தொகுப்புகள் - தற்போதைய இடுகைகள்

திருக்குறள் ஒலி(ஆடியோ) வடிவில்...

Sunday, 28 September, 2014

காய்கறிகளும் அதன் பயன்களும்:

உடலுக்கு நன்மை பயக்கும் காய்கறிகள், கனிகள், தானியங்களை உணவில் சேர்த்துக் கொண்டால் இது போன்ற நோய்கள் வராமல் பார்த்துக்கொள்ளலாம். 


அவற்றில் சிலவற்றை பார்ப்போம்:

1) வாழைப்பூ: இதில் இரும்புச்சத்து, போலிக் அமிலம், வைட்டமின் ஏ, பி, சி சத்துக்கள் நிறைந்துள்ளன. இரத்தச் சோகையை வராமல் தடுத்து உடலுக்கு தெம்பையும் புத்துணர்வையும் தரவல்லது.

2) வாழைத்தண்டு: இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி, சி நிறைந்துள்ளது. இரத்தத்தை சுத்தப்படுத்தும். இரத்தத்தில் உள்ள தேவையற்ற அசுத்த நீரை பிரித்தெடுக்கும். சிறுநீரகத்தின் செயல்பாடுகளை சீராக்கி சிறுநீரக கல் அடைப்பை தடுக்கும்.

3) வாழைக்காய்: இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி, சி, சத்துக்கள் அதிகம் உள்ளது. வாயுவைத் தூண்டும் குணமுள்ளதால் இதை சமைக்கும்போது அதிகளவில் பூண்டு சேர்த்துக்கொள்வது நல்லது. மலச்சிக்கல் தீர்க்கும்.

4) பாகற்காய்: வைட்டமின் ஏ, பி, சி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. நன்கு பசியைத் தூண்டும். உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.

5) சேப்பங்கிழங்கு: கால்சியம், பாஸ்பரஸ் அதிகம் நிறைந்துள்ளது. இவை எலும்புகளையும், பற்களையும் உறுதிப்படுத்தும்.

6) பீட்ரூட்: கால்சியம், சோடியம், பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. மலச்சிக்கலைப் போக்கும், இரத்த சோகையை சரிபடுத்தும்.

7) வெண்டைக்காய்: போலிக் அமிலம், கால்சியம், பாஸ்பரஸ் நிறைந்துள்ளன. மூளை வளர்ச்சியைத் தூண்டும். நன்கு பசியை உண்டாக்கும். மலச்சிக்கலைப் போக்கும்.

8) கோவைக்காய்: வைட்டமின் ஏ, கால்சியம், போலிக் அமிலம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துக்கள் நிறைந்தள்ளன. வயிற்றுப்புண், வாய்ப்புண், மூல நோயின் தாக்குதல் போன்றவற்றை நீக்கும்.

9) முருங்கைக் காய்: வைட்டமின் ஏ, பி, சி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து நிறைந்துள்ளது. பெண்களுக்கு மாதவிலக்கின்போது உண்டாகும் அதிக உதிரப்போக்கைத் தடுக்கும். விந்து உற்பத்தியைப் பெருக்கும்.

10) சுண்டைக்காய்: புரதம், கால்சியம், இரும்புச்சத்து, கணிசமாக உள்ளது. உணவில் சுண்டைக்காய் சேர்த்து வந்தால் வயிற்றுப் புழுக்களை கொல்லும். உடல் வளர்ச்சியைத் தூண்டும்.

11) சுரைக்காய்: புரதம், கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி, நிறைந்துள்ளது. இவை உடல் சோர்வை நீக்கி, உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.

12) குடைமிளகாய்: வைட்டமின் ஏ, பி,சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கணிசமாக உள்ளது. அஜீரணக் கோளாறை நீக்கி செரிமான சக்தியை தூண்டும்.

13) சௌசௌ: கால்சியம், வைட்டமின் சி, சத்துக்கள் உள்ளன. எலும்பு, பற்களுக்கு உறுதியைக் கொடுக்கும்.

