தமிழக அரசு பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அனைவருக்கும் இலவசமாக லேப்டாப்(மடிக்கணினி)வழங்கி வருகிறது. மாணவர்கள் கையில் இருக்கும் மடிக்கணினிகள் கல்வி வளர்ச்சிக்காக மட்டுமே பயன்பட வேண்டும் என்பதே நம் கனவு. இந்தக்கனவு மெய்ப்பட்டால், மாணவர்களின் அறிவும்,படிப்பிலுள்ள ஈடுபாடும் மேலும் வளர மடிக்கணினிகள் காரணமாக இருக்கும் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை. நாளை மடிக்கணினிகளால் மாணவர்கள் அதிக மதிப்பெண்களைப் பெற்றார்கள், ஈடுபாட்டோடு படித்தார்கள் என்ற செய்தியைத் தான் நாம் கேள்விப்பட வேண்டும். ஆகவே பாதுகாப்பான மடிக்கணினிகளை வழங்கும் வரையிலும் அதைப்பற்றி வலியுறுத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். பத்து பேரில் ஒருத்தராவது கெட்டுப்போகாமல் இருக்க வேண்டுமே என்ற நல்லெண்ணத்தில். இன்றைய மாணவர்கள் மிகவும் புத்திசாலிகள், அவர்களின் அறிவும், திறமையும் மேலும் வளர்ந்து நல்ல பாதையை வகுத்துக்கொள்ளவே தமிழக அரசு மடிக்கணினிகளை வழங்குகிறது. ஆனால் மிக மோசமான அதன் மறுபக்க விளைவுகளை பற்றி பலர் யோசிக்கவில்லை. இந்த பதிவு மக்களை யோசிக்க வைக்கவேண்டும் என்ற உந்துதலில் எழுதலானேன். மடிக்கணினி மூலம் பல விதங்களில் மாணவர்கள் தவறான வழிகளில் சென்று விட அதிக வாய்ப்புள்ளது. வருங்கால இந்தியா இளைஞர்களின் கையில் தான் இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
இளைஞர்களைக் கெடுக்கும் முக்கிய ஆயுதங்களான போதைப்பொருட்கள், ஆபாசம் இவ்விரண்டையும் முழுவதும் தடுக்க முடியாவிட்டாலும் ஓரளவாவது தடை செய்வதன் மூலம் ஏற்படும் பாதிப்பை குறைக்க முடியும். தொலைக்காட்சி மூலம் ஆபாச நிகழ்ச்சிகளும் இணையத்தில் வாயிலாக ஆபாச படம் பார்ப்பவர்களின் எண்ணிகையும் பத்து மடங்காக அதிகரித்துள்ளது. மேலும் அதிகரிக்கக்கூடும் என அதிகாரப்பூரவமான தகவல்கள் தெரிவிக்கின்றன். இனி பள்ளி மாணவர்கள் கையிலும், கல்லூரி மாணவர்கள் கையிலும் மடிக்கணினி கிடைத்தால் எந்த அளவிற்கு மாணவர்களின் அறிவு வளருமோ அதே அளவிற்கு தவறு நடப்பதும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. உதாரணமாக நாம் கூகிள் தளத்தில் சென்று ஏதாவது ஒரு தமிழ் வார்த்தையை தட்டச்சு செய்தால் அது ஆபாச வார்த்தையை நமக்குக் காட்டுகிறது. அதைச் சொடுக்கி அவர்கள் தவறான தளத்திற்கு செல்லும் வாய்ப்பு அதிகமதிகம்.
