உங்களுக்கு தேவையானது உங்களிடம் உள்ளது.

16. கடந்த காலத்தை மறக்க முயற்சி செய்யுங்கள். கடந்த காலம் உங்கள் நிகழ்காலத்தை சிதைத்துவிடும்.

17. வாழும் இந்த குறுகிய காலத்தில் யாரையும் வெறுக்காதீர்கள்.

18. எப்பொழுதும் மகிழ்சியாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.

19. வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும்,பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.

20. முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் தயவு செய்து முடியாது என்று சொல்லுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பதிலே தீர்த்துவிடும்.

21. வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும்,வேண்டியவர்களுக்கும் அடிக்கடி தொலைபேசியிலோ, கடிதம் மூலமாகவோ தொடர்புகொண்டிருங்கள்.

22. மன்னிக்கப் பழகுங்கள்.

23. 70 வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள்.

24. அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி ஒருபொழுதும் கவலை கொள்ளாதீர்கள்.

25. உங்கள் நண்பர்களை மதிக்கப் பழகுங்கள்.

26. உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள்.

27. ஒவ்வொரு நாளும் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

28. உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் தான். அதை தேடி அனுபவித்துக் கொண்டே இருங்கள்.

29. உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ, எது அழகை கொடுக்காதோ,நிம்மதியைக் கொடுக்காதோ அதை நீக்கிவிடுங்கள்.

30. எந்த சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும்.

Thursday, 20 November, 2014

உலகளாவிய தமிழர்கள்: பகுதி 2

1. அர்ஜுன் அப்பாதுரை:
அர்ஜுன் அப்பாதுரை, உலகமயமாக்கல் மற்றும் நவீனம் குறித்து ஆராயும் தற்கால ஆய்வாளர். இவர் 1949இல் பிறந்து, தற்சமயம் நியூ யார்க்கில் வாழ்கிறார். இவர் திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோயிலின் தேரோட்டத்தை மையமாக கொண்டு முனைவர் பட்டம் பெற்றார்.


2. எம்.நைட் ஷியாமளன்:
எம். நைட் ஷியாமளன் அல்லது மனோஜ் நெல்லியாட்டு ஷியாமளன்(பிறப்பு ஆகஸ்டு 6, 1970, மாஹே, இந்தியா) புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குனர் ஆவார். இவரின் முதலாம் ஹாலிவுட் திரைப்படம், த சிக்ஸ்த் சென்ஸ், ஆறு ஆஸ்கர் விருதுகளிற்குப் பரிந்துரைக்கப்பட்டது. இவர் மாஹேயில் ஒரு மலையாளி அப்பாவுக்கும் ஒரு தமிழ் அம்மாவுக்கும் பிறந்து பிலடெல்பியாவின் ஒரு புறநகரத்தில் வளர்ந்தார்.


3. ஜேம்ஸ் அப்பாதுரை:
ஜேம்ஸ் அப்பாதுரை, (பிறப்பு: ஆகஸ்ட் 7, 1968), ஒரு கனடா நாட்டு இதழாளர் ஆவார். தற்போது, மத்திய ஆசியாவிற்கான நேட்டோவின் தலைவரின் சிறப்புப் பிரதிநிதியாகப் பணியாற்றுகிறார்.இவர் கனடாவின் டொராண்டோவில் பிறந்தவர்.ஆம்ஸ்டர்டாம்,டொராண்டோ பல்கலைக் கழகங்களில் பயின்றவர். நேட்டோவில் சேரும் முன்பே, கனடாவின் இராணுவத் துறையில் சார்ந்த கனேடிய ஒலிபரப்புப் கூட்டுத்தாபனத்தில் இதழாளராகப் பணியாற்றினார்.


4. ரெங்கநாதன் சீனிவாசன்:
ரெங்கநாதன் சீனிவாசன் (ஏப்ரல் 11, 1910 - சூன் 5, 1958) மொரிசியசு தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சரும் ஆவார். ரெங்கநாதன் 1910 ஆம் ஆண்டில் போர்ட் லூயிஸ் நகரில் பிறந்தார். இவரது தந்தை தமிழ்நாட்டில் பிறந்து மொரீசியசில் குடியேறியவர். தாயார் மொரிசியசுத் தமிழர். 1935 இல் இலண்டன் பொருளாதாரப் பள்ளியில் சேர்ந்து பயின்றார். 1940 ஆம் ஆண்டில் இவர் சட்டத்தில் இளங்கலைப் பட்டத்தைப் பெற்றார். அதே ஆண்டு டிசம்பரில் மொரிசியசு திரும்பி உள்ளூரில் வழக்கறிஞராகப் பணியாற்ற ஆரம்பித்தார். போர்ட் லூயிசு மாநகரசபையில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1957 சூலையில் மொரிசியசின் முதலாவது அமைச்சரவையில் கல்வி அமைச்சராக சேர்த்துக் கொள்ளப்பட்டார். ரெங்கநாதன் சீனிவாசன் 1958 ஆம் ஆண்டில் போர்ட் லூயிசில் காலமானார். மொரிசியசு அரசு இவரது படம் பொறிக்கப்பட்ட 100 ரூபாய் நாணயத் தாளை வெளியிட்டது. ரெங்கநாதன் சீனிவாசனின் பெயரில் அரசு உயர்நிலைப் பள்ளியும் போர்ட் லூயிசு நகரில் இயங்குகிறது. இவரது நூற்றாண்டு நினைவாக மொரிசியசு அரசு முதல்நாள் அஞ்சலுறையையும் வெளியிட்டது.

Friday, 17 October, 2014

இணையதளம் இந்திய கிராமங்களில் இலவசம் - பேஸ்புக் தலைவர்

இந்தியா கிராமங்களுக்கு இலவசமாக இணையதள சேவை வழங்க, பேஸ்புக் சமூக தொடர்பு இணையதளத்தின் நிறுவனர்களில் முக்கியமானவரான மார்க் சுக்கர்பெர்க் முடிவு செய்துள்ளார். இந்தியா வந்துள்ள அவர், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய அதிகாரிகளுடன் நடத்தியுள்ள பேச்சில், இதற்கான ஆலோசனை நடைபெற்றதாகவும், விரைவில் இதற்கான முறையான அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


பேஸ்புக் என்ற பெயரில், இலவச, சமூக தொடர்பு இணையதளத்தை துவக்கி நடத்தி வருகிறார், 30 வயதே ஆன அமெரிக்கர் மார்க் சுக்கர்பெர்க். அந்நாட்டின் இரண்டாவது பெரிய கோடீஸ்வரர் இவர். முதலிடத்தில் உள்ளவர், மைக்ரோசாப்ட் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் தலைவர், பில் கேட்ஸ்.தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் இந்தியாவில், அதற்கான வாய்ப்புகளும், வசதி களும், கிராமங்களை சரி வர சென்றடையவில்லை. இணையதள வசதிகள் இன்னமும் கிராமப்புறங்களுக்கு எட்டாக்கனியாகவே உள்ளன.இதற்கான வசதிகள் கிராமங்களில் கொஞ்சம் இருந்த போதிலும், நகர்புறங்களில் இருக்கும் அளவுக்கு கிராமப்புறங்களில், இணையதளங்களின் செயல்வேகம் இல்லை.இந்த குறைபாட்டை போக்கவும், இந்திய கிராமங்களில் அடிப்படை இணையதள சேவையை இலவசமாக வழங்கவும், பேஸ்புக் முன்வந்துள்ளது. இதன் மூலம், உலக அளவில் இரண்டாவது மிகப் பெரிய, பேஸ்புக் இணையதள வாடிக்கையாளர்களை கொண்ட இந்தியாவை, முதலிடத்திற்கு கொண்டு செல்ல மார்க் விரும்பியுள்ளார்.

பேஸ்புக் இணையதள வாடிக்கையாளர்களில் முதலிடத்தில் இருப்பது அமெரிக்கா. இது தொடர்பாக, மார்க் சுக்கர்பெர்க் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்தியா போன்ற வளரும் நாடுகளில், ஆண்களுடன் ஒப்பிடும் போது, இணையதளங்களை, 25 சதவீத பெண்கள் தான் பயன்படுத்துகின்றனர். ஏராளமானோருக்கு அத்தகைய ஒரு வசதி இருப்பதே தெரியவில்லை. தெரிந்த போதிலும், அதை ஏன் நாங்கள் பயன்படுத்த வேண்டும் என்ற கேள்வி அவர்களிடம் உள்ளது.இதை நானாக சொல்லவில்லை. இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், அந்த ஆய்வில் பங்கேற்ற, 69 சதவீதத்தினர், இணையதளம் தங்களுக்கு எந்த அளவுக்கு உதவிகரமாக இருக்கும் என்பதை நாங்கள் அறியவில்லை என, தெரிவித்துள்ளனர். 

அமெரிக்காவில், 911 என்ற, அவசர கால அழைப்பு எண்ணை, போன் இணைப்பு இல்லாதவர்களும் மேற்கொள்ள முடியும். இந்தியாவிலும் இது போன்ற நிலை ஏற்பட வேண்டும். இணையதளங்களிலும், அவசர கால, 100 என்ற எண்ணிற்கான அழைப்புகளை மேற்கொள்ள ஏதுவாக, கிராமப்புறங்களிலும் அடிப்படை இணையதள வசதியை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளோம்.இதற்காக, டெலிபோன் சேவை வழங்கி வரும் நிறுவனங்களுடன் நாங்கள் பேச்சு நடத்தி வருகிறோம். இந்த வகையில், உலகம் முழுவதும், 30 லட்சம் பேருக்கு ஏற்கனவே இணையதள வசதியை ஏற்படுத்தியுள்ளோம்.இணையதளங்களை, அந்தந்த வட்டார மொழிகளில் மேம்படுத்த வேண்டும்; மொபைல் ஆப் எனப்படும் அப்ளிகேஷன்களை, வட்டார மொழிகளில் தயாரிப்பதற்கு, பேஸ்புக் அதிக ஊக்கம் அளித்து வருகிறது; இதற்காக, 600 கோடி ரூபாய் ஒதுக்க முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு, மார்க் சுக்கர்பெர்க் கூறினார்.

தண்ணீர் இல்லாத கழிப்பறை:

சாப்பிடவே வழியில்லாத ஏழை நாடுகளில் இணையதளம் தேவையா என்ற கேள்விக்கு, மார்க் அளித்த பதில்:

தண்ணீர் இல்லாமல் டாய்லெட் கட்டி எந்த பயனும் இல்லை என்பது போன்ற நிலை இப்போது உலகில், இணையதளத்திற்கு உள்ளது. இணையதளம் இல்லாமல் உலகம் இயங்க முடியாது என்ற அளவிற்கு நிலைமை மாறிவிட்டது.ஜாம்பியா போன்ற ஆப்ரிக்காவின் மிகவும் ஏழ்மையான நாட்டில், கருவுற்ற பெண், தன்னையும், தன் குழந்தையையும் எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து நாங்கள் இணையதளம் மூலம் இலவசமாக யோசனை அளிக்கிறோம்.எச்.ஐ.வி.,க்கு எதிராக, அந்நாட்டில் மிகப்பெரிய அளவில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

பிரமாண்ட நிறுவனங்களின் தலைவர்கள் வருகை:

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான வாய்ப்புகள் இந்தியாவில் ஏராளமாக இருப்பதால் தான், உலகின் பிரமாண்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பு நிறுவனங்களின் தலைவர்கள் இந்தியா வந்த வண்ணமாக உள்ளனர்.மைக்ரோசாப்ட் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி, பில் கேட்ஸ், அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, சத்யா நாதெள்ளா, அமேசான் இணையதள நிறுவனத்தின் தலைவர், ஜெப் பெஸோஸ் போன்றோர், இந்தியா வந்து, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த நிலையில், பேஸ்புக் இணையதளத்தின் நிர்வாகிகளில் ஒருவரான மார்க் சுக்கர்பெர்க்கும், பிரதமர் மோடியை நேற்று சந்தித்தார்.பிரதமர் மோடியும், இணையதளம், சமூக தொடர்பு இணையதளம், மொபைல் போன் போன்ற சாதனங்களையும், தொழில்நுட்ப வசதிகளையும் பயன்படுத்துவதில் வல்லவர். லோக்சபா தேர்தல் பிரசாரத்தில், ட்விட்டர், பேஸ்புக் போன்ற இணையதளங்களை அவர் அதிகமாக பயன்படுத்தினார்.

மார்க்கின் மகத்தான திட்டம்:

டில்லிக்கு நேற்று முன்தினம் வந்த பேஸ்புக் நிர்வாகி மார்க் சுக்கர்பெர்க், தன் செயல்திட்டம் குறித்து விரிவாக பேட்டியளித்தார்.

அதில், முக்கியமான அம்சங்களாவன:

*உலகம் முழுவதும், 270 கோடி பேருக்கு இணையதள வசதி உள்ளது. இன்னமும், 450 கோடி பேருக்கு இணையதள சேவை வழங்கப்பட வேண்டும். இதற்கு தடையாக இருப்பது, போதிய கட்டமைப்பு வசதி இல்லாமை மற்றும் இதற்கான செலவு அதிகரிப்பு தான்.

*உலகம் முழுவதும், 250 கோடி பேர், நாள் ஒன்றுக்கு, 120 ரூபாய் சம்பளம் பெறுபவர்களாகத் தான் உள்ளனர்; அவர்களுக்கு இணையதளம் எட்டாக்கனியாக உள்ளது. அதற்கான கட்டமைப்பை மேம்படுத்த சூரிய ஒளி சக்தி மூலம் செயல்படும் விமானங்களை இயக்கி, இணையதள சேவையை மேம்படுத்த உள்ளோம்.

*இந்தியாவில் மிகச் சிறந்த திறன் வாய்ந்த பொறியாளர்களும், வல்லுனர்களும் உள்ளனர்; அவர்களின் திறமையை பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்.

*இந்தியா நிறைய தொழில்நுட்ப புரட்சிகளை உருவாக்கிய நாடு. உதாரணமாக, பசுமை புரட்சி, தகவல் தொடர்பு புரட்சி, செவ்வாய் கிரக ஆராய்ச்சி போன்றவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது.

*நாள் ஒன்றுக்கு, 2,000 கோடி எஸ்.எம்.எஸ்., தகவல்கள் அனுப்பப்படுகின்றன. இதற்கான செலவை குறைக்க, நாங்கள் தொலைத் தொடர்பு வழங்கும் நிறுவனங்களுடன் பேசி வருகிறோம். அதில் வெற்றி பெற்றால், 10 ஆயிரம் கோடி எஸ்.எம்.எஸ்., தினமும் அனுப்பப்படும்.

10.89 கோடி பேரிடம் இணையதள வசதி:

இந்தியாவில் இணையதள வசதி, அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது. 2013ல், 7.78 கோடி பேரிடம் தான் இணையதள வசதிகள் இருந்த நிலையில், அந்த எண்ணிக்கை அசுரத்தனமாக அதிகரித்து வருகிறது; இந்த ஆண்டின் இறுதியில், இணையதள வசதி கொண்டவர்களின் எண்ணிக்கை, 10.89 கோடியாக அதிகரிக்கும் என, நம்பப்படுகிறது.

Sunday, 28 September, 2014

காய்கறிகளும் அதன் பயன்களும்:

உடலுக்கு நன்மை பயக்கும் காய்கறிகள், கனிகள், தானியங்களை உணவில் சேர்த்துக் கொண்டால் இது போன்ற நோய்கள் வராமல் பார்த்துக்கொள்ளலாம். 


அவற்றில் சிலவற்றை பார்ப்போம்:

1) வாழைப்பூ: இதில் இரும்புச்சத்து, போலிக் அமிலம், வைட்டமின் ஏ, பி, சி சத்துக்கள் நிறைந்துள்ளன. இரத்தச் சோகையை வராமல் தடுத்து உடலுக்கு தெம்பையும் புத்துணர்வையும் தரவல்லது.

2) வாழைத்தண்டு: இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி, சி நிறைந்துள்ளது. இரத்தத்தை சுத்தப்படுத்தும். இரத்தத்தில் உள்ள தேவையற்ற அசுத்த நீரை பிரித்தெடுக்கும். சிறுநீரகத்தின் செயல்பாடுகளை சீராக்கி சிறுநீரக கல் அடைப்பை தடுக்கும்.

3) வாழைக்காய்: இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி, சி, சத்துக்கள் அதிகம் உள்ளது. வாயுவைத் தூண்டும் குணமுள்ளதால் இதை சமைக்கும்போது அதிகளவில் பூண்டு சேர்த்துக்கொள்வது நல்லது. மலச்சிக்கல் தீர்க்கும்.

4) பாகற்காய்: வைட்டமின் ஏ, பி, சி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. நன்கு பசியைத் தூண்டும். உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.

5) சேப்பங்கிழங்கு: கால்சியம், பாஸ்பரஸ் அதிகம் நிறைந்துள்ளது. இவை எலும்புகளையும், பற்களையும் உறுதிப்படுத்தும்.

6) பீட்ரூட்: கால்சியம், சோடியம், பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. மலச்சிக்கலைப் போக்கும், இரத்த சோகையை சரிபடுத்தும்.

7) வெண்டைக்காய்: போலிக் அமிலம், கால்சியம், பாஸ்பரஸ் நிறைந்துள்ளன. மூளை வளர்ச்சியைத் தூண்டும். நன்கு பசியை உண்டாக்கும். மலச்சிக்கலைப் போக்கும்.

8) கோவைக்காய்: வைட்டமின் ஏ, கால்சியம், போலிக் அமிலம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துக்கள் நிறைந்தள்ளன. வயிற்றுப்புண், வாய்ப்புண், மூல நோயின் தாக்குதல் போன்றவற்றை நீக்கும்.

9) முருங்கைக் காய்: வைட்டமின் ஏ, பி, சி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து நிறைந்துள்ளது. பெண்களுக்கு மாதவிலக்கின்போது உண்டாகும் அதிக உதிரப்போக்கைத் தடுக்கும். விந்து உற்பத்தியைப் பெருக்கும்.

10) சுண்டைக்காய்: புரதம், கால்சியம், இரும்புச்சத்து, கணிசமாக உள்ளது. உணவில் சுண்டைக்காய் சேர்த்து வந்தால் வயிற்றுப் புழுக்களை கொல்லும். உடல் வளர்ச்சியைத் தூண்டும்.

11) சுரைக்காய்: புரதம், கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி, நிறைந்துள்ளது. இவை உடல் சோர்வை நீக்கி, உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.

12) குடைமிளகாய்: வைட்டமின் ஏ, பி,சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கணிசமாக உள்ளது. அஜீரணக் கோளாறை நீக்கி செரிமான சக்தியை தூண்டும்.

13) சௌசௌ: கால்சியம், வைட்டமின் சி, சத்துக்கள் உள்ளன. எலும்பு, பற்களுக்கு உறுதியைக் கொடுக்கும்.

14) அவரைக்காய்: புரதம், நார்ச்சத்து மிகுந்துள்ளது. இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தேகத்தை பலப்படுத்துகிறது. மலச்சிக்கலைப் போக்குகிறது.

15) காரட்: உடலுக்கு உறுதியைக் கொடுக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

16) கொத்தவரங்காய்: இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, பி, சி நிறைந்துள்ளது. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

17) கத்தரி பிஞ்சு: கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. செரிமான சக்தியை தூண்டி நன்கு பசியை உண்டாக்கும்.

நன்றி: இணையம்

Monday, 8 September, 2014

அசோலா வளர்ப்பு முறை

அசோலா பெரணி வகையைச் சார்ந்த நீரில் மிதக்கும் தாவரம். பெரும்பாலும் பச்சை அல்லது இலேசான பழுப்பு நிறத்தில் காணப்படும். இதனை மூக்குத்திச் செடி அல்லது கம்மல் செடி என்றும் அழைப்பர். இதில் புரதச்சத்து 25-35%, தாதுக்கள் 10-12% மற்றும் 7-10% அமினோ அமிலம் கார்போஹைட்ரேட் எண்ணெய் சத்துக்கள்.

தேவையான பொருட்கள்:


(6’X3’, தினம் 500கி-1 கிலோ உற்பத்தி செய்ய போதுமானது)
1.    செங்கல்                       -           30-40 கற்கள்
2.    சில்பாலின் பாய்          -           2.5 மீ நீளம், 1.5மீ அகலம் (அ) 6’X3’
3.    செம்மண்                     -           30 கிலோ
4.    புதிய சாணம்              -           30 கிலோ
5.    சூப்பர் பாஸ்பேட்        -           30 கிராம் (அ)
அசோஃபெர்ட்             -           20 கிராம்
6.    தண்ணீர்                      -           10 செ.மீ. உயரம் (சராசரியாக 6-9 குடம்)
7.    அசோலா விதை          -           300-500 கிராம்
8.    யூரியா சாக்கு              -           தேவையான எண்ணிக்கை (6’X3’ ச.அடியை நிரப்ப)


அசோலா வளர்ப்பு முறை:இடத்தைத் தயார் செய்தல்:


1.    மர நிழலில் (நேரடி சூரிய ஒளி ஒரு நாளைக்கு 3 மணி நேரத்திற்கு மேல் இருக்கக்கூடாது) இருக்குமாறு தேர்வு செய்ய வேண்டும்.
2.    இடத்தின் அளவு 6’X3’ இருக்க வேண்டும்.
3.    புல் பூண்டுகளை அகற்றி இடத்தை சுத்தம் செய்ய வேண்டும்.
4.    இடம் குண்டும் குழியுமாக இல்லாமல் சம தளமாக்க வேண்டும்.
5.    புல் பூண்டுகள் வளருவதை தடுக்க யூரியா சாக்கினை  பரப்பவும்.

செய்முறை:


1.    செங்கலை குறுக்கு வாட்டில் தயார் செய்யப்பட்ட இடத்தை சுற்றிலும் வைக்க வேண்டும்.
2.    அதன் மேல் சில்பாலின் பாயை பரப்பி விட வேண்டும்.
3.    சில்பாலின் பாயின் மீது 10-15 கிலோ செம்மண்ணை சம அளவில் பரப்பி விட வேண்டும்.
4.    தண்ணீரின் அளவு 10 செ.மீ உயரம் வரும் வரை சுமார் 6-9 குடம் ஊற்ற வேண்டும். ஊற்றுவது குடிநீராக இருக்க வேண்டும்.
5.    புதிய சாணம் 2 கிலோ மற்றும் 20 கி அசோஃபெர்ட் (அ) 30 கி சூப்பர் பாஸ்பேட் 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
6.    500-1000 கிராம் சுத்தமான அசோலா விதைகளை போட்டு அதன் மேல் லேசாக தண்ணீர் தெளிக்கவும்.

வளர்ச்சி:


1.    விதைத்த 3 நாட்களில் எடை மூன்று மடங்காக பெருகும்.
2.    பசுந்தீவனம் 15 நாட்களில் நல்ல வளர்ச்சி அடைந்து அறுவடைக்கு தயாராக இருக்கும்.
3.    15 நாட்கள் கழித்து நாள் ஒன்றுக்கு 500 கிராமிலிருந்து 1 கிலோ வரை அறுவடை செய்யலாம்.

பராமரிப்பு:


1.    தினந்தோறும் குழியிலுள்ள அசோலாவினை கலக்கி விட வேண்டும்.
2.    தண்ணீன் அளவு 10 செ.மீ. க்குக் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
3.    5 நாட்களுக்கு ஒரு முறை 2 கிலோ புதிய சாணம் மற்றும் 20கிராம்  அசோஃபெர்ட்  (அ) 10 கிராம் ( ஒரு தீப்பெட்டி அளவு) சூப்பர் பாஸ்பேட் தண்ணீரில் கலந்து ஊற்ற வேண்டும்.
4.    10 நாட்களுக்கு ஒரு முறை மூன்றில் ஒரு பங்கு தண்ணீரை வெளியேற்ற வேண்டும். பதிலாக சுத்தமான தண்ணீரை ஊற்ற வேண்டும்.
5.    மாதம் ஒரு முறை மூன்றில் ஒரு பங்கு மண்ணை வெளியேற்ற வேண்டும். பிறகு சுத்தமான சலித்த செம்மண்ணை இட வேண்டும்.
6.    6 மாதத்திற்கு ஒரு முறை அசோலா விதைகளை தவிர அனைத்து இடுபொருட்களையும் வெளியேற்றி புதியதாக இட வேண்டும்.

தீவனம் அளிக்கும் முறை:


1.    தினமும் 500கிராம்- 1 கிலோ அசோலாவை எடுத்து நீரில் அலசிக்கொள்ள வேண்டும்.
2.    பச்சையாகவோ அல்லது பதப்படுத்தியோ அல்லது அடர் தீவனத்துடன் கலந்தும் கொடுக்கலாம்.
3.    உணவு உப்புடன் சேர்த்தும் அளிக்கலாம்.
4.    வைக்கோலுடன் சேர்த்தும் அளிக்கலாம்.

பயன்கள்:


1.    1 கிலோ அசோலா 1 கிலோ புண்ணாக்கிற்கு சமம்.
2.    அசோலாவை உட்கொள்வதால் பால் உற்பத்தி 15-20% அதிகரிக்கும்.
3.    பாலில் கொழுப்பு மற்றும் கொழுப்பு அல்லாத சத்துக்கள் அதிகரிக்கிறது.
4.    கோழிக்கும், வாத்திற்கும் தீவனமாக பயன்படுத்தலாம். அதிக எடை கிடைக்கும்.
5.    உணவு உப்புடன் சேர்த்து பன்றிகளுக்கு அளித்தால் பன்றியின் எடை கூடுவதுடன் இறைச்சி தன்மையும் நன்றாக இருக்கும்.
6.    முயல்கள் அசோலாவை விரும்பி உண்ணும்.
7.    அசோலா வளர்க்கும் இடத்தில் கொசுத் தொல்லை இருக்காது.

வளர்ச்சியை பாதிக்கும் காரணிகள்:

1.    தண்ணீர்:
அசோலாவனது தண்ணீர் ஊற்றி வறண்டுவிட்டால் உடனே இறந்து விடுகிறது.

2.    ஈரப்பதம்:
காற்றின் ஈரப்பதம் 85-90% இருக்கும்போது அசோலா நன்கு வளர்கிறது. ஈரப்பதம் 60%ற்கு குறையும்போது வறண்டு இறந்துவிடுகின்றது.

3.    சூரிய ஒளி:
கோடைக் காலங்களில் பகல் நேரங்களிலுள்ள அதிக சூரிய ஒளி அசோலாவை பழுப்பு நிறமாக மாற்றிவிடுகின்றது.

4.    காற்று:
வேகமாக வீசும் காற்றானது பாத்திகளிலுள்ள அசோலாவை ஒரு பக்கமாகக் கொண்டு சேர்த்துவிடும். இதனால் அசோலாவின் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படுகிறது.

5.    மண்ணின் கார அமிலத் தன்மை:
காரத் தன்மையுள்ள மண்ணில் அசோலாவின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. நுண்ணூட்டச் சத்துக்களுக்கு ஏற்ப அசோலாவின் வளர்ச்சி மாறுபடுகின்றது.

Wednesday, 3 September, 2014

செயல்படத் தொடங்கியது நாளந்தா பல்கலைக்கழகம்!மறுநிர்மாணம் செய்யப்பட்ட உலகப் புகழ்பெற்ற நாளந்தா பல்கலைக்கழகம், செப்டம்பர் 1ம் தேதி தனது முதல் வகுப்பறை செயல்பாட்டைத் துவக்கியது. தற்போதைக்கு, ஸ்கூல் ஆப் எகாலஜி அன்ட் என்விரன்மென்டல் ஸ்டடீஸ் மற்றும் ஸ்கூல் ஆப் ஹிஸ்டாரிகல் ஸ்டடீஸ் ஆகிய துறைகளில், சாதாரண முறையில் வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளன.

மேலும், இப்போது, பல்கலை வளாகத்தில் 15 மாணவர்களும், 11 ஆசிரியர்களும் உள்ளனர் என்று நாளந்தா பல்கலை துணைவேந்தர் கோபா சபர்வால் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது: தொடக்கத்தில் சாதாரண முறையில் வகுப்புகள் துவக்கப்படுவதற்கு காரணம், ஆசிரியர்களும், மாணவர்களும் புதிய சூழலில் பழகிக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். இப்பல்கலைக்கு, மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், வரும் செப்டம்பர் 14ம் தேதி வருகைத்தர உள்ளார்.

அப்போது பெரியளவிலான நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அந்த சமயத்தில் பல்கலையில் அனைத்து அம்சங்களும் ஒழுங்குபட்டிருக்கும் மற்றும் மீடியா கவனமும் எங்கள் மீது அதிகரித்திருக்கும்.

ஆகஸ்ட் 31ம் தேதி, மாணவர்களின் 3 நாள் ஓரியன்டேஷன் நிகழ்ச்சியை பல்கலைக்கழகம் நிறைவு செய்தது. உலகின் 40 நாடுகளிலிருந்து 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள், பல்வேறு பாடப்பிரிவுகளில், சேர்க்கைக்காக இப்பல்கலைக்கு விண்ணப்பித்தனர். ஆனால், அவர்களில், 15 பேர் மட்டுமே (ஜப்பான் மற்றும் பூடானிலிருந்து தலா ஒருவர்) தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

இப்பல்கலை வளாகம் அமைந்த ராஜ்கிர் என்ற இடம், பீகாரில் அமைந்துள்ள புத்தகயா என்ற பெளத்த புனித ஸ்தலத்திற்கு அடுத்து, இரண்டாவது பெளத்த மத முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். இப்பல்கலைக்கு, சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகள் பல்வேறான நிதியுதவியை அளித்துள்ளன மற்றும் அளிக்கவுள்ளன.

இதோடு சேர்த்து, இந்திய அரசாங்கம், 10 ஆண்டு காலகட்டத்திற்கு, ரூ.2,700 கோடியை ஒதுக்கியுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

Monday, 1 September, 2014

தீபாவளித் திருநாள் கவிதைப் போட்டி-2014: 2.தனிக்கவிதை - உழைப்பு!

 

காட்டைத் திருத்தி கழனிதந்தது உழைப்பு
நாட்டை திருத்தி நம்பிக்கைதந்தது உழைப்பு

ஏட்டில் படித்ததை கண்முன்தந்தது உழைப்பு
பாட்டில் படித்தாலும் உவகைதந்தது உழைப்பு

எளிமை வென்றிட வலிமைதந்தது உழைப்பு
வலிமை தொடர்ந்திட வழியும்தந்தது உழைப்பு

வாழ்வை போற்றிட வளமைதந்தது உழைப்பு
தாழ்வை மறந்திட திறமைதந்தது உழைப்பு

உயர்வாய் வாழ்ந்திட கற்றுத்தந்தது உழைப்பு
அயர்வாய் இருப்பின் உரமாய்இருந்தது உழைப்பு

மாற்றம் பெறவே விதையைதந்தது உழைப்பு
ஏற்றம் காணவே ஏணியைதந்தது உழைப்பு

நெல்லின் மணியாய் நிறைவைத்தந்தது உழைப்பு
சொல்லின் அழகாய் பெருமைதந்தது உழைப்பு

உயிர்கள் பருகிட உணவைதந்தது உழைப்பு
உண்மை உணர்ந்திட உரிமைதந்தது உழைப்பு

மண்ணை போற்றிட கற்றுத்தந்தது உழைப்பு
விண்ணை பெற்றிட வெற்றிதந்தது உழைப்பு 

வெற்றிக் கனியமுதை  பெற்றுத்தந்தது உழைப்பு
சுற்றி வந்தோருக்கும் சுறுசுறுப்புதந்தது உழைப்பு

வளத்தை பெருக்கிடும் நலத்தைதந்தது உழைப்பு
பலத்தை பெருக்கிடும் பாங்கைதந்தது உழைப்பு

பொறுப்பாய் நடந்திட ஊக்கம்தந்தது உழைப்பு
சிறப்பாய் வாழ்ந்திட முதலும்தந்தது உழைப்பு!

இப்படைப்பானது தீபாவளித் திருநாளை முன்னிட்டு திரு.ரூபன் & திரு.யாழ்பாவாணன் இணைந்து நடத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014  க்காக எழுதி பகிரப்பட்டுள்ளது.


நன்றி!

என்றும் அன்புடன்,
நடராஜன் வி.

தீபாவளித் திருநாள் கவிதைப் போட்டி-2014: 1.படக்கவிதை

 

மாலையிட காத்திருக்கும் மங்கையிவள் தானோ
மங்கையென பூத்திருக்கும் நங்கையினம் தானோ
சிறுவயது தோழனாய் சிரித்து மகிழ்ந்தவன் தானோ
சிறுதும்பி பிடித்தே சிந்தைக் கவர்ந்தவன் தானோ
பள்ளிப்பருவத்தே படித்து உதவியவன் தானோ
படித்தே உயர்ந்திட பாதை வகுத்தவன் தானோ

 
சிந்தை நினைவினில் சேர்ந்தே இருப்பவன் தானோ
எந்தை மனதிலும் ஏற்றம் கொண்டவன் தானோ
எளிய பண்பினால் உள்ளம் கவர்ந்தவன் தானோ
உயர்ந்த குணத்தினால் உலகம் போற்றுபவன் தானோ
நாட்டிற்கு சேவை ஆற்றும் நற்கனவான் தானோ
எல்லையை வல்லமையால் பாதுகாப்பவன் தானோ

 
எதிரியை வீரத்தினால் தோற்க செய்தவன் தானோ 
விடுமுறை நாள்தனிலே விரைந்திடுவான் தானோ
பூமாலை தந்தே  என்மனம் மகிழ்விப்பான் தானோ
பூச்சொரிந்து காத்திருக்கும் பூமகள் இவள் தானோ
காத்து நினைந்(த்)திருக்கும் நிலை அறிவான் தானோ
மங்கையிவள் ஏக்கம் முற்றும் உணர்ந்தவன் தானோ 


மாலை அணிவித்தே உள்ளம் கவர்வான் தானோ
காலத்தின் மதிப்பதனை காட்டி தந்தவன் தானோ
திங்கள் முடியும்முன் கண்ணன் வருவான் தானோ
குறித்த நாளினிலே தங்கத்தாலி தருவான் தானோ
இல்லறம் இனித்திட இணைந்தே  இருப்பான் தானோ
நல்லறம் போற்றிட பொது-நலம் விழைவான் தானோ 

இப்படைப்பானது தீபாவளித் திருநாளை முன்னிட்டு திரு.ரூபன் & திரு.யாழ்பாவாணன் இணைந்து நடத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014  க்காக எழுதி பகிரப்பட்டுள்ளது.


நன்றி!

என்றும் அன்புடன்,
நடராஜன் வி. 

Saturday, 23 August, 2014

கொழுப்பை குறைக்க வழிகள்!

  இன்றைய இளைய தலைமுறையாகட்டும், பெரியவர்களாகட்டும் அவர்களுடைய எடையை, குறிப்பாக வயிற்றை குறைக்க படும் பாடுகளை சொல்லி மாளாது. இவ்வாறு வயிற்றுப்பகுதி பெரியதாக இருப்பதை அதை விட பெரிய குறையாக கருதுபவர்கள் பலரும் உண்டு.

   இந்த குறையை தீர்க்க ஏதேனும் வழிமுறைகள் உள்ளனவா என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால் இதோ நாங்கள் சில குறிப்புகளை கொடுக்கிறோம். படியுங்கள் பயன் பெறுங்கள்.


சரியாக சாப்பிடுதல்:

       சரியான முறையில் சாப்பிட்டால் 80% கொழுப்பை நிச்சயம் குறைக்க முடியும். ஆரோக்கியமான மற்றும் சீரான உணவு முறையை பின்பற்றும் போது இதை நாம் சாதிக்க முடியும். தேவையான அளவு நுண் மற்றும் பெரும ஊட்டச் சத்துக்களை சாப்பிட்டால் கொழுப்பை குறைக்க முடியும். இடை உணவுகள், துரித உணவுகள் ஆகிய கடைகளில் வாங்கும் உணவுகளை அறவே தவிர்த்தால் தடியான வயிறை தட்டையான வயிறாக மாற்ற முடியும். இயற்கையான காய்கறிகள் மற்றும் பழங்கள், வேக வைத்த உணவு வகைகளை தேர்ந்தெடுத்து உண்ணுங்கள்.

தண்ணீர்:

       தாகம், அயர்ச்சி, பசி ஆகியவற்றைப் பற்றி தெளிவாக உணராத சிலர் பசிக்கும் போது நிறைய சர்க்கரை கொண்ட உணவை உண்டு எடையை தங்களை அறியாமலேயே அதிகப்படுத்திக் கொள்கின்றனர் அல்லது கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவை பசியில் விரைந்து உண்கின்றனர். இது தவறு. எப்போதும் ஒரு தண்ணீர் பாட்டிலை கையில் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். குறைந்தது 6 முதல் 8 டம்ப்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும். ஆனால் இது உங்கள் எடை மற்றும் வாழ்க்கை முறையை சார்ந்த விஷயமாக அமைகின்றது. இதை கண்டறிந்து உங்களுக்கு தேவையான தண்ணீரின் அளவை கண்டறிந்து அதை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.

உடற்பயிற்சி:

    பல மணி நேரம் உழைப்பு மற்றும் வெகு தூர ஓட்டப் பயிற்சி ஆகிய இரண்டும் தரும் பலன்களை விட சிறிது நேரம் கடினமான உடற்பயிற்சியில் ஈடுபடும் போது கொழுப்பு அதிகமாக குறையும். உதாரணமாக நீங்கள் திரெட் மில்லில் பயிற்சி மேற்கொள்ளும் போது அவ்வப்போது உங்கள் வேகத்தை கூட்டி சில வினாடிகள் அதை தொடர்ந்து பயிற்சி செய்த பின் மீண்டும் நமது பழைய வேகத்திற்கு திரும்பி வரும் போது சிறந்த அளவில் தொப்பை குறையும்.

சர்க்கரை வேண்டாம்:

     பொதுவாக நமக்கு கடைகளில் கிடைக்கும் சர்க்கரையை தவிர்ப்பதும் அல்லது குறைப்பதும் நல்லது. இதை தினமும் நமது உணவில் தவிர்த்தால் சிறந்தது. நாம் தினமும் உண்ணும் உணவில் சர்க்கரை நிறைய அளவு ஒளிந்திருக்கும். இதை உணர்ந்து, நாம் உண்ணும் உணவில் சாக்கரையை குறைப்பது நல்லது. இதற்கு பதிலாக தேன், பனங்கற்கண்டு மற்றும் அதிமதுர சாறு ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

சோடியம் உட்கொள்ளுதலை குறைத்தல்:

      உப்பை கண்டிப்பாக உணவில் சேர்த்து பயன்படுத்தும் இந்த காலத்தில் சோடியம் உப்பை தவிர, பொட்டாசியம் உப்பு, எலுமிச்சை உப்பு மற்றும் கடல் உப்பு ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இவற்றை வாங்கிப் பயன்படுத்தலாம். மிளகு மற்றும் இதர மூலிகைகளை பயன்படுத்துவதன் மூலம் உப்பு உட்கொள்ளுவதை தவிர்க்க முடியும்.

வைட்டமின் சி உணவுகள்:

     உடலில் உள்ள கொழுப்புகளை சக்தியாக மாற்றும் கார்னிடைன் என்ற பொருளை சுரப்பதற்கு உதவும் வைட்டமின் சி மிகவும் அவசியமானதாக உள்ளது. அது மட்டுமல்லாமல் மன அழுத்தத்தால் சுரக்கப்படும் கார்டிசாலையும் வைட்டமின் சி கட்டுப்படுத்துகிறது. இந்த கார்டிசால் தான் வயிற்று கொழுப்பு அதிகரிப்பதற்கு மிக முக்கிய காரணமாகும்.

கொழுப்பை குறைக்கும் இந்திய உணவுகள்:

    கொழுப்பை குறைப்பதற்கு இயற்கையான வழிகள் பலவும் உள்ளன. பூண்டு, வெங்காயம், இஞ்சி, சிவப்பு மிளகு, கோஸ், தக்காளி, மற்றும் இலவங்கப்பட்டை, கடுகு, கிராம்பு ஆகியவையும் கொழுப்பை கரைக்க உதவுகின்றன. சிறிது கிராம்பு, பச்சை பூண்டு மற்றும் ஒரு அங்குல அளவிற்கு இஞ்சி ஆகியவற்றை கலந்து தினமும் காலை சாப்பிட்டு வந்தால் கொழுப்பை நிச்சயம் கரைக்க முடியும். வெதுவெதுப்பான தண்ணீரில் கொஞ்சம் எலுமிச்சை சாறு மற்றும் தேனை கலந்து, காலையில் வெறும் வயிற்றில் அருந்துவதும் மிகப் பிரபலமான உடல் எடையை குறைக்கும் வழியாக பின்பற்றப்படுகின்றது. இது போன்று பல வழிகள் உண்டு.

  தேவையான ஆரோக்கியமூட்டும் கொழுப்புச் சத்தை சேர்த்துக் கொள்ளுதல் கெட்ட அல்லது தேவையற்ற கொழுப்புக்களை குறைக்கும் முயற்சியில் நாம் நல்ல கொழுப்பு வகைகளை சேர்க்க முயல வேண்டும். வெண்ணைய் பழம், ஆலிவ், தேங்காய் ஆகிய பருப்பு வகைகள் நல்ல கொழுப்புகளை கொண்டவையாகும்.

காலை உணவை கண்டிப்பாக சாப்பிடவும்:

     காலை உணவை தவிர்ப்பது உடல் எடையை குறைக்க உதவும் என்று நிறைய மக்கள் தவறாக நினைப்பதுண்டு. இது உடல் எடையை குறைக்காமல், உடல் வீக்கமடைய காரணமாகிவிடுகிறது. இதனால் வயிறு உப்புசமடைவது அதிகரித்து, பசி அதிகமாவதால் வயிற்றுக் கொழுப்பு மிகவும் அதிகமாகிறது. ஆகவே அவ்வப்போது நாம் சிறிது சிறிதாக உண்ணும் போது நமது உடல் செரிமானத்தை கட்டுப்படுத்தி உடல் எடையை மேம்படுத்த முடிகிறது. ஆகையால் உணவின் அளவை குறைத்து உண்ணும் நேரங்களை அதிகப்படுத்தி ஆரோக்கியமாக உடலை உருவாக்கிக் கொள்ளுங்கள். உலர்ந்த பழங்கள், பழ வகைகள் மற்றும் பச்சை அல்லது வேக வைக்காத காய்கறிகள் ஆகியவற்றை உண்ணலாம்.

தூக்கம்:

      உடல் எடையை மேம்படுத்த தூக்கம் மிகவும் அவசியமான ஒன்றாகும். அனைவருக்கும் 6 முதல் 8 மணி நேர உறக்கம் தேவைப்படுகிறது. உறங்காமல் இருப்பதும் உடல் எடையை கூட்டுவதாக உள்ளது. இத்தகைய எளிய வழிகளை பின்பற்றினால் வயிற்றுக் கொழுப்பை மட்டுமல்ல, முழு உடல் எடையையும் குறைத்து ஆரோக்கிய வாழ்வை வாழ முடியும். இதை முயற்சி செய்து வித்தியாசத்தை உணருங்கள்

Wednesday, 20 August, 2014

நீங்களே சோலார் ஸ்பிரேயர் தயாரிக்கலாம்!

நமக்குத் தேவையான எல்லா விஷயங்களும், கைக்கு எட்டுற தொலைவுலதான் இருக்கு. என்ன... கொஞ்சம் மெனக்கெட்டு யோசிச்சா, எல்லாமும் சாத்தியப்படும்''

தன் அனுபவத்திலிருந்து இப்படி அழகாகப் பாடம் சொல்கிறார் உடையாம்பாளையம், கார்த்திகேயன். இவர், தன் சொந்த முயற்சியில் சூரிய சக்தியில் இயங்கும் விசைத் தெளிப்பான் (சோலர் பவர் ஸ்பிரேயர்) ஒன்றை மிகஎளிதாக வடிவமைத்து, அதன் மூலம் நிறைந்தப் பலனை அடைந்து கொண்டிருக்கிறார்.


உடையாம்பாளையம், கோயம்புத்தூர் மாநகர எல்லைக்குள் வரும் பகுதி, இதையே சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு... காய்கறி, கீரை, மலர் சாகுபடி என்று தினந்தோறும் காசு தரும் 'மார்க்கெட் வெள்ளாமை’ செய்து நல்ல வருமானமும் பார்த்து வருகிறார்கள் இப்பகுதி விவசாயிகள்.  ரசாயன முறையில் விவசாயம் செய்தாலும் சரி... இயற்கை வழியில் செய்தாலும் சரி... விசைத் தெளிப்பானின் பயன்பாடு முக்கியமே. ஆனால், பெட்ரோல் விலை உயர்வு, மின்சாரத் தட்டுப்பாடு என்று பலவும் தாண்டவமாடுவதால்... விசைத் தெளிப்பான்களைப் பயன்படுத்துவதில் ஏக பிரச்னை. 'என்ன செய்யலாம்' என்று யோசித்தபோதுதான் நண்பர்கள் உதவியுடன் 'சூரியசக்தி விசைத் தெளிப்பான்' உருவாக்கிவிட்டார் கார்த்திகேயன்.

தன் கீரை வயலுக்கு மருந்து தெளித்த கையோடு, பக்கத்தில் உள்ள நண்பரின் செண்டுமல்லித் தோட்டத்தில் தெளித்துக் கொண்டிருந்த நேரத்தில் அவரைச் சந்தித்தோம். ''நாங்க எல்லாம் பட்டணத்து விவசாயிங்க, ஒரு காலத்துல பருத்தி, வாழை, கரும்புனு செழிப்பான வெள்ளாமை கொடிகட்டி பறந்த ஊருங்க இது. நகரமயமாக்கல்ல தொழிற்சாலை, குடியிருப்புகள்னு... காடு, கழனியெல்லாம் கட்டடமாயிடுச்சு. இதுலயும் ஒரு நன்மை இருக்குங்க. என்னைப் போல சிலர் விவசாயத்தை இன்னும் விடாம செய்யறதால... நல்ல லாபம் பார்க்கிறோம். மக்கள் தொகை பெருகப் பெருக, அவங்களுக்கான காய்கறி தேவையையும் மனசுல வெச்சு சாகுபடி செய்து, உள்ளூரிலேயே உற்பத்திப் பொருளுங்கள வித்து தீர்த்துடறோம். ஆனா, ஆள் பற்றாக்குறை இருக்கறதால... கால் ஏக்கர், அரை ஏக்கர்னுதான் விவசாயம் பண்ண முடியுதுங்க'' என்று ஆதங்கப்பட்டவரிடம், சூரியசக்தி விசைத் தெளிப்பான் உருவாக்கியது பற்றி கேட்டோம்.

படுத்தி எடுத்த ஸ்பிரேயர்கள்!

''அரை ஏக்கரில் பல ரக கீரைகளைப் போட்டிருக்கேன். இன்னொரு அரை ஏக்கரில் வாழை நட்டிருக்கேன். பக்கத்து வயல்கள்ல செண்டுமல்லி, கோழிக்கொண்டைனு மலர் சாகுபடியை நிறையபேரு செய்றாங்க. அவங்க தோட்டத்துப் பயிருக்கெல்லாம் பூச்சிக்கொல்லி தெளிக்கிற வேலையும் நமக்கு வந்து சேரும். மேலும் கீழும் கையால இழுத்து இழுத்து, ஹேண்ட் ஸ்பிரேயர் மூலமாதான் ஆரம்பத்துல தெளிச்சேன். ஆனா, ஒரு பத்து டேங் அளவுக்குத் தெளிக்கறதுக்குள்ள கை வலி எடுத்துடும். 'சரி, பவர் ஸ்பிரேயர்’ல தெளிக்கலாம்னு அதையும் செஞ்சு பார்த்தேன். பெட்ரோல் விக்கிற வெலைக்கு, என்னை மாதிரி சின்ன அளவுல விவசாயம் பண்றவங்களுக்கு கட்டுப்படியாகல. போதாக்குறைக்கு அது போடுற சத்தம் அக்கம்பக்கத்துல தொந்தரவா இருக்குனு குற்றச்சாட்டு வேற. வெயிட்டும் ரொம்ப அதிகம். பொழுதன்னிக்கும் சுமந்து தெளிக்கறது ஆகற காரியம் அல்ல.

'மாற்று வழியா என்ன செய்யலாம்?'னு யோசிச்சப்பதான், 'பேட்டரி ஸ்பிரேயர், மானிய விலையில் விவசாய ஆபீஸ்ல கிடைக்கும்'னு கேள்விப்பட்டு முறைப்படி பதிவு செய்து வாங்கினேன். சார்ஜர் பேட்டரியில இயங்குற அந்த ஸ்பிரேயர்,

10 லிட்டர் கொள்ளளவு கொண்டது. ரெண்டு மணி நேரம் சார்ஜ் ஏத்தினா, ஒரு மணி நேரம் (100 லிட்டர்) தெளிக்கலாம். அப்புறம் வீட்டுக்கு வந்து ரெண்டு மணி நேரம் சார்ஜ் ஏத்தணும். கரன்ட் கட் பயங்கரமா இருக்கற நேரம்கிறதால... சார்ஜ் ஏத்த முடியாம போய், பாதி வெள்ளாமை காலி ஆயிடுச்சு.

நிம்மதி தந்த நிரந்தரத் தீர்வு!

'நிரந்தரத் தீர்வு வேணும்'னு தேடினப்போதான்... 'சோலார் பவரை பயன்படுத்தி வீட்டு லைட், விவசாய பம்ப்செட் எல்லாத்துக்கும் மின்சாரம் தயாரிக்க முடியும்ங்கிறப்ப... ஏன் சோலார் பவர் ஸ்பிரேயர் உருவாக்கக் கூடாது'னு தோணுச்சு. உடனே, புதுசா ஒரு பேட்டரி ஸ்பிரேயர் (7 ஏ.ஹெச். பேட்டரி உள்ளது), 10 வாட்ஸ் சோலார் பேனல் (பள்ளிக்கூட ஸ்லேட் அளவில் இருக்கும்) இதையெல்லாம் வாங்கினேன். அந்த பேனலை, ஸ்பிரேயர் டேங்க்ல பொருத்தினேன். சோலார் ஸ்பிரேயர் தயாராயிடுச்சு. இதுக்கு மொத்தமே. வெறும் 4,600 ரூபாய்தான் செலவு. ஆனா வரவு... பல ஆயிரங்கள்'' என்று குஷியோடு சொன்ன கார்த்திகேயன்,


''காலையில 7 மணியில இருந்து சாயந்திரம் 3 மணி வரை தொடர்ந்து, இதைப் பயன்படுத்தி பூச்சிக்கொல்லி தெளிக்கிறேன். கரன்ட் பத்தி கவலைப்படாம சரியான நேரத்துல தெளிச்சு பயிர்களைக் காப்பாத்த முடியுது. சில பயிர்களுக்கு அதிகாலை நேரத்துலதான் மருந்து தெளிக்கணும். அதுக்கு தோதா முந்தின நாள் சாயந்திரமே கரன்ட் மூலமா சார்ஜ் போட்டு வெச்சுட்டா... தெளிக்கலாம். விடிஞ்சதும் சார்ஜ் ஏத்துற வேலையை ஆட்டோமேட்டிக்கா சோலார் பேனல் கவனிச்சுக்கும்.

டெல்டா மாவட்டங்கள்ல, மின்சாரம் சரிவர கிடைக்காத இந்தக் காலத்துல... ஹேண்ட் ஸ்பிரேயர், பவர் ஸ்பிரேயர்னு வெச்சுக்கிட்டு ரொம்ப சிரமப்பட்டுதான் அங்கெல்லாம் விவசாயிங்க நெல்லு பயிர் பண்றாங்க. அவங்களுக்கு இது பயன்தரும். வாடகைக்குத் தெளிக்கறவங்களுக்கும் நல்ல வருமானத்தைக் கொடுக்கும். பஞ்சகவ்யா, ஜீவாமிர்தக் கரைசல்னு இயற்கை இடுபொருட்களைப் பயன்படுத்துறவங்க... நல்லா வடிகட்டி பயன்படுத்தணும்'' என்று ஆலோசனைகளையும் தந்தவர், 

நிறைவாக,

''சோலார் மாதிரியான இயற்கை சக்திகள் குறித்த விழிப்பு உணர்வு மக்கள்கிட்ட ரொம்ப குறைவாவே இருக்கு. என்னை மாதிரி சின்ன விவசாயிகளும் சூரியசக்தியைப் பயன்படுத்தி பலனடையறதுக்குத் தேவையானத் திட்டங்கள், முயற்சிகள்னு அரசாங்கம் முழு உத்வேகத்துடன் செயல்படுத்தினா... எரிபொருளுக்காக எங்கயும் நாம கையேந்தத் தேவையே இருக்காது'' என்று அழுத்தம் கொடுத்துச் சொன்னார்.

Sunday, 10 August, 2014

செவ்வாய் ஆராய்ச்சியில் தமிழக மாணவர்:அமெரிக்க விஞ்ஞானிகள் முன் விளக்கம்

செவ்வாய் கிரகத்திற்கு அருகில், விண்வெளி வீரர்களை அனுப்புவதற்காக, சர்வதேச திட்ட வடிவமைப்புப் போட்டியில் பங்கேற்க, தமிழக மாணவர் விஷ்ணு பிரசாத் ராம், ஆக., 9ல் அமெரிக்கா செல்கிறார்.


அமெரிக்காவின் நாசா மற்றும் மார்ஸ் சொசைட்டி இணைந்து, 2018 மே மாதத்தில், செவ்வாய் கிரகத்திற்கு அருகில், இரண்டு விண்வெளி வீரர்கள் செல்லும் வகையில், திட்டம் வடிவமைத்து உள்ளது. இதை மேம்படுத்தும் வகையில், சர்வதேச அளவில் மாணவர்களுக்கான திட்ட வடிவமைப்புப் போட்டியை நடத்தியது.இவற்றில், சிறந்த 10 திட்டங்களில் ஒன்றாக, காஞ்சிபுரம் ஸ்ரீவெங்கடேஸ்வரா பொறியியல் கல்லுாரி மாணவர்களின் திட்டம் தேர்வு செய்யப்பட்டது.


இதுகுறித்து, மதுரையில் திட்ட ஆய்வுக்கு உதவிய, இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி சிவசுப்ரமணியன் கூறியதாவது:ஸ்ரீவெங்கடேஸ்வரா பொறியியல் கல்லுாரியின், வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த, எட்டு மாணவர்கள் குழுவாக விண்ணப்பித்தனர். இவர்களின் தொழில்நுட்ப திட்டத்தை, திருவனந்தபுரம் விண்வெளி ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகளிடம் விளக்கினர். வரும், ஆக., 9ம் தேதி, அமெரிக்காவின் ஹூஸ்டன் சென்று, அங்குள்ள விஞ்ஞானிகள் முன், மாணவர் விஷ்ணுபிரசாத் ராம், ஆய்வுத்திட்டத்தை விவரிக்கிறார். இம்மாணவர், விருதுநகரைச் சேர்ந்தவர்.இவ்வாறு, அவர் கூறினார்.

ஆய்வு குறித்து, மாணவர் விஷ்ணுபிரசாத் ராம் கூறியதாவது:வரும், 2018 மே மாதத்தில், பூமியில் இருந்து, இரண்டு விண்வெளி வீரர்கள், செவ்வாய்க்கு அருகில் சென்று, 501 நாட்களுக்குப் பின், 2019 ஜூலையில் பூமிக்கு திரும்பும் வகையில், திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.வீரர்கள் மற்றும் அவரது உணவு அடங்கிய, இரண்டு ராக்கெட் தனித்தனியாக செல்லும் வகையில், நாசா திட்டம் தயாரித்து உள்ளது. எங்களது திட்டத்தில், ஒற்றை ராக்கெட் மூலம், வீரர்களையும், உணவை எடுத்துச் செல்லும் திட்டம் தயாரித்துள்ளோம். 501 நாட்களுக்கு, 3,000 கி.கி., தண்ணீர் தேவைப்படும். ஆனால் நீரில் இருந்து ஆக்சிஜனைப் பிரித்து, அதையே சுவாசிக்கவும், சிறுநீரைப் பிரித்து சுழற்சி முறையில் பயன்படுத்தவும் செய்தால், 275 கி.கி., தண்ணீர் போதும்.

எதிர்காலத்தில், செவ்வாயில் இறங்கி ஆராய்ச்சி செய்து, மீண்டும் பூமிக்கு வீரர்கள் திரும்பி வர, மற்றொரு உந்துவிசை தேவை. எனவே, கிரையோஜெனிக் இயந்திரத்தை, கூடுதலாக அனுப்புவதற்கு, திட்டம் தயாரித்து உள்ளோம். செவ்வாயில் இருந்து திரும்பும் போது, வினாடிக்கு, 15.66 கி.மீ., ஆக வேகத்தை அதிகப்படுத்தி உள்ளோம். அவற்றின் பாதையில், 6.25 டிகிரி கோணத்தில் பாதையை, சற்று மாற்றம் செய்யும் போது, வீரர்களின் மீது, வெப்பத்தின் தாக்கம் குறையுமாறு வடிவமைத்து உள்ளோம். இதை, நேரடியாக விளக்குவதற்காக அமெரிக்கா செல்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Sunday, 13 July, 2014

முகநூல் (ஃபேஸ்புக்):

முகநூல் (ஃபேஸ்புக்):


ஃபேஸ்புக் (Facebook) 2004இல் தொடங்கிய இணையவழி சமூக வலையமைப்பு நிறுவனமாகும். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவர் மார்க் சக்கர்பர்க் ஹார்வர்ட் மாணவர்களுக்கு ஆரம்பித்து பின்பு வேறு ஐவி லீக் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் அனுமதி கிடைத்தது. இன்றைய ஃபேஸ்புக்கில் 13 வயதான நபர்கள் சேரலாம். அலெக்சா நிறுவனத்தின் மதிப்பீட்டின் படி இணைய முழுவதிலும் ஃபேஸ்புக் தான் இரண்டாவது மிகப் பரவலமான இணையத்தளமாகும்.

முகநூல்:

பேஸ்புக் அல்லது முகநூல் என்பது 2004ல் தொடங்கப்பட்ட இணையவழி சமூக வலையமைப்பு. ஜுலை 2011 கணக்கெடுப்பின்படி இதில் 800 மில்லியன் உ'பயோகிப்பாளர்கள் உள்ளனர். 13 வயதிற்கு மேற்பட்டவர்கள் முகநூலில் தங்களின் பெயரைப் பதிவு செய்து கொண்டு முகநூலில் உள்ள மற்றவர்களை நண்பர்களாக்கிக் கொண்டு தங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொள்வர்.

வரலாறு:

முகநூலை மார்க் சக்கர்பர்க் தன் நண்பர்களான எடுடாரோ சாவ்ரின், டஸ்டின் மாஸ்கோவிட் போன்ற ஹார்வர்ட் நண்பர்களுடன் தொடங்கினார். பிறகு ஐவி லீக், ஸ்டான்போர்டு பல்கலைக்கழக மாணவர்களும் முகநூலில் சேர்ந்தனர். பின்னர் ஆப்பிள், மைக்ரோசாஃப்ட் நிறுவன ஊழியர்களும் முகநூலில் சேர்ந்தனர். 2008ல்,முகநூலின் தலைமையகம் அயர்லாந்து நாட்டின் டப்ளின் நகரில் தொடங்கப் பட்டது. 2010ல், முகநூலின் மதிப்பு 41 மில்லியன் டாலராக உயர்ந்து, கூகிள், அமேசானைத் தொடர்ந்து அமெரிக்காவின் மூன்றாவது பெரிய இணைய தள நிறுவனமாக உயர்ந்தது. 2011ல் முகநூலின் தலைமையகம் மென்லோ பார்க், கலிபோர்னியாவிற்கு மாற்றப்பட்டது. 13 வயதிற்கு மேற்பட்ட, சரியான மின்னஞ்சல் முகவரி உள்ள யாரும் முகநூலில் அங்கத்தினர் ஆகலாம்.

நிறுவனத்தின் வருமானம்:

முகநூல் நிறுவனம் 2,000 ஊழியர்களுடன், 15 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. இதன் நிறுவனர்கள், மற்றும் முன்னாள்,இன்னாள் ஊழியர்களும் இதில் பங்குதாரர்களாக உள்ளனர். இந்த இணையதளத்தின் வருமானம் விளம்பரங்களின் மூலமாகவே கிடைக்கிறது. மற்ற பெரிய இணையதளங்களை விட விளம்பரங்களைப் பார்க்கும் கட்டணம் இதில் குறைவு. ஏனென்றால் இந்த இணையதளத்தை உபயோகிப்போர் இளைஞர்களாக இருப்பதால் அவர்களுக்கு நண்பர்களுடன் கலந்துரையாடவே விருப்பம். விளம்பரங்களைப் பார்க்க அவர்கள் பெரும்பாலும் விரும்புவதில்லை.

இணையதளம்:

முகநூல் உபயோகிப்பாளர்கள் தங்களுடைய புகைப்படம், சொந்த விருப்பங்கள், தொடர்பு கொள்ளும் விபரம் போன்ற தகவல்களைக் கோப்புகளாக இத்தளத்தில் பதிவு செய்யலாம். தான் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட தகவல்களை யாரெல்லாம் அறிந்து கொண்டார்கள், யாரெல்லாம் தன்னைப் பற்றிய தகவல்களைத் தேடினார்கள் என்று அறிந்து கட்டுப்படுத்தலாம். இது மை ஸ்பேஸ் (என்னுடைய இடம்) என்ற இணையதளத்தை ஒத்து இருந்தாலும், முகநூலில் உண்மையான அடையாளங்கள் கேட்கப் படுகிறது. முகநூலில் நண்பர்களுடன் தகவல் பரிமாறும் சுவர், புகைப்படங்கள் பதிவு செய்யும் வசதி, நண்பர்களின் தற்போதைய நடவடிக்கை ஆகியவற்றை குறிப்பிடும் தனித்தனி வசதியும் உண்டு. 200 புகைப்படங்கள் வரை ஒரு ஆல்பத்தில் சேகரிக்கும் வசதியும் உண்டு. முகநூல் மூலம் நண்பர்களுக்கு 1 டாலர் செலவில் பரிசுகளை முக்கியத் தகவல்களுடன் அனுப்பலாம். சுமார் 60 நாடுகளில் உள்ள 150 மில்லியன் மக்கள் 200 கைபேசி ஆபரேட்டர்கள் மூலம் நவீனக் கைபேசியில் முகநூல் இணையதளத்தை பயன்படுத்தி வருகின்றனர். ஏப்ரல் 2011ல் முகநூலில் அரட்டை அடிப்பதை நேரடிக் குரல் அழைப்பு மூலம் உலகெங்கும் உள்ள நண்பர்களுடன் பேசும் முறை கொண்டு வரப்பட்டது. ஜூலை 2011ல், ஸ்கைப் என்ற நிறுவனத்தின் உதவியுடன் நேரடி ஒளிப்பதிவாக ஒருவருக்கொருவர் பேசுவதைப் பார்க்கும் முறையைக் கொண்டு வந்தனர்.

வரவேற்பு:

இந்த இணையதளம் 'உலகின் சிறந்த 100 இணையதளங்களுள்' ஒன்று என்ற விருதை பி.சி. நாளிதழ் மூலம் 2007ல் வென்றது. 2008ல் 'மக்கள் குரல் விருது' கிடைத்துள்ளது. நியூஜெர்சி மாணவர்களின் கருத்துப்படி இளங்கலை மாணவர்கள் விரும்பும் இணையதளங்களுள் முகநூல் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. 2010ல் சிலிக்கன் பள்ளத்தாக்கில் உள்ள நிறுவனங்களில் சிறந்த படைப்புக்கான விருதைப் பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவின் உச்ச நீதிமன்றம் அனுப்பும் நீதிமன்ற சம்மன் அனுப்பக்கூடிய சிறந்த வழியாக முகநூலைத் தேர்ந்தெடுத்துள்ளது.

பயன்படுத்தும் முதல் 10 நாடுகள்:

ஆங்கில மொழி பேசும் கனடா,அமெரிக்கா ஐக்கிய ராஜ்ஜியம் ஆகிய நாடுகளிலும், வட அமெரிக்கா,மத்திய கிழக்கு நாடுகளிலும், ஐரோப்பா, ஆசிய பசிபிக் நாடுகளிலும் முகநூல் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. அமெரிக்கா,இந்தோனேசியா, இந்தியா, ஐக்கிய ராஜ்ஜியம், துருக்கி,பிரேசில்,மெக்ஸிகோ, பிலிப்பைன்ஸ்,பிரான்ஸ்,ஜெர்மனி போன்ற நாடுகள் முகநூல் பயன்பாட்டில் முதல் 10 இடங்களைப் பெறுகின்றன.

விமர்சனம்:

சீனா,வியட்நாம், ஈரான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான்,சிரியா,பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இந்த இணையதளம் இஸ்லாமியத்துக்கு எதிரானது, மத வேற்றுமையை ஏற்படுத்தக்கூடியது என்று தடை செய்துள்ளனர். 50% பிரிட்டிஷ் கம்பெனிகளில் வேலை நேரத்தில் முகநூல் இணையதளம் பார்ப்பதற்கு தடை விதித்துள்ளனர்.அழையா விருந்தாளிகளால் சில அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டதால் ஜெர்மனியில் முகநூலைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.ஃபேஸ்புக்கில் 18 வயதுக்குட்பட்ட இளையோர் தங்கள் பதிவுகளை பொதுவெளியில் பகிர்வதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு அக்டோபர் , 2013 இல் தளர்த்தப்பட்டது.

சமூகத்தில் முகநூலின் தாக்கம்:

வியாபாரிகளும், நிறுவனங்களும் தங்களுடைய பொருள்களை மக்களிடம் அறிமுகப்படுத்தும் வழியாக முகநூலைக் கருதுகின்றனர்.
ஒரே எண்ணம்,விருப்பம் உடையவர்களை ஒன்றிணைக்கும் தளமாக உள்ளது. பிரிந்து போன குடும்பங்கள் இந்த முகநூல் மூலம் ஒன்று சேர்ந்த நிகழ்வுகளும் உண்டு. சிலர் நண்பர்கள், உறவினர்களிடம் தொடர்பு கொள்ளும் தளமாகக் கருதினாலும், வேறு சிலர் நேரடித் தொடர்பு இல்லாததால் முகநூல் மூலம் சமூகக் குற்றங்கள் நடக்க வாய்ப்பு இருப்பதாகக் கருதுகின்றனர். விவாகரத்து, குழந்தைப் பேறு இல்லாமை போன்றவற்றிற்கும் இந்த இணையதளம் காரணமாக இருக்கிறது என்று கருதுவோர் சிலரும், இதை மறுப்பவர் சிலரும் உண்டு. 'த சோசியல் நெட்வொர்க்' என்ற பெயரில் முகநூலைப் பற்றிய திரைப்படம் ஒன்றும் வெளி வந்துள்ளது.

பாதுகாப்பு:

முக நூல் பக்கத்தில் சில சமூக விரோதிகளின் தொந்தரவுகளைத் தவிர்க்க , முக நூல் சம்பந்தமாக புகார் எதுவும் தெரிவிக்க, தமக்கு வேண்டாத நட்பை நீக்க ("Unfriend”) என பல நல்ல விஷயங்களும் :) இருக்கு. மற்றும் எவரின் செய்தியும் வேண்டாம் என்றால் (block) என்ற விருப்ப பகுதியை கவனத்தில் கொண்டு தடை ஏற்படுத்த முடியும்.

அரசியலில் தாக்கம்:

ஜனவரி 2008 அமெரிக்க அரசியலில் குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சியின் 'நேருக்கு நேர்' கருத்தரங்கை நடத்தியதால் அமெரிக்கத் தேர்தலில் பெரிய மாற்றம் உண்டாக முகநூல் காரணமானது.
பிப்ரவரி 2008ல் ' ஒரு மில்லியன் குரல்கள் FARC க்கு எதிராக' என்று ஆயிரக்கணக்கான கொலம்பிய மக்களை கொலம்பிய ஆயுதப்புரட்சிப் படைக்கு எதிராக ஒன்று திரட்டியதிலும் முக்கியப் பங்கு வகித்தது.
2011 எகிப்திய புரட்சியில் இந்த இணையதளம் முக்கியப் பங்கு வகித்ததால், ஒரு எகிப்தியக் தம்பதியர் தம் குழந்தைக்கு பேஸ்புக் என்று பெயரிட்டுள்ளனர்.

"ஃபேஸ்புக்கும் போதை பொருள் போல தான்(நாம் பயன்படுத்தும் ஆங்கில மருத்துவத்தை போல :( ) அளவாய் பயன்படுத்தினால் வளமாய் வாழலாம்." இது அறிஞர் சொன்னதல்ல; அடியேன் அனுபவம் சொன்னது.

இப்ப புரியுதுங்களா ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்கள் 300 மில்லியன் அமெரிக்க டாலர் (2008 மதிப்பு) வருமானம் பெற்று தரும் ஃபேஸ்புக் சட்டை போடாத முகநூல் ஊழியர்கள்... :) :( :p

உதவி/நன்றி: விக்கிபீடியா & இணையம்.

ஆக்கம்: 
வி.நடராஜன்

Monday, 16 June, 2014

கூகுள் கண்ணாடி (Google Glass):

அமெரிக்காவில் விற்பனைக்கு வந்துவிட்ட கூகுள் கண்ணாடிகள்-இனி கம்ப்யூட்டர்களுக்கும், லேப்டாப்களுக்கும், டேப்லெட்டுகளுக்கும் கூட டாடா பைபை சொல்லி விடலாம்.


தொழில்நுட்பத்தில் அடுத்த மைல் கல்லாக கூகுள் கண்ணாடிகள் வந்துவிட்டன. அவை இன்று முதல் அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதுஉலகில் அறிவியலில். புரட்சி என்பது, மின்சாரத்துக்கு பிறகு கம்ப்யூட்டர் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் சாத்தியமானது. இன்று இன்டர்நெட்டின் மூலம் உலகின் எல்லா தகவல்களையும் ஒரு நொடியில் பெற்று விட முடிகிற அளவுக்கு அறிவியல் முன்னேறி உள்ளது.

அதே போல் ஒரு நாட்டின் மூலை முடுக்குகளை கூட இன்டர்நெட் மூலம் பார்க்க முடியும். ஆரம்பத்தில் மிக பிரமாண்டமாக இருந்த கம்ப்யூட்டர்கள் படிப்படியாக முன்னேற்றம் அடைந்து கையடக்க செல்போன் அளவுக்கு மாறிவிட்டன.இப்போது கூகுள் நிறுவனம் வடிவமைத்துள்ள கண்ணாடி, உலகத்தை நம் கண்ணுக்கு அருகிலேயே கொண்டு வந்து நிறுத்தி உள்ளது. இதுவரை சோதனை முயற்சியாக செய்யப்பட்டு வந்த கூகுள் கண்ணாடிகளை இன்று முதல் அமெரிக்காவில் விற்பனைக்கு கொண்டுவர கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

தற்போது 1500 டாலர் விலையில் கிடைக்கும் இந்த கண்ணாடிகளை அமெரிக்கவாசிகள் அணிந்து கொண்டு நாட்டின் எந்த பகுதியில் இருந்து கொண்டு வேண்டுமானாலும் இன்டர்நெட்டில் வலம் வரலாம். இனி கம்ப்யூட்டர்களுக்கும், லேப்டாப்களுக்கும், டேப்லெட்டுகளுக்கும் கூட டாடா பைபை சொல்லி விடலாம்.

Saturday, 7 June, 2014

உலகின் பணக்காரக் கிராமம்:

மதாபர்க்காரர்கள் சிலர் தங்கள் ஊரை இந்தியாவின் பணக்காரக் கிராமம் என்று சொல்கிறார்கள்; சிலர் ஆசியாவின் பணக்காரக் கிராமம் என்று சொல்கிறார்கள்; சிலர் உலகின் பணக்காரக் கிராமம் என்று சொல்கிறார்கள். இது மூன்றிலுமே கொஞ்சம் உண்மை இருக்கலாம். நிச்சயம் இந்தியாவில் இப்படிப்பட்ட கிராமத்தை வேறு எங்கும் பார்க்க முடியாது. மதாபரில் வீடுகள் குறைவு; எல்லாமே பங்களாக்கள்தான். ஒவ்வொரு பங்களாவைப் பற்றியும் சுவாரஸ்யமான பல கதைகளைச் சொல்கிறார்கள். “இந்த வீட்டில் திரையரங்கம் உண்டு. அதன் திரை லண்டனிலிருந்து கப்பலில் கொண்டுவரப்பட்டது. இந்த வீட்டின் மூன்றாம் மாடியில் நீச்சல் குளம் இருக்கிறது. பளிங்குக் கற்களால் ஆனது அது. அந்த வீட்டில் பெரிய திறந்தவெளி வராந்தாவில் எவ்வளவு வெயில் தகிக்கும்போதும் நடக்கலாம்; தரைக்குப் போடப்பட்டிருக்கும் கல் எவ்வளவு சூட்டையும் உள்வாங்கிக்கொண்டு குளிர்ச்சியாகவே இருக்கும்; ராஜஸ்தானிலிருந்து வரவழைத்தார்கள்.” 

 திரைகடல் ஓடிய முன்னோடிகள்: 

சுமார் எட்டு நூற்றாண்டுகளுக்கு முன்னால் கட்ச் பிரதேச மிஸ்திரிகளால் உருவாக்கப்பட்ட கிராமங்களில் ஒன்று மதாபர். கடல் கடந்து வாணிபத்துக்குச் செல்வது இந்த ஊர்க்காரர்களின் ரத்தத்தில் ஊறியது. “அமெரிக்கா, கனடாவில் தொடங்கி ஆப்பிரிக்கக் கண்டத்தின் சோமாலியா, உகாண்டா வரை எங்கள் ஊர் லேவே படேல்கள் குடியேறியிருக்கிறார்கள். வெளிநாட்டு வாணிபத்தில் மட்டும் இல்லை; உள்நாட்டு வாணிபத்திலும் முன்னோடிகள். ஆங்கிலேயர் காலத்தில் ரயில்வே ஒப்பந்தப் பணிகளை எடுப்பதிலும் நிலக்கரிச் சுரங்கங்களை ஏலத்தில் எடுப்பத்திலும் முன்னின்ற சமூகம் இது. கட்ச் மாகாணத்தில் அரச குடும்பம் தவிர, கார் வைத்திருந்த முக்கியஸ்தர்களில் ஒருவரான ராய் சாகிப் விஷ்ரம் வால்ஜி ரதோர் எங்களவர்” என்கிறார் தேவ் படேல்.அந்த வசதியான பின்னணியை இன்றும் ஊர் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. சிக்கல் என்னவென்றால், பெரும்பாலான வீடுகளில் பூட்டு தொங்குகிறது அல்லது ஜன்னல் வழியே பெரியவர்கள் எட்டிப்பார்க்கிறார்கள். 

 முடியாமல் தொடரும் பயணம்:

 ‘‘ஊரோடு மிக நெருக்கமான மனப் பிணைப்பைக் கொண்டவர்கள் எங்கள் ஊர்க்காரர்கள். ஒவ்வொரு தலைமுறையிலும் வெளியே செல்லும்போதும், ‘இதோடு திரும்பிவிடுவேன். இனி விவசாயத்தைப் பார்த்துக்கொண்டு ஊரோடு இருந்துவிடுவேன்’ என்று சொல்லித்தான் கிளம்புவார்கள். ஆனால், அவர்கள் திரும்ப முடிவதே இல்லை” என்கிறார்கள். இதில் என்ன ஆச்சரியம்? எல்லாக் கிராமங்களிலும் இதுதானே நடக்கிறது என்றுதானே கேட்கவருகிறீர்கள்? இல்லை. இங்கே விஷயம் இன்னும் கொஞ்சம் இருக்கிறது. 

போன இடத்திலேயே ஐக்கியமாகிவிடுவதில் உண்மையாகவே மதாபர்க்காரர்களுக்கு ஆர்வம் இல்லை. அதனாலேயே அவர்களுடைய சேமிப்பு எல்லாவற்றையும் இங்கேதான் சேமிக்கிறார்கள். இந்தச் சின்ன ஊரில் கிட்டத்தட்ட 20 வங்கிகள் இருக்கின்றன; ரூ. 2,500 கோடி வைப்புநிதி இருக்கிறது. கிராமத்தின் சாலைகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் எல்லாவற்றிலும் தங்கள் பங்களிப்பைத் தந்து ஜொலிக்கவைத்திருக்கிறார்கள். “எங்களூரில் முதல் பள்ளிக்கூடம் திறந்து 130 வருஷங்கள் ஆகின்றன. 1900-லேயே முதல் பெண்கள் பள்ளிக்கூடம் இங்கே உருவாகிவிட்டது” என்கிறார்கள்.

 “அப்போதிலிருந்தே எல்லோருக்கும் நாம் என்றைக்காக இருந்தாலும் ஊர் திரும்பிவிடுவோம் என்பதுதான் எண்ணம். ஆனால், காசு புலிவால்போல மாறி அவர்களைப் பிடித்துக்கொண்டிருக்கிறது”என்கிறார்கள். மதாபர் வயல்களில் வயோதிகத்தைத் தாங்கி நிற்கும் பெரியவர்களில் ஒருவர் ரூடா லாதா. “என் மகன் வருவான், வருவான் எனக் காத்திருந்து காலம் கடந்துவிட்டது. இப்போது என் பேரனுக்காகக் காத்திருக்கிறேன். எவ்வளவோ சொத்துகள் இருக்கின்றன. என்றாலும் ஒரு கிராமத்தானுக்கு நிலம்போலச் சொத்து வருமா? அதுதான் அவன் வரும் நாளில் இந்த நிலம் அவனுக்குத் தயாராக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த வயதில் நான் வயலில் நின்றுகொண்டிருக்கிறேன்” என்பவர், நிலத்தை வெறித்துப்பார்க்கிறார்.

கொஞ்சம் இடைவெளி விட்டு, “நம்முடைய திறமைகளை உள்ளூருக்குள் பயன்படுத்திக்கொள்ள நம்முடைய அரசாங்கங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லையே?” என்கிறார். “நாம் இப்போது இரட்டை மனநிலையில் வாழ்கிறோம். நம் புத்தி நகரத்திலும் ஆன்மா கிராமத்திலும் கிடக்கிறது. ஊர் திரும்பினால், அனுபவிக்கும் வசதி பறிபோய்விடுமோ எனும் பயம் நம் கனவுகளைக் கவ்விக்கொண்டிருக்கிறது. இது முடிவே இல்லாத ஆட்டம்” என்கிறார். சுருக்கங்களில் புதைந்திருக்கும் அவருடைய கண்கள் நிலத்தையே வெறிக்கின்றன. சோளக் கதிர்களில் ஊடுருவும் சூரியனின் கதிர்கள் சிதறி மறைகின்றன. 


 நமக்கெல்லாம் நாலாம் தலைமுறையே நல்லா யோசிச்சா தான் நாக்குல சிக்கும். அந்த படத்த பாருங்க தலைமுறைக்கு மரம் வரைஞ்சு பாகம் குறிச்சு வச்சிருக்காங்க - மதாபர்வாசிகள்! 

பழமொழி இன்று

Related Posts Plugin for WordPress, Blogger...