14) அவரைக்காய்: புரதம், நார்ச்சத்து மிகுந்துள்ளது. இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தேகத்தை பலப்படுத்துகிறது. மலச்சிக்கலைப் போக்குகிறது.

15) காரட்: உடலுக்கு உறுதியைக் கொடுக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

16) கொத்தவரங்காய்: இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, பி, சி நிறைந்துள்ளது. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

17) கத்தரி பிஞ்சு: கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. செரிமான சக்தியை தூண்டி நன்கு பசியை உண்டாக்கும்.

நன்றி: இணையம்

Monday, 8 September, 2014

அசோலா வளர்ப்பு முறை

அசோலா பெரணி வகையைச் சார்ந்த நீரில் மிதக்கும் தாவரம். பெரும்பாலும் பச்சை அல்லது இலேசான பழுப்பு நிறத்தில் காணப்படும். இதனை மூக்குத்திச் செடி அல்லது கம்மல் செடி என்றும் அழைப்பர். இதில் புரதச்சத்து 25-35%, தாதுக்கள் 10-12% மற்றும் 7-10% அமினோ அமிலம் கார்போஹைட்ரேட் எண்ணெய் சத்துக்கள்.

தேவையான பொருட்கள்:


(6’X3’, தினம் 500கி-1 கிலோ உற்பத்தி செய்ய போதுமானது)
1.    செங்கல்                       -           30-40 கற்கள்
2.    சில்பாலின் பாய்          -           2.5 மீ நீளம், 1.5மீ அகலம் (அ) 6’X3’
3.    செம்மண்                     -           30 கிலோ
4.    புதிய சாணம்              -           30 கிலோ
5.    சூப்பர் பாஸ்பேட்        -           30 கிராம் (அ)
அசோஃபெர்ட்             -           20 கிராம்
6.    தண்ணீர்                      -           10 செ.மீ. உயரம் (சராசரியாக 6-9 குடம்)
7.    அசோலா விதை          -           300-500 கிராம்
8.    யூரியா சாக்கு              -           தேவையான எண்ணிக்கை (6’X3’ ச.அடியை நிரப்ப)


அசோலா வளர்ப்பு முறை:இடத்தைத் தயார் செய்தல்:


1.    மர நிழலில் (நேரடி சூரிய ஒளி ஒரு நாளைக்கு 3 மணி நேரத்திற்கு மேல் இருக்கக்கூடாது) இருக்குமாறு தேர்வு செய்ய வேண்டும்.
2.    இடத்தின் அளவு 6’X3’ இருக்க வேண்டும்.
3.    புல் பூண்டுகளை அகற்றி இடத்தை சுத்தம் செய்ய வேண்டும்.
4.    இடம் குண்டும் குழியுமாக இல்லாமல் சம தளமாக்க வேண்டும்.
5.    புல் பூண்டுகள் வளருவதை தடுக்க யூரியா சாக்கினை  பரப்பவும்.

செய்முறை:


1.    செங்கலை குறுக்கு வாட்டில் தயார் செய்யப்பட்ட இடத்தை சுற்றிலும் வைக்க வேண்டும்.
2.    அதன் மேல் சில்பாலின் பாயை பரப்பி விட வேண்டும்.
3.    சில்பாலின் பாயின் மீது 10-15 கிலோ செம்மண்ணை சம அளவில் பரப்பி விட வேண்டும்.
4.    தண்ணீரின் அளவு 10 செ.மீ உயரம் வரும் வரை சுமார் 6-9 குடம் ஊற்ற வேண்டும். ஊற்றுவது குடிநீராக இருக்க வேண்டும்.
5.    புதிய சாணம் 2 கிலோ மற்றும் 20 கி அசோஃபெர்ட் (அ) 30 கி சூப்பர் பாஸ்பேட் 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
6.    500-1000 கிராம் சுத்தமான அசோலா விதைகளை போட்டு அதன் மேல் லேசாக தண்ணீர் தெளிக்கவும்.

வளர்ச்சி:


1.    விதைத்த 3 நாட்களில் எடை மூன்று மடங்காக பெருகும்.
2.    பசுந்தீவனம் 15 நாட்களில் நல்ல வளர்ச்சி அடைந்து அறுவடைக்கு தயாராக இருக்கும்.
3.    15 நாட்கள் கழித்து நாள் ஒன்றுக்கு 500 கிராமிலிருந்து 1 கிலோ வரை அறுவடை செய்யலாம்.

பராமரிப்பு:


1.    தினந்தோறும் குழியிலுள்ள அசோலாவினை கலக்கி விட வேண்டும்.
2.    தண்ணீன் அளவு 10 செ.மீ. க்குக் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
3.    5 நாட்களுக்கு ஒரு முறை 2 கிலோ புதிய சாணம் மற்றும் 20கிராம்  அசோஃபெர்ட்  (அ) 10 கிராம் ( ஒரு தீப்பெட்டி அளவு) சூப்பர் பாஸ்பேட் தண்ணீரில் கலந்து ஊற்ற வேண்டும்.
4.    10 நாட்களுக்கு ஒரு முறை மூன்றில் ஒரு பங்கு தண்ணீரை வெளியேற்ற வேண்டும். பதிலாக சுத்தமான தண்ணீரை ஊற்ற வேண்டும்.
5.    மாதம் ஒரு முறை மூன்றில் ஒரு பங்கு மண்ணை வெளியேற்ற வேண்டும். பிறகு சுத்தமான சலித்த செம்மண்ணை இட வேண்டும்.
6.    6 மாதத்திற்கு ஒரு முறை அசோலா விதைகளை தவிர அனைத்து இடுபொருட்களையும் வெளியேற்றி புதியதாக இட வேண்டும்.

தீவனம் அளிக்கும் முறை:


1.    தினமும் 500கிராம்- 1 கிலோ அசோலாவை எடுத்து நீரில் அலசிக்கொள்ள வேண்டும்.
2.    பச்சையாகவோ அல்லது பதப்படுத்தியோ அல்லது அடர் தீவனத்துடன் கலந்தும் கொடுக்கலாம்.
3.    உணவு உப்புடன் சேர்த்தும் அளிக்கலாம்.
4.    வைக்கோலுடன் சேர்த்தும் அளிக்கலாம்.

பயன்கள்:


1.    1 கிலோ அசோலா 1 கிலோ புண்ணாக்கிற்கு சமம்.
2.    அசோலாவை உட்கொள்வதால் பால் உற்பத்தி 15-20% அதிகரிக்கும்.
3.    பாலில் கொழுப்பு மற்றும் கொழுப்பு அல்லாத சத்துக்கள் அதிகரிக்கிறது.
4.    கோழிக்கும், வாத்திற்கும் தீவனமாக பயன்படுத்தலாம். அதிக எடை கிடைக்கும்.
5.    உணவு உப்புடன் சேர்த்து பன்றிகளுக்கு அளித்தால் பன்றியின் எடை கூடுவதுடன் இறைச்சி தன்மையும் நன்றாக இருக்கும்.
6.    முயல்கள் அசோலாவை விரும்பி உண்ணும்.
7.    அசோலா வளர்க்கும் இடத்தில் கொசுத் தொல்லை இருக்காது.

வளர்ச்சியை பாதிக்கும் காரணிகள்:

1.    தண்ணீர்:
அசோலாவனது தண்ணீர் ஊற்றி வறண்டுவிட்டால் உடனே இறந்து விடுகிறது.

2.    ஈரப்பதம்:
காற்றின் ஈரப்பதம் 85-90% இருக்கும்போது அசோலா நன்கு வளர்கிறது. ஈரப்பதம் 60%ற்கு குறையும்போது வறண்டு இறந்துவிடுகின்றது.

3.    சூரிய ஒளி:
கோடைக் காலங்களில் பகல் நேரங்களிலுள்ள அதிக சூரிய ஒளி அசோலாவை பழுப்பு நிறமாக மாற்றிவிடுகின்றது.

4.    காற்று:
வேகமாக வீசும் காற்றானது பாத்திகளிலுள்ள அசோலாவை ஒரு பக்கமாகக் கொண்டு சேர்த்துவிடும். இதனால் அசோலாவின் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படுகிறது.

5.    மண்ணின் கார அமிலத் தன்மை:
காரத் தன்மையுள்ள மண்ணில் அசோலாவின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. நுண்ணூட்டச் சத்துக்களுக்கு ஏற்ப அசோலாவின் வளர்ச்சி மாறுபடுகின்றது.

Wednesday, 3 September, 2014

செயல்படத் தொடங்கியது நாளந்தா பல்கலைக்கழகம்!மறுநிர்மாணம் செய்யப்பட்ட உலகப் புகழ்பெற்ற நாளந்தா பல்கலைக்கழகம், செப்டம்பர் 1ம் தேதி தனது முதல் வகுப்பறை செயல்பாட்டைத் துவக்கியது. தற்போதைக்கு, ஸ்கூல் ஆப் எகாலஜி அன்ட் என்விரன்மென்டல் ஸ்டடீஸ் மற்றும் ஸ்கூல் ஆப் ஹிஸ்டாரிகல் ஸ்டடீஸ் ஆகிய துறைகளில், சாதாரண முறையில் வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளன.

மேலும், இப்போது, பல்கலை வளாகத்தில் 15 மாணவர்களும், 11 ஆசிரியர்களும் உள்ளனர் என்று நாளந்தா பல்கலை துணைவேந்தர் கோபா சபர்வால் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது: தொடக்கத்தில் சாதாரண முறையில் வகுப்புகள் துவக்கப்படுவதற்கு காரணம், ஆசிரியர்களும், மாணவர்களும் புதிய சூழலில் பழகிக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். இப்பல்கலைக்கு, மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், வரும் செப்டம்பர் 14ம் தேதி வருகைத்தர உள்ளார்.

அப்போது பெரியளவிலான நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அந்த சமயத்தில் பல்கலையில் அனைத்து அம்சங்களும் ஒழுங்குபட்டிருக்கும் மற்றும் மீடியா கவனமும் எங்கள் மீது அதிகரித்திருக்கும்.

ஆகஸ்ட் 31ம் தேதி, மாணவர்களின் 3 நாள் ஓரியன்டேஷன் நிகழ்ச்சியை பல்கலைக்கழகம் நிறைவு செய்தது. உலகின் 40 நாடுகளிலிருந்து 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள், பல்வேறு பாடப்பிரிவுகளில், சேர்க்கைக்காக இப்பல்கலைக்கு விண்ணப்பித்தனர். ஆனால், அவர்களில், 15 பேர் மட்டுமே (ஜப்பான் மற்றும் பூடானிலிருந்து தலா ஒருவர்) தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

இப்பல்கலை வளாகம் அமைந்த ராஜ்கிர் என்ற இடம், பீகாரில் அமைந்துள்ள புத்தகயா என்ற பெளத்த புனித ஸ்தலத்திற்கு அடுத்து, இரண்டாவது பெளத்த மத முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். இப்பல்கலைக்கு, சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகள் பல்வேறான நிதியுதவியை அளித்துள்ளன மற்றும் அளிக்கவுள்ளன.

இதோடு சேர்த்து, இந்திய அரசாங்கம், 10 ஆண்டு காலகட்டத்திற்கு, ரூ.2,700 கோடியை ஒதுக்கியுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

Monday, 1 September, 2014

தீபாவளித் திருநாள் கவிதைப் போட்டி-2014: 2.தனிக்கவிதை - உழைப்பு!

 

காட்டைத் திருத்தி கழனிதந்தது உழைப்பு
நாட்டை திருத்தி நம்பிக்கைதந்தது உழைப்பு

ஏட்டில் படித்ததை கண்முன்தந்தது உழைப்பு
பாட்டில் படித்தாலும் உவகைதந்தது உழைப்பு

எளிமை வென்றிட வலிமைதந்தது உழைப்பு
வலிமை தொடர்ந்திட வழியும்தந்தது உழைப்பு

வாழ்வை போற்றிட வளமைதந்தது உழைப்பு
தாழ்வை மறந்திட திறமைதந்தது உழைப்பு

உயர்வாய் வாழ்ந்திட கற்றுத்தந்தது உழைப்பு
அயர்வாய் இருப்பின் உரமாய்இருந்தது உழைப்பு

மாற்றம் பெறவே விதையைதந்தது உழைப்பு
ஏற்றம் காணவே ஏணியைதந்தது உழைப்பு

நெல்லின் மணியாய் நிறைவைத்தந்தது உழைப்பு
சொல்லின் அழகாய் பெருமைதந்தது உழைப்பு

உயிர்கள் பருகிட உணவைதந்தது உழைப்பு
உண்மை உணர்ந்திட உரிமைதந்தது உழைப்பு

மண்ணை போற்றிட கற்றுத்தந்தது உழைப்பு
விண்ணை பெற்றிட வெற்றிதந்தது உழைப்பு 

வெற்றிக் கனியமுதை  பெற்றுத்தந்தது உழைப்பு
சுற்றி வந்தோருக்கும் சுறுசுறுப்புதந்தது உழைப்பு

வளத்தை பெருக்கிடும் நலத்தைதந்தது உழைப்பு
பலத்தை பெருக்கிடும் பாங்கைதந்தது உழைப்பு

பொறுப்பாய் நடந்திட ஊக்கம்தந்தது உழைப்பு
சிறப்பாய் வாழ்ந்திட முதலும்தந்தது உழைப்பு!

இப்படைப்பானது தீபாவளித் திருநாளை முன்னிட்டு திரு.ரூபன் & திரு.யாழ்பாவாணன் இணைந்து நடத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014  க்காக எழுதி பகிரப்பட்டுள்ளது.


நன்றி!

என்றும் அன்புடன்,
நடராஜன் வி.

தீபாவளித் திருநாள் கவிதைப் போட்டி-2014: 1.படக்கவிதை

 

மாலையிட காத்திருக்கும் மங்கையிவள் தானோ
மங்கையென பூத்திருக்கும் நங்கையினம் தானோ
சிறுவயது தோழனாய் சிரித்து மகிழ்ந்தவன் தானோ
சிறுதும்பி பிடித்தே சிந்தைக் கவர்ந்தவன் தானோ
பள்ளிப்பருவத்தே படித்து உதவியவன் தானோ
படித்தே உயர்ந்திட பாதை வகுத்தவன் தானோ

 
சிந்தை நினைவினில் சேர்ந்தே இருப்பவன் தானோ
எந்தை மனதிலும் ஏற்றம் கொண்டவன் தானோ
எளிய பண்பினால் உள்ளம் கவர்ந்தவன் தானோ
உயர்ந்த குணத்தினால் உலகம் போற்றுபவன் தானோ
நாட்டிற்கு சேவை ஆற்றும் நற்கனவான் தானோ
எல்லையை வல்லமையால் பாதுகாப்பவன் தானோ

 
எதிரியை வீரத்தினால் தோற்க செய்தவன் தானோ 
விடுமுறை நாள்தனிலே விரைந்திடுவான் தானோ
பூமாலை தந்தே  என்மனம் மகிழ்விப்பான் தானோ
பூச்சொரிந்து காத்திருக்கும் பூமகள் இவள் தானோ
காத்து நினைந்(த்)திருக்கும் நிலை அறிவான் தானோ
மங்கையிவள் ஏக்கம் முற்றும் உணர்ந்தவன் தானோ 


மாலை அணிவித்தே உள்ளம் கவர்வான் தானோ
காலத்தின் மதிப்பதனை காட்டி தந்தவன் தானோ
திங்கள் முடியும்முன் கண்ணன் வருவான் தானோ
குறித்த நாளினிலே தங்கத்தாலி தருவான் தானோ
இல்லறம் இனித்திட இணைந்தே  இருப்பான் தானோ
நல்லறம் போற்றிட பொது-நலம் விழைவான் தானோ 

இப்படைப்பானது தீபாவளித் திருநாளை முன்னிட்டு திரு.ரூபன் & திரு.யாழ்பாவாணன் இணைந்து நடத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014  க்காக எழுதி பகிரப்பட்டுள்ளது.


நன்றி!

என்றும் அன்புடன்,
நடராஜன் வி. 

பழமொழி இன்று

Related Posts Plugin for WordPress, Blogger...