தொகுப்புகள் - தற்போதைய இடுகைகள்

திருக்குறள் ஒலி(ஆடியோ) வடிவில்...

Friday 28 October, 2011

சிதம்பரம் நடராசர் கோயில்:

தமிழ்நாட்டிலுள்ள சிதம்பரம் எனும் ஊரில் அமைந்துள்ள நடராசர் கோயில் மிகச் சிறப்பு பெற்ற கோயிலாகும். இக்கோயில் பஞ்சப்பூத தலங்களில் ஒன்றாக உள்ளது.


கோயில் அமைப்பு:
ஏனைய இந்து ஆலயங்களில் லிங்க வடிவமாக இருக்கும் சிவபெருமான், நடனமாடும் நிலையில் இவ்வாலயத்தில் இருக்கிறார். நடனமாடும் நிலை இருப்பதால், பரதநாட்டியம் என்னும் நாட்டியக்கலைக்கு முதற்கடவுளாக நடராசரை வணங்குகின்றனர். இவ்வாலயத்தில் சிவகாமியம்மையும் அருள் செய்கிறார்.

நாற்பது ஏக்கர் பரப்பளவில், நான்கு திசைக்கென ஒரு கோபுரமாக நான்கு கோபுரங்களும், ஐந்து சபைகளும் உடையது இந்த ஆலயம். இவ்வாலயத்தில் உள்ள கிழக்கு கோபுரத்தில் நூற்றியெட்டு பரதநாட்டிய நிலைகளில் உள்ள சிற்பங்களை காணமுடியும். மேலும் இங்கு மூலவர் சிலை இருக்கும், இடம் கனக சபை என்று அழைக்கப்படுகிறது. இந்த சபை, பராந்தக சோழ மன்னனால் பொற்கூரை வேயப்பட்டு கனக சபை என்ற பெயர் பெற்றது.

சைவப்பெரியோர்களான நாயன்மார்கள் பாடிய தேவாரத்தில் சிதம்பரம் பற்றி கூறப்பட்டுள்ளதாலும், நாயன்மார்கள் நால்வரும் இங்கு வந்து பாடியதாலும் இது பாடல் பெற்ற தலம் என்று அழைக்கப்படுகின்றது. மேலும் பஞ்சபூதங்களில் ஒன்று எனக்கூறப்படும் ஆகாசம் வடிவில், சிவன் இருக்கிறார் என்பதை குறிப்பால் உணர்த்தும் வகையில் சிதம்பர ரகசியம் அமைக்கப்பட்டுள்ளது. இரத்தினத்தால் செய்யப்பட்ட நடராசர் விக்கிரகமும், ஆதிசங்கரர் அளித்த ஸ்படிக லிங்கமும், இன்றும் சிதம்பர ஆலயத்தில் பூஜித்து வரப்படுகிறது.

வைணவக் கடவுளான திருமால் இங்கு திருச்சித்திரக்கூடம் என்ற சபையில், நடராசரின் கனகசபைக்கு வெகு அண்மையில் இங்கு பிரதிட்டை செய்யப்பட்டுள்ளார். நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் திருச்சித்திரக்கூடம் பற்றி குறிப்பு உள்ளது.

இவ்வாலயத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் எனப்படும் ஆயிரம் தூண்கள் கொண்ட மண்டபம், சிற்பக்கலைக்கும், கட்டடக் கலைக்கும் பெயர் பெற்றது. இதை நிபுணர்கள் கட்டடக்கலையின் அற்புதம் என்று புகழ்கின்றனர்.
சைவ சமயத்தவர்களுக்கு கோயில் என்பது சிதம்பரம் நடராசர் கோயிலையே குறிக்கும். அந்தளவுக்கு சைவமும் சிதம்பரமும் பிணைந்தவை. பெரியகோவில் என்றும் சிலர் அழைக்கின்றார்கள்.

பெரும்பற்றப்புலியூர்:
சிதம்பரத்துக்குப் பெரும்பற்றப்புலியூர் என்று பெயர். புலிக்கால் முனிவராகிய வியாக்கிரபாதர் பூசை பண்ணியதால் அதற்குப் புலியூர் என்று பெயர். அந்தக் கோயிலுக்குச் சிதம்பரம் என்று பெயர். “சித் - ஞானம்”, “அம்பரம் - ஆகாசம்”. சித் + அம்பரம் - சிதம்பரம். காலப்போக்கில் அந்த ஊர் பேர் மறைந்து கோயில் பெயரே ஊரின் பெயராக மாறிவிட்டது.

நாட்டியம்:
நடனக்கலைகளின் தந்தையான சிவபெருமானின் நடனமாடும் தோற்றம் நடரானராசன் எனப்படுகிறது. இது மருவி நடராசன் எனவும் அழைக்கப்படுகிறது. சிவபெருமானில் பலவகையான நடனங்களில் இத்தலத்தில் ஆனந்த தாண்டவம் நிகழ்கின்றது.

சிதம்பரம் கோவிலில், நாட்டியாஞ்சலி என்ற நாட்டிய விழா ஒவ்வொரு வருடமும் நடைபெறுகிறது. இங்கு உலகில் பல்வேறு இடங்களில் நாட்டியம் பயிலும் கலைஞர்கள், தங்களுடைய நாட்டியத்தை அர்ப்பணமாக வழங்குகின்றனர். கலைஞர்கள் இங்கு வந்து நாட்டியார்ப்பணம் செய்வதை ஒரு பெருமையாக கருதுகின்றனர்.

கல்வெட்டுகள்:
பக்தி இலக்கியத்திலும், சங்க இலக்கியத்திலும் தில்லை சிவனைப் பற்றி பாடப்பெற்றுள்ளது. சோழ மன்னர்கள் பலர், இந்த ஆலயத்திற்கு பணி புரிந்துள்ளனர், இங்குள்ள ஆலயத்தில் உள்ள கல்வெட்டுகளிலிருந்தும், பொற்கூரையினாலும் நாம் அறிந்துகொள்ள முடியும். சோழர்களுக்குப்பின் பாண்டிய மன்னர்களும், கிருஷ்ண தேவராயரும் வழிப்பட்டதாகவும் பணிகள் பலபுரிந்ததாகவும் கல்வெட்டுகளில் உள்ளது.
நன்றி: விக்கிப்பீடியா

பழமொழி இன்று

Related Posts Plugin for WordPress, Blogger...