அதற்காக இண்டெர்நெட் வேண்டாம் என்றால் அது முட்டாள்தனமான முடிவாகத் தான் இருக்கமுடியும். இதைத்தடுக்க அரசிடமாவது சொல்லி இலவசமாக கொடுக்கும் மடிக்கணினியில் சில மாற்றங்கள் செய்வதன் மூலமும் குற்றங்கள் செய்யக்கூடிய சுழ்நிலையை தவிர்ப்பதன் மூலமும் பெருமளவு குற்றங்கள் நடைபெறாமல் இருக்கவும் மிக பாதுகாப்பான லேப்டாப்பினை மாணவர்களுக்கு தர வழி வகுக்கும். ஆபாசத் தளங்கள் எக்காரணத்தை கொண்டும் அரசு கொடுக்கும் லேப்டாப்பில் தெரியக்கூடாது. இதற்காக கணினியுடன் கூடிய ஆபாசத்தள தடுப்பு மென்பொருள் சேர்ந்தே அமைந்திருக்க வேண்டும். (Uninstall,Delete செய்ய முடியாத வண்ணமிருக்க வேண்டும்). சமூக வலைத் தளங்களான பேஸ்புக், டிவிட்டர், ஆர்குட் போன்ற வலைத் தளங்களை பயன்படுத்த முடியாத வண்ணமிருக்க வேண்டும். வைரஸ் பாதுகாப்பு மென்பொருள் அவ்வப்போது தானாகவே அப்டேட் செய்யும் வண்ணம் அமைந்திருக்க வேண்டும். Hacking Software, மற்றும் போலியான மென்பொருட்கள் கணினியில் இன்ஸ்டால் செய்ய முடியாதபடி அமைந்திருக்க வேண்டும். கூகிள் தளம் இல்லை என்றால் இணையமே இல்லை என்று சொல்லும் நமக்கு சீனா ஒரு முன் உதாரணம் தான். அந்த நாட்டில் இளைஞர்கள் இணையத் தளம் மூலம் எந்த வழியிலும் தவறாக சென்று விடக்கூடாது என்பதற்காக ஆபாசத் தளங்களைக் காட்டியதற்காக கூகிள், யூடியுப், பேஸ்புக் போன்ற சமுகத்தை சிரழிக்கும் வலைத்தளங்கள் சீனாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த பதிவின் முக்கியத்துவம் பற்றி நம்மனைவருக்கும் தெரிந்திருக்கும்.
அரசு கொடுக்க இருக்கும் இலவச மடிக்கணினிகளில் இங்கு குறிப்பிட்டிருக்கும் பாதுகாப்பு அம்சம் இருந்தால் மட்டுமே மாணவர்கள் தவறான வழிகளில் செல்வது பெருமளவு குறைக்க வாய்ப்பிருக்கிறது. இந்தப்பதிவு அரசின் கவனத்திற்கு செல்லுமா என்று தெரியவில்லை. முடிந்த வரை இந்தப்பதிவை அரசு அதிகாரிகளிடமும் நம் சமுதாய நண்பர்களிடமும் கொண்டு சேர்ப்பது நம் ஒவ்வொருவரின் கடமை. ஒரு விபத்து நடந்து மக்களை காப்பாற்றுகிறவர்களை விட,விபத்தே நடக்காமல் பாதுகாக்கப்படவேண்டும் என்ற முன்னெச்சரிக்கை யோசனையை இங்கு வழங்கியிருக்கிறேன். ஆபத்தைத் தேடி போகும் குழந்தைகளைப்பற்றி நாம் கூறவில்லை. பல மாணவர்கள் விபரம் தெரியாமல் சென்றுவிடக்கூடாதே என்பதற்காக தான். இது வெறுமனே படித்துவிட்டு,விட்டுவிட வேண்டிய பதிவல்ல, யாரோ செய்வார்கள், யாரோ பார்த்துக்கொள்வார்கள், என்றில்லாமல் இத்தகவலை இளைய தலைமுறைகள் நலனில் அக்கறை கொண்ட நம் ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும்.
வருங்கால இந்தியாவின் நலன் கருதியும் நம் சமுக நலன் கருதியும் இப்பதிவை நம்மிடமுள்ள சமூக தளங்களிலும் வெளியிட்டு,அரசு அதிகாரிகளின் பார்வைக்கு கொண்டு சென்று அரசின் கதவுகளை தட்டுவதன் மூலம் இலவச லேப்டாப் கொடுக்கும் அரசு மிக பாதுகாப்போடு கூடிய லேப்டாப்பினை மாணவர்களுக்கு தர வழி வகை செய்யப்படவேண்டும். இப்போதைய மாணவர்கள் பல பல மடங்கு தொழில்நுட்ப துறையில் கரை கடந்தவர்கள். “திருடனாய்ப் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது” என்ற வரிகள் தான் இங்கும் உண்மையாகிறது. மேலும் இப்பதிவு அரசு இலவசமாக தரும் மடிக்கணினி(லேப்டாப்)க்கு மட்டுமன்று ஒவ்வொரு மாணவர்களுடைய பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்கு தங்கள் சொந்த செலவில் வாங்கி கொடுத்தாலும் இத்தனை கட்டுப்பாடுகள் இருக்கிறதா என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
2 comments:
அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு.
பகிர்விற்கு நன்றி நண்பரே!
இதையும் படிக்கலாமே:
"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?(3) எது சிறந்தது? (நிறைவுப் பகுதி)"
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
Post a Comment
இந்த "தொகுப்புகள்" வலைப்பூவின் பதிவு குறித்து உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் . மேலும் பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